முத்தையா முரளிதரன் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக பேசியுள்ளாரா? | ஒரு தொகுப்பு

இலங்கையின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ள ” 800 ” திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகிறது.

Advertisement

முத்தையா முரளிதரனின் அரசியல் நிலைப்பாடு காரணமாக 800 திரைப்படத்திற்கு எதிர்ப்பு உருவாகி உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் முத்தையா முரளிதரனின் சர்ச்சை கருத்துக்களை எங்கே, எப்போது, கூறினார் எனப் பார்ப்போம்.

இலங்கையை ஆள ராஜபக்சேவே சரியான ஆள் : 

2019 நவம்பர் மாதம் இலங்கை வடக்கு மாகாணத்தில் ஆளுநராக முரளிதரன் நியமிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியின் போது, ” உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சனை இருந்தால் பக்கத்து வீட்டுக்காரர்கர்களை தலையிட அனுமதிப்பீர்களா ? தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளவில்லை. ஜனாதிபதி ராஜபக்சேவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால், அவரே எங்கள் நாட்டை வழிநடத்த சரியான நபர். அவர் ஆட்சிக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாக எந்த முன்னேற்றமும் இல்லை. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து இருந்தது, எதுவும் மாறவில்லை ” எனக் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

2009 என் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆண்டு :

2019-ல் தேர்தல் சமயத்தில் தம் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டு முரளிதரன் தன் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆண்டு 2009 (வீடியோவில் 5.230 நிமிடத்தில்) என இலங்கைப் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட ஆண்டைக் குறிப்பிட்டது இன்றளவும் சர்ச்சையான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

2019-ல் எஸ்.எல்.பி.பி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சேவை ஆதரிக்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட வியத்மகா ஏற்பாடு செய்திருந்த மன்றத்தில் பங்கேற்ற முத்தையா முரளிதரன் பேசிய போது, ” நான் ஒரு தமிழ், நாங்கள் பயத்தில் வாழ்ந்தோம். நான் 1972-ல் பிறந்தேன். பின்னர் அரசாங்கம் மாறியது, வீடுகள் எரிக்கப்பட்டன. என் தந்தை கூட காயமடைந்தார். 1987/88 நேரங்களில் அரசாங்கம் மற்றும் எல்.டி.டி.ஈ உள்ளிட்ட இரண்டு தரப்பினரும் தவறு செய்தன. அவர்களுக்கு தேர்வு இருந்தது. ஆனால், இறுதியில் அப்பாவி மக்கள், தமிழர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் காயமடைந்தனர். 1997-98களில் பெலவட்டாவில் இருந்து நான் பயிற்சிக்கு செல்வது வழக்கம். ஆனால், ஒருபோதும் நாடாளுமன்ற சாலையில் செல்ல முடியவில்லை. எந்தநேரத்திலும் அரசியல்வாதிகள் மீது குண்டுகள் விழக்கூடும். நாங்கள் எப்போதும் புறவழிச்சாலைகளைப் பயன்படுத்தினோம். கொழும்பு மக்கள் பயத்துடன் வாழ்ந்து வந்தனர், தமிழர்களும் பயத்துடனே வாழ்ந்து வந்தோம். என் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஆண்டு 2009. இந்த நாட்டில் நாங்கள் எந்த பயமும் இல்லாமல் செல்ல முடிந்தது ” எனக் கூறி இருக்கிறார்.

பிரதமர் கேம்ரூன் தவறாக வழிநடத்தப்பட்டார் : 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி 20-30 தாய்மார்கள் கண்ணீர் விட்டு கூறுவதெல்லாம் உண்மையாகி விடாது, அவர்கள் பொய் சொல்லி உலக நாடுகளை ஏமாற்றுகிறார்கள் என முரளிதரன் கூறியதாக சமூக வலைதளங்களில் அவர் பேசும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

” 2013-ல் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் இலங்கை பயணம் மேற்கொண்டார். அங்கு 20 ஆண்டுகள் கடந்தும் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் இருக்கும் குடும்பங்களை சந்தித்துள்ளார். 2009-ல் முடிவடைந்த 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் விளைவுகளை இன்றளவும் தாங்கிவரும் தமிழ் மக்களுக்கான நிலைமைகளை மேம்படுத்துவதற்கு கேம்ரூன் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்துள்ளார். ஆனால், கேம்ரூனுக்கு இலங்கையின் தவறான காட்சி காண்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அவரை தவறாக வழிநடத்துவதாகவும் முத்தையா முரளிதரன் கூறியதாக ” 2013 நவம்பர் www.standard.co.uk எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

டேவிட் கேம்ரூன் குறித்து சேனல் 4 நியூஸிற்கு பேட்டி அளித்த முரளிதரன், ” இரு பக்கங்களைக் கொண்ட யுத்ததில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்கும் கூட விடை தெரியாது. அதேநேரத்தில், யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. அவர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். இதற்கு முன்பாக கேம்ரூன் யாழ்ப்பாணத்திற்கோ, இலங்கைக்கோ வந்தது இல்லை. அவர் சிறுவயதில் வந்தாரா எனத் தெரியவில்லை. என்ன நடந்தது, எது நடந்தது என அவருக்கு மற்றவர்களால் கூறப்பட்டுள்ளது. அதனால், அவர் யாழ்ப்பாணம் சென்று பார்க்க விரும்பி இருக்கலாம். 20-30 தாய்மார்கள் வந்து அழுவது, அது உண்மையா ?. உங்களுக்கும் தெரியாது. ஏனென்றால், அந்த மக்கள் கூட தவறாக வழிநடத்த முடியும். எனவே, இதுதான் உண்மை என அறிவது கடினம் ” எனக் கூறியுள்ளார்.

Links : 

Murali bowls a doosra for Gota – video 

Sri Lanka icon Murali – ‘Cameron has been misled’

“The offer for governor’s post in north province is a rumour ” : muttiah muralitharan  

Murali bowls a doosra for Gota

Cameron shrugs off Murali comments

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button