இந்து சமய அறநிலையத்துறையின் கவனக் குறைவால் 5 இளைஞர்கள் இறந்தார்களா ?

சென்னையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்த துயர சம்பவத்திற்கு, இத்திருவிழா முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்து சமய அறநிலையத் துறை நடத்தாததே காரணமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கொண்டு பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 5ம் தேதி தீர்த்தவாரி நிகழ்வும்  நடைபெற்றது. அன்றைய தினம் சாமி சிலை மூவரசம்பேட்டை பகுதியிலுள்ள குளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அர்ச்சகர்களுடன் சுமார் 20 தன்னார்வலர்களும் அக்குளத்தில் இறங்கியுள்ளனர். அதில் ஒருவர் தண்ணீரில் நீச்சல் தெரியாமல் தத்தளித்து மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற 4 பேர் முயற்சி செய்த போது அவர்களும் சேர்ந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

இவ்விபத்து குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீவிர தேடுதலுக்குப்  பிறகு 5 பேரின் உடலும் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் ஆய்வும் செய்தார். இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தலா ரூ.2 இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். 

Archive link 

இச்சம்பவம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது” எனப் பதிவிட்டார். 

Archive link 

அப்போதே இது தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் என யூடர்ன் ஆசிரியர் அயன் கார்த்திகேயன் அக்கோயிலின் இணையதளத்தில் உள்ள தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். அதில், அறங்காவலர் குழு மூலம் ஆகம விதிப்படி கோவிலில் நடைபெறும் பல்வேறு சமய நிகழ்வுகளுக்கு பொறுப்பு என பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும் அக்கோயிலின் பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே அக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் என அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கூறி வந்தனர். 

கோயில் நிர்வாக குழு : 

அதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாக குழுவின் செயலாளர் சுகுமார் என்பவரைத் தொடர்பு கொண்டு ‘தர்மலிங்கேஸ்வரர் கோயில் உங்களது அறங்காவலர் குழுவின் கீழ் வருகிறதா’ எனக் கேள்வி எழுப்பினோம். “அந்த குழுவில் நான் ஒரு உறுப்பினர் மட்டுமே” எனக் கூறியதுடன் மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டார். 

அதேபோல், இணை அமைப்பாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொண்டு பேசுகையில், கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதனைப் பற்றி வேறு எந்த தகவலும் தனக்குத் தெரியாது எனக் கூறினார். 

மேற்கொண்டு விபத்து நடந்த குளம் பற்றிய தகவலைத் தேடியதில், அது மூவரசம்பட்டு ஊராட்சிக்குச் சொந்தமானது. அக்குளத்திற்கு  2019-20ம் ஆண்டு ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தொகுதி நிதியிலிருந்து தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைத்துத் தந்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.

சட்டமன்றத்தில் அமைச்சர் விளக்கம் : 

இவ்விபத்து குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் (ஏப்ரல், 6) சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்தனர். 

அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில், “விபத்து நடந்த குளம் கோயில் குளம் அல்ல. அது பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த குளத்தில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் தீர்த்தவாரி வைபவம் நடந்து கொண்டு இருக்கிறது. 

இக்கோயிலை சர்வ மங்கல சேவா என்ற அறக்கட்டளை, 5 பேர் நிர்வாகிகளைக் கொண்டு நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி தொல்லியல் துறை அனுமதி, மண்டல குழு அனுமதி, இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்டக் குழுவான மாநிலக் குழுவின் அனுமதியில்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முற்பட்டார்கள். 

இதனால் 2022, செப்டம்பர் 6ம் தேதி அக்கோயிலைப் பக்த ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கின்ற செயல் அலுவலரைத் தக்காராக  இணை ஆணையர் நியமித்தார். இதனை எதிர்த்து கோயிலைச் சேர்ந்த டிரஸ்டினர் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை வருகின்ற மாதம் 12ம் தேதி நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை இவ்வளவு விளக்கமாகக் கூறுவதற்குக் காரணம், தானாக முன்வந்து ட்ரஸ்டினர் எடுத்துக் கொள்கிற பணிகளின் காரணமாக இப்படிப்பட்ட விபத்துக்கள் நடைபெறுகின்றது. அவர்கள் நடத்திய நிகழ்ச்சி குறித்து இந்து சமய அறநிலையத்துறைக்குத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இந்நேரத்தில், இவ்வளவு பெரிய இழப்பில் அதை ஒரு குற்றமாகச் சொல்ல விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார்.

மேற்கண்ட தகவல்களிலிருந்து தர்மலிங்கேஸ்வரர் கோயிலைத் தனியார் நிர்வாகக் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது . தீர்த்தவாரி நிகழ்வினையும் அவர்களே நடத்தியுள்ளனர். மேலும் இந்நிகழ்வு குறித்து முறையாக அறநிலையத்துறைக்குத் தெரியப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இக்கோயிலை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது என்பதையும், அதற்குக் கோயில் நிர்வாக குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

Link :

Kumbabhishegam Invitation

sri dharmalingeswarar koil committees

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader