நரிக்குறவர்களுக்கான இடஒதுக்கீடு: சட்டமாவதற்கு முன்பே யார் செய்ததென சண்டையா ?

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் என அழைக்கப்படுவோரைப் பழங்குடியினர் பட்டியலில்(எஸ்.டி) சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கோரிக்கை பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருந்து எழுந்து வருவதால், தற்போது அம்மக்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மீண்டும் சட்டத் திருத்த மசோதா கொண்டு வருவதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Twitter link 

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,நரிக்குறவர் மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டுமெனக் கழக அரசும், எம்.பி.க்களும் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு இசைந்துள்ளதை வரவேற்கிறேன். விளிம்புநிலையிலுள்ள அம்மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியைப் பெற்றுத் தருவதற்கான நீண்ட போராட்டத்தின் வெற்றி இது ” என திமுகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனத் தெரிவித்து இருந்தார். 

2022 மார்ச் மாதம், நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

Twitter link 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ” தமிழ்நாடு பாஜகவின் தொடர் முயற்சியாலும், நரிக்குறவர் மக்களின் நீண்ட கால கோரிக்கையையும் மனதில் கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்துள்ளார் நமது மாண்புமிகு பாரத பிரதமர் ” எனப் பதிவிட்டு இருந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக அண்ணாமலை விடுத்தக் கோரிக்கை மற்றும் முயற்சியால் பழங்குடியினர் பட்டியல் இணைப்பு சாத்தியமானதாகச் சமூக வலைதளங்களில் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். இப்படி நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க எடுக்கப்பட்ட முடிவிற்கு யார் காரணம் என்கிற அரசியல் வாதங்கள் திமுக மற்றும் பாஜக இடையே எழுந்துள்ளது.

வரலாறு என்ன சொல்கிறது ? 

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் என அழைக்கப்படும் மக்கள் கல்வி, சமுக மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். கடந்த பல தசாப்தங்களாகவே நரிக்குறவர் சமூகத்தை எம்.பி.சி பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கைகளும், சட்டப் போராட்டங்களும் நடைபெற்று வந்தன.

1965ம் ஆண்டு லோகூர் கமிட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர் அல்லது குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்து இருந்தது.

1980களில் தமிழ்நாடு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

Facebook link 

எனினும், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிறைவேறாமல் கோரிக்கையாகவே இருந்து வந்தது. அதை நிறைவேற்றுமாறு தமிழகத்தின் தரப்பில் 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி கருணாநிதி அவர்களும் மற்றும் ஆகஸ்ட் 27ம் தேதி ஜெயலலிதா அவர்களும் ஒன்றிய அரசுக்கு கடிதங்களை எழுதி உள்ளனர்.

இப்படி பல்வேறு கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு, 2013ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி காங்கிரஸ் ஆட்சியில் நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற்று அரசு மாறியதால் அந்த மசோதா காலாவதியானது.

2015ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாட்டில் இருந்து நரிக்குறவர் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்கு சென்று தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் சட்ட மசோதாவை மீண்டும் இயற்ற ஒன்றிய அரசிற்கு அழுத்தம் தருமாறு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பிக்களுக்கும் கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, 2015ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, நரிக்குறவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவை மீண்டும் கொண்டு வரும்படி வலியுறுத்திப் பேசி இருந்தார்.

மேலும், 2015ல் டிசம்பர் 9 ம் தேதி பாஜகவின் ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப் பரிந்துரைத்து பழங்குடியினர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

தற்போது போல், 2016 மே மாதம் பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிகுறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதாக இடம்பெற்று இருக்கிறது.

2016ல் ஒன்றிய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கு கலைஞர் கருணாநிதி, விஜயகாந்த் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர்.

ஆனால், 2016ல் பாஜக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்த மசோதாவும் காலாவதியானதாக மக்களவை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக ஆட்சியில் 6 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்த மசோதாவும் தற்போது போல் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது, ஆனால் அது காலாவதியாகி இருக்கிறது. தற்போது 2022ல் மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் பல மாநிலங்களில் விளிம்பு நிலையில் உள்ள சமூகத்தினரை சேர்க்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது.

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அரை நூற்றாண்டுக்கு மேலாக எழுந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு தரப்பில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும் குரல் எழுப்பி வந்துள்ளனர். ஆனால், தமிழக பாஜகவால் மட்டுமே இதுசாத்தியமானதாக பேசுவது கேலிக்குள்ளாகிறது.

இம்முறையும் நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவானது சட்டமாக ஏற்கப்பட்டு அரசாணை வெளியான பிறகே உறுதியாகும். 

அதற்கான முயற்சிகளில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஈடுபட வேண்டும். அதற்குள் சட்டத் திருத்த மசோதாவிற்கு அரசியல் சாதனை பெருமை சண்டைகள் அவசியமா எனச் சிந்தியுங்கள்..

Links : 

https://tribal.nic.in/writereaddata/AnnualReport/LokurCommitteeReport.pdf

Narikuravas seek inclusion in ST list

jayalalithaa-writes-to-pm-seeking-st-status-for-narikuravar-community

The Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Orders (Amendment) Bill, 2016

st-status-now-reality-long-road-ahead-narikuravars-and-kuruvikarans

Narikkoravar’s constitutional struggle for dignity and representation

http://loksabhaph.nic.in/legislation/billslapsed.aspx

Special Mentions | Dec 2, 2015

Include Narikuravars on ST list: Stalin to PM Modi

Please complete the required fields.




Back to top button
loader