This article is from Dec 11, 2020

நடராஜன் மீது ஏன் இந்த வன்மம்.. கண்ணாடி, டாட்டூ போட்டால் புகழ் தலைக்கனமா ?

சேலம் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் பந்து வீச்சாளராக  தன்னுடைய வெற்றியை பதித்து வருவதால் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்கள் தரப்பிலும் கவனத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறார். ஐ.பி.எல் போட்டியில் நன்றாக ஆடி இந்திய அணியில் எதிர்பாராத விதமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நல்ல ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.

நடராஜன் ஆடும் ஆட்டங்கள் குறித்தும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 20-20 ஓவர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்திய பிறகு தொலைக்காட்சிக்கு தமிழில் பேட்டி அளித்த காட்சி என சமூக வலைதளங்களில் நடராஜனுக்கு பாராட்டுகள், மீம்ஸ் குவிந்த வண்ணம் இருந்தன. மறுபுறம் தமிழ் ஊடகச் செய்திகளும் தங்களின் பங்கிற்கு செய்திகளை வெளியிட்டன.

தன் பிள்ளை இந்திய அணியில் விளையாடினாலும் இயல்பு மாறாமல் தன்னுடைய சில்லி சிக்கன் கடையை தொடர்ந்து நடத்தி வரும் நடராஜன் தாயார் குறித்த செய்தி என மக்கள் மத்தியில் வரவேற்புகள் உயர்ந்து கொண்டே சென்றன. அதேநேரம், நடராஜனுக்கு எதிராக சிலர் வன்மத்தையும் வெளியிடவே செய்கின்றனர். அரசியல், சாதி அடிப்படையில் என ஒரு கிரிக்கெட் வீரரின் மீது வன்மம் உருவாகி வருவதை பார்க்கவே முடிகிறது.

டிசம்பர் 10-ம் தேதி சிட்னி நகரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அப்புகைப்படங்களை வைத்து Asianet தமிழ் இணையதள செய்தியில், ” புகழ் போதை.. நிறைய காசு.. மொத்தமாக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன் ” எனத் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு உள்ளனர்.

அந்த செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் (Archive link) சமூக வலைதளங்களில் கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது. சர்ச்சையான பிறகு அத்தலைப்பை ” சிலாகிக்கும் தோற்றத்தில் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன்..! ” என மாற்றி வேறு செய்தியாக வெளியிட்டு உள்ளனர்.

Archive link 

அந்த செய்தியிலும் கூட, முந்தைய தலைப்பில் குறிப்பிட்டபடி எழுதி உள்ளனர். நடராஜன் கண்ணாடி, டாட்டூ குத்தி இருப்பது, ஆங்கிலம் தெரியாதவர் என்றெல்லாம் எதிர்மறையான கருத்தை மக்கள் கூறுவது வெளியிப்படுத்தி இருக்கிறார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலானவர்கள் டாட்டூ குத்துவது வழக்கம். ஒரு விளையாட்டு வீரருக்கு ஆங்கிலத்தை விட தன்னுடைய விளையாட்டில் இருக்கும் தனித்திறனே முக்கியம்.

இதேபோல், நடராஜன் தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படங்களுக்கு கீழே அவரின் நிறத்தை குறித்து விமர்சித்து பதிவிட்ட கமெண்ட் உடைய ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடராஜன் ட்விட்டர் பக்கத்தில் செய்யப்பட்ட அந்த ட்வீட் கமெண்ட் நீக்கப்பட்டு உள்ளது. @aravinth1107 எனும் ட்விட்டர் ஐடி-யைத் தேடிப் பார்க்கையில் அ.அரவிந்தன் எனும் பெயரில் இயங்கி வந்த ட்விட்டர் கணக்கை சங்கி என மாற்றி இருக்கிறார். அந்த ட்வீட் பக்கத்தின் ட்வீட் மற்றும் ரிப்ளையில் நடராஜன் ஐடி-யில் மற்றவர்களுடன் தகாத வார்த்தையில் வாதிட்ட பதிவுகள் இடம்பெற்று உள்ளன.

நடராஜன் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என அனைவருக்கும் தெரிந்தே. அப்படியான ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்து முன்னேறி தன் உழைப்பின் ஊடாக வந்த பணத்தில் கண்ணாடி அணிவதும், ஷூ அணிவதும், டாட்டூ குத்திக் கொள்வதும் ஏன் வசதியான வாழ்க்கைக்கு மாறுவதும் அவரின் சுய விருப்பம். அதைப் பார்த்து மகிழவில்லை என்றாலும், குறைந்தபட்சம் வன்மத்தையும், கேவலமான கருத்தையும் வெளியிடாமல் இருப்பது தான் மனித குணம்.

அதையும் மீறி, ஐயயோ இவன் வளந்துட்டானே என்ற வெறும் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக தான் இதுபோன்றவற்றை பார்க்க முடியும். இவனெல்லாம் முன்னேறி விட்டானா  என்கிற நோக்கில் பார்த்தால், அது வீணான வன்மத்தையே சமூகத்தில் விதைக்கும். இதுபோன்ற எளிய மனிதர்கள் உயரும் போது அவர்களை வாழ்த்தி வழிவிடுவதே சிறந்தது. இதைப் பத்திரிகைகளே கடைப்பிடிக்க தவறுவதும், புகழ் போதையா என்று எழுதுவதும் நியாயம் தானா.

Please complete the required fields.
Back to top button
loader