This article is from Jul 17, 2019

தேசியக் கல்விக் கொள்கை குறித்து உங்களின் கருத்தை பதிவு செய்வது எப்படி ?

இந்திய அளவில் கல்வி முறையை மாற்ற வரும் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு வெளியான போது தமிழகத்தில் இருந்து பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. காரணம், மும்மொழிக் கொள்கை எனும் பெயரில் ஹிந்தி திணிப்பு நிகழ்வதை இங்கு யாரும் ஏற்க தயாராக இல்லை. இதற்கிடையில், தேசியக் கல்விக் கொள்கை பற்றி மக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 30-ம் தேதி வரையில் மட்டுமே அவகாசம் உள்ளது.

தேசியக் கல்விக் கொள்கையை அரசு தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு முன்பாக உமாநாத் செல்வன் உள்பட 50 தன்னார்வலர்கள் ஒன்றிணைத்து அதனை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். முழுமையாக படிக்க லிங்கில் செல்லவும் – https://vizhiyan.wordpress.com/2019/07/14/dnep-links/

தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு முதலில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தது. தற்பொழுது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு Mygov.in- https://innovate.mygov.in/ என்ற அரசு இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவில் இருப்பதையும், அது இங்குள்ளவர்களுக்கு எப்படி எதிரானதாக அமைந்து இருப்பதையும், அதில் இருக்கும் நல்ல முயற்சிகள் பற்றியும் தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் தங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள், எதிர்ப்புகளையும் தெரிவிக்க முடியும். எந்த எந்த பிரிவுகளில் தவறுகள் உள்ளது,அதுகுறித்து எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்பதை தொடர்ந்து கீழே பாருங்கள்.

பக்கம் 1 – பள்ளிக் கல்வி :

1. Early childhood care and Education : The Foundation of learning

பக்கம் 48 – ப்ரீ பிரைமரி மற்றும் அங்கவாடி பள்ளிகளில் NCERT பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படும். தற்பொழுது சிபிஎஸ்ஐ பள்ளிகளில் மட்டுமே NCERT பாடத்திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், தேசிய அளவில் ஒரு பாடத்திட்டத்தை கடைப்பிடிக்கும் பொழுது இங்குள்ள வரலாறுகளை, இம்மண்ணை சார்ந்த தியாகிகளை பற்றி மாணவர்கள் பெரிதும் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடும். ஏனெனில், இந்திய அளவில் பாடத்திட்டம் என்றால் இந்திய வரலாறே முதன்மையானதாக இருக்கும். பெரும்பாலான மண் சார்ந்த விஷயங்கள் மறைந்து வரும் இன்றைய வேளையில் பாடத்திட்டத்தில் மண் சார்ந்த தகவல்கள் இல்லையென்றால் எதிர்கால தலைமுறையினர் தங்கள் மண்ணை பற்றி அறிந்து கொள்ளாமலேயே போய் விடுவார்கள். இங்குள்ள வரலாறுகள் இடம்பெறாமல் மறைந்து போக வாய்ப்புள்ளது. கல்வியானது மாநில அரசிடம் இருக்க வேண்டும். எதிர்கால தலைமுறையினர் கல்வி குறித்து முடிவெடுக்கும் உரிமை அம்மாநில அரசிடம் மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

2. Foundational literacy and Numeracy

பக்கம் 58 : அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்குதல் நல்ல முயற்சி. இதில் முன்னோடியாக தமிழகம் இருந்து வருகிறது. 1950-களில் இருந்து தற்பொழுது வரை மதிய உணவு வழங்கும் திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு பால், பயிறு, முட்டை என சத்தான உணவுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்துவது நல்ல விசயமாக இருந்தாலும், அதற்கான நிதி பிரச்சனை எழுந்து இங்கு கொடுக்கப்பட்டு வரும் பால், பயிறு, முட்டை குறைக்கப்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்கான மத்திய அரசு தரப்பில் சரியான விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.

பக்கம் 61 : Unpaid volunteers for NTP & RIAP Programmes : இலவசமாக என்.ஜி.ஓ அமைப்பை சேர்ந்தவர்கள் மாணவர்களுக்கு கல்வி, கலை போன்ற பிற விசயங்களை கற்றுக் கொடுப்பதில் மாணவர்களுக்கு பயன்கள் உள்ளன. ஆனால், அவ்வாறு வருபவர்கள் எந்தவொரு மதத்தையோ அல்லது அது தொடர்பான விசயங்களை எடுத்துரைக்காத வண்ணம் தெளிவுப்படுத்தி இருக்க வேண்டியது அவசியம்.

பக்கம் 62 : NCERT பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை குறித்து ஏற்கனவே பக்கம் 48 -ல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

3. Reintegrating dropout and Ensuring universal access to education :

பக்கம் 67: சமூக பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களை வெளியில் இருந்து அழைத்து வருவதை குறிப்பிட்டு இருக்கின்றனர். இவையும் பக்கம் 61-ல் கூறியது உடன் தொடர்புடையவையாகும்.

பக்கம் 68 : மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்குவது. இதுவும் தமிழத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட திட்டமாகும்.

பக்கம் 69 : பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தி தருவதைக் குறிப்பிட்டு உள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுதி வசதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாலியல் கொடுமைகள் குறித்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் அவசர உதவி எண் வசதி ஏற்படுத்தி தரப்படும். தமிழகத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க உதவி எண் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களால் அளிக்கப்பட்டு இருந்தது. இது ஒரு நல்ல முயற்சியாகும்.

பக்கம் 72 : RTE எனும் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தை 8-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை நீட்டித்து உள்ளனர். ஆனால், இதில் RTE முறையில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சரியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா ? என்ற கேள்வி இருக்கிறது. முறையாக சீட்டுகள் வழங்கப்படுவதில்லை, கட்டணம் விவகாரம் போன்றவையை ஒழுங்கப்படுத்த எம்மாதிரியான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

4. Curriculum and pedagogy in schools :

4.1
பக்கம் 75 – 9 முதல் 12 வகுப்பு வரையில் செமெஸ்டர் முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று மாணவர்கள் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கும் elective subject முறை தொடங்குவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் பொழுது, இதற்கான வழிகளை எப்படி ஏற்படுத்தி தருவார்கள் என்கிற கேள்வி இருக்கிறது.

4.2
பக்கம் 78 : NCERT முறைப்படி பாடங்கள் தேசிய அளவில் இருக்கும், வேண்டுமானால் தேவையான பாடங்களை இணைக்க வேண்டி இருந்தால் SCERT(மாநில) துணைப்பாடத்தை அளித்துக் கொள்ளுங்கள் எனக் கூறி உள்ளனர். தேர்வுகள் NCERT பாடத்திடம்படியே நடைபெறும், துணைப்பாடமாக அளிப்பது மாணவர்களுக்கு மேலும் சிரமமாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. இது பயனில்லை என்பதால், எதிர்க்கப்பட வேண்டி இருக்கிறது. பாடத்திட்டமானது மாநில அரசின் மூலமே தயார் செய்யப்பட வேண்டும்.

4.5
பக்கம் 80 : தாய்மொழி வழிக்கல்வி 8-ம் வகுப்பு வரை முன்னுரிமை வழங்குவது நல்ல முயற்சியே.

பக்கம் 83 : மும்மொழிக் கொள்கை நமது மாநில கொள்கைக்கு எதிரானதாக இருக்கிறது. நாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறோம். மூன்றாம் மொழி எனும் கூறி ஹிந்தி மொழியே இங்கு திணிக்கப்பட்ட இருக்கிறது என்பதால் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர்.

பக்கம் 87 : மாணவர்களுக்கு விருப்ப மொழியாக சமஸ்கிருதத்தை அளித்து இருக்கிறார்கள். பேச்சு வழக்கில் இல்லாத மொழியை மாணவர்கள் கற்பதால் என்ன பயன் உள்ளது ?

4.6
பக்கம் 100 : வாரம் ஒருமுறை சமூகம், நாடு மற்றும் உலகம் சார்ந்த தற்கால நிகழ்வுகள் குறித்த வகுப்புகள் எடுக்கப்படுவது நல்ல முயற்சி. மாணவர்கள் அரசியல் குறித்தும் அறிந்து கொள்வது நல்ல விசயம்.

4.8
பக்கம் 102: பாடத்திட்டங்கள் NCERT படி இருக்கும். SCERT மாநிலம் சார்ந்த துணைப்பாடங்கள். ஆனால், இது ஒற்றை கல்வி அமைப்பை நோக்கியே நகர்கிறது. பக்கம் 78-ல் முன்பே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

4.9
பக்கம் 106 : அனைத்து உயர்நிலை கல்விக்கும் நீட் போன்று NTA தேர்வுகள் நடத்தப்படும். தமிழகத்தில் பி.ஏ தொடங்கி பல கல்லூரி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடைபெறுவதில்லை. ஆனால், NTA தேர்வுகள் தேசிய அளவில் உயர்நிலை கல்விக்கு நடைமுறைப்படுத்தப்படும். இதனால் கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.

5.Teachers :

நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க TET மற்றும் NTA உள்ளிட்ட தேர்வுகளுடன் நேர்காணல், செயல் விளக்கம் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும்.

6. Equitable and inclusive Education
6.3 ஓபிசி, எஸ்.சி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பது நல்ல முயற்சி.

8. Regulation and Accreditation of school education
8.1
பக்கம் 178: ஒவ்வொரு மாநிலத்திற்கும் State School Regulatory authority(SSRA) உருவாக்கப்பட்டு தனியார் பள்ளிகளின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படும். இது நல்ல விசயம். அதனை கண்காணிப்பது மாநில அரசு, ஆனால் கட்டுப்படுத்துவது மத்திய அரசாகும். இதனால் இங்குள்ள பள்ளிக் கல்வித்துறை செயலிழந்து போகும். இதன் மூலம் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சென்று விடும்.

பக்கம் 107 (P 4.9.4) : 3, 5, 8-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பது மாணவர்களை கல்வியில் இருந்து வேறு பாதையில் திசை திருப்பாமல் இருக்க செய்த வழிமுறையாகும். இது பள்ளிப்படிப்பை தொடராமல் பாதியில் பள்ளிப் படிப்பை விடும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

பக்கம் 2 – உயர்நிலைக் கல்வி

பக்கம் 201 – 2035-ம் ஆண்டிற்குள் GER 50% அளவிற்கு கொண்டு வர வேண்டும் என நிர்ணயித்து உள்ளனர். ஆனால், தமிழகத்தில் தற்பொழுது GER 43% அளவிற்கு இருக்கிறது. GER என்பது 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் அடுத்ததாக கல்லூரி படிப்பை தொடரும் விகிதமாகும். இது தேசிய அளவில் 15% மட்டுமே உள்ளது. தமிழகத்தில் GER இப்பொழுதே முன்னேறியதாக இருக்கிறது. எனினும், புதிய கல்விக் கொள்கையால் அதன் வளர்ச்சி பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

10. Institution Restructuring and consolidation

பக்கம் 220 – கல்லூரிகளுக்கு தன்னாட்சி (Autonomous) அதிகாரம் அளிப்பது சரியான தேர்வு அல்ல.

16. professional Education

16.8
பக்கம் 305 : நீட் நுழைவுத் தேர்வு போன்று Exit examination எனும் பொதுவான தேர்வும் எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு நடத்தப்படும். படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டி இருக்கும்.

18. Transforming the regulatory system
18.5
பக்கம் 333 : 2020-க்கு பிறகு தொடங்கும் கல்லூரிகள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகள் மட்டுமே. புதிதாக எந்தவொரு இணைக்கப்பட்ட(Affiliated) கல்லூரிகளும் தொடங்கப்படாது.
பக்கம் 334 : தனியார் கல்லூரிகளின் கட்டணங்களை தன்னிச்சையாக அமைத்துக் கொண்டால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை வரைவு தொடர்பாக ஒவ்வொரு பிரிவிலும் இருப்பதை குறித்து, பிரிவு மற்றும் பக்க எண் உடன் மக்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம். அதற்கு MyGov Innovation (https://innovate.mygov.in/)என்ற இணையதளத்திற்கு சென்று தெரிவியுங்கள். அங்கு login செய்து கீழே காண்பிக்கப்பட்டு இருப்பது போன்று தொடருங்கள்.

 

 

Links :

DNEP Links

https://innovate.mygov.in/

உரிமை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை 

Please complete the required fields.




Back to top button
loader