தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் இந்து கடவுள், பாரத்.. பாஜகவின் பெயர் மாற்ற அரசியல் !

தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில்(Logo) இருந்த அசோகா சின்னம் நீக்கப்பட்டு இந்து கடவுள்களில் ஒருவராகக் கருதப்படும் ‘தன்வந்திரி’யின் படமும் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்றும் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக பாஜக மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

மருத்துவ கல்வியையும், மருத்துவத் துறையையும் ஒழுங்குபடுத்தி வந்த இந்திய மருத்துவ கவுன்சில் 2020, செப்டம்பர் 25ம் தேதியுடன் கலைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மருத்துவத் துறையில் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் 2019ன் படி ‘தேசிய மருத்துவ ஆணையம்’ தொடங்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் இலச்சினையாக அசோகா முத்திரை இருந்து வந்தது. அதற்குப் பதிலாக இந்துக் கடவுளாக நம்பப்படுகிற தன்வந்திரியின் படம் மாற்றப்பட்டுள்ளது.

தேவர்களும்‌, அசுரர்களும்‌ அமுதத்திற்காக பாற்கடலைக்‌ கடைந்தபோது அமுத கலசத்துடன்‌ தோன்றியவர்‌ தான் தன்வந்திரி. இவர் விஷ்ணுவின்‌ அவதாரம்‌ என்றும் ஆயுர்வேதத்தை வடமொழியில்‌ அளித்தவர் என்றும் புராண கதைகள் கூறுகிறது. கல்விக்கும் செல்வத்துக்கும் தனித்தனி கடவுள்கள் இருப்பது போல மருத்துவத்திற்கு என ஒரு தனி கடவுளாகவே இவரை கருதுகின்றனர்.

ஒரு மதத்தின் கடவுளாகக் கருதப்படும் ஒரு விஷயத்தை, அனைத்து மனிதர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அறிவியலை மையமாகக் கொண்டு செயல்படும் மருத்துவத்திற்குப் பயன்படுத்துவது எந்த வகையில் சரி. இது இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மைக்கு (Secularism) எதிரானது. அது மட்டுமின்றி அறிவியல் கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அரசியலமைப்பு பிரிவு 51(A)-க்கும் எதிரானது. 

மேலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஜி20 மாநாட்டிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையில் ‘பாரத்’ எனக் குறிப்பிடப்பட்டபோதே பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெயர் மாற்ற அரசியல் : 

‘இந்தியா’ அல்லது ‘பாரத்’ என்கிற பெயர் இந்திய அரசியலமைப்பில் இருந்தாலும், அதிகாரப் பூர்வமான ஆவணங்கள் மற்றும் பிற சர்வதேச நிகழ்வுகளில் இந்தியா என்றே நமது நாட்டின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. பாரத் என்கிற இப்பெயர் மாற்றத்திற்கு எதிர்க் கட்சியினர் தங்களது கூட்டணிக்கு இந்தியா (INDIA – Indian National Developmental Inclusive Alliance) எனப் பெயர் வைத்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. 

ஆனால், இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்னரே பாஜக இத்தகைய பெயர் மாற்ற அரசியலை முன்னெடுக்கத் தொடக்கி விட்டது. மோடி பிரதமரான ஆரம்பக் காலம் முதலே இந்தியப் பிரதமர் என்பதற்குப் பதிலாகப் ‘பாரத பிரதமர்’ என்றே பல இடங்களில் பாஜக மற்றும் சில ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் நீட்சிதான் இது. 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ‘அலகாபாத்’ நகருக்கு சாதுக்களின் கோரிக்கையை ஏற்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ‘பிரயாக்ராஜ்’ எனப் பெயர் மாற்றம் செய்தார். அதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் உள்ளமுகல்சராய்’ ரயில் நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ‘தீனதயாள் உபாத்யாய’-வின் பெயர் மாற்றப்பட்டது. இதேபோல் ‘பைசாபாத்’ நகரத்திற்கு ‘அயோத்தியா’ என்றும்  ‘அலிகர்’ நகரத்திற்கு ‘ஹரிகர்’ என்றும் பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ‘அவுரங்காபாத்’ மற்றும் ‘உஸ்மானாபாத்’ ஆகிய இரு நகரங்களின் பெயர்களை மாற்ற பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தனர். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது அதற்கான முன்னெடுப்புக்களைச் செய்தார். அவர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில் அடுத்ததாக முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே, அவ்விரு நகரங்களுக்கும் முறையே ‘சத்ரபதி சம்பாஜினி’,  ‘தாராஷிவ்’ எனப் பெயர் மாற்றம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். இப்படி இஸ்லாமியப் பெயர்கள் உள்ள பகுதிகளுக்குத் தொடர்ந்து பாஜக பெயர் மாற்றம் செய்து வருகிறது.  

இந்த மாற்றங்கள் எதற்கு : 

இந்தியா என்கிற நாட்டில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இங்குள்ள இஸ்லாமியர் கிறிஸ்துவர் போன்ற மாற்று மதத்தினர், இந்நாட்டு வளங்களைச் சுரண்டுகின்றனர் என்கிற பொய் பிரச்சாரத்தை வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். அதன்படியே இத்தனை காலம் இந்தியாவின் வரலாறு தவறாக எழுதப்பட்டுள்ளது. அதனை நாம் தான் திருத்தி எழுத வேண்டும். அதற்கு இத்தகைய மாற்றங்கள் தேவை என்கிற சிந்தனை மக்களிடையே விதைக்கப்படுகிறது. இதன் பேரில் அவர்கள் செய்த பெயர் மாற்றங்கள் ஒரு கட்டத்தில் வரலாறு மற்றும் அறிவியல் பாடப் புத்தகங்களில் திரிபு செய்வதில் வந்து நின்றுள்ளது.

சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக NCERT-ஆல் வெளியிடப்பட்ட துணைப்பாட புத்தகத்தில் ‘பறக்கும் ரதங்கள்’, ‘விமானிகா சாஸ்திரம்’ போன்ற புராணக் கதைகளும் அறிவியலுக்குப் புறம்பான பகுதிகளும் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வேறு சில புத்தகத்தில் ஜாதிய ரீதியிலான பகுதிகளும் இடம் பெற்று இருப்பதை இதற்கு முன்னர் நாம் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.

பிரதமர் மோடி வெவ்வேறு இடங்களில் பேசுகையில், பஜனை செய்தால் ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கும், வேத காலத்தில் ஜெனிடிக் அறிவியல் (Genetic Science) இருந்தது, மேகத்திற்குள் சென்றால் ரேடார் கருவிகளால் விமானங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்றெல்லாம் பேசி இருந்தார். இதர பாஜகவினரும் அவர்களது பங்கிற்கு, புராண காலத்தில் இணையதள வசதி இருந்தது, மாட்டுக் கோமியம் கேன்சரை ஒழிக்கும் என்றெல்லாம் அறிவியலுக்குப் புறம்பான கதைகளைப் பேசியுள்ளனர். 

அடுத்ததாகப் பாபா ராம்தேவ், சித்த மருத்துவம் என்கிற பெயரில் அறிவியல் மருத்துவத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்ததை இந்திய மருத்துவ கழகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் பதஞ்சலி நிறுவன பொருட்களின் மூலம் தீராத வியாதிகள் குணமாகும் எனப் போலி விளம்பரங்கள் செய்வதையும் உச்ச நீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. 

சிறுபான்மையினர் பற்றி தவறாக பிரச்சாரம் செய்து வந்தவர்கள், தற்போது உலக நாடுகள் சோதித்துப் பின்பற்றும் அறிவியல் குறித்தும் வதந்திகளை பரப்ப தொடங்கியுள்ளனர். இத்தகைய பிரச்சாரம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

இப்படி ஒவ்வொரு தளத்திலும் அறிவியலுக்கு எதிரான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வரும் இத்தகைய சூழலில்தான் தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் இந்து மத கடவுள் படம் வைக்கப்பட்டுள்ளது. 

முதலில் மதரீதியாக மனிதர்களை அந்நியப்படுத்தினார்கள். பிறகு மாற்று மதத்தினர் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள் எனப் பண்டங்களை அந்நியப்படுத்தினார்கள். தற்போது அறிவியலை அந்நியப்படுத்த இதிகாச கால மருத்துவம் என இல்லாத ஒன்றினை சுய பெருமைக்காகப் பேசத் தொடங்கியுள்ளனர். 

அதிகாரப்போக்கு மிக்க அரசியல் தலைவர்களை இதற்கு முன்னர் இந்திய அரசியல் சந்தித்துள்ளது. ஆனால், பாசிசம் என்பது அப்படி அல்ல. அது தற்போது உள்ள சமூக சூழலை பண்பாடு, கலாச்சாரம், அறிவியல், வரலாறு என அனைத்து தளத்திலும் தங்களுக்குச் சாதகமாக மாற்றுவதாகும்.

ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற வலதுசாரி அமைப்புகள் இந்திய பன்முகத்துவ கலாச்சாரத்தின் மீது தங்களால் முடிந்த தகர்ப்புகளைச் செய்து வருகிறது. இந்துத்துவவாதிகள் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் போதெல்லாம் ஜனநாயக ரீதியிலான அமைப்புகள், அரசியல் கட்சிகள், சில ஊடகங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால், அது பொது மக்களின் எதிர்ப்பாகவும் அனைத்துவித பிரச்சனைகளையும் ஒருங்கிணைத்த எதிர்ப்பாகவும் மாறுகிறதா என்றால் இல்லை.

ஒருங்கிணைந்த பிரச்சனைகளுக்கான எதிர்ப்பும், ஜனநாயக தீர்வும் எட்டப்படாத வரையில் பாசிசம் அதன் வேலையைச் செய்து கொண்டேதான் இருக்கும் !

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader