6 லட்சம் கோடி நிதி திரட்ட தனியார்வசம் கொடுக்கப்படும் பொதுத்துறை சொத்துக்கள் என்னென்ன?

இந்தியாவில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மாற்று வழியில் நிதி திரட்டும் நோக்கில் பொதுத்துறை சொத்துக்களை பணமாக்கும் திட்டம் குறித்து 2021-22 நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையில் பாஜக அரசு அறிவித்து இருந்தது.

Advertisement

இந்நிலையில், இந்திய அரசின் வசமுள்ள நெடுஞ்சாலை, ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம், விமானம் நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியார்வசம் கொடுப்பதன் மூலம் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்.

அரசின் உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களை அடுத்த 4 ஆண்டுகளில் பணமாக மாற்றுவதை இலக்காக கொண்டு தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

” இந்த திட்டத்தின் கீழ் பயன்பாட்டில் இல்லாத அரசின் சொத்துக்கள் தனியார் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். இந்த சொத்துக்களின் உரிமை இந்திய அரசின் வசமே இருக்கும். அரசு மற்றும் பயன்படுத்தும் நிறுவனத்தால் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு முடிந்தபின் மீண்டும் அந்த சொத்துக்கள் அரசிடம் ஒப்படைத்தாக வேண்டும். நெடுஞ்சாலை, ரயில் பாதைகள், மின் திட்டங்கள் போன்ற சொத்துக்கள் அடுத்த நான்கு நிதியாண்டுகளில் இவ்வாறு பணமாக்கப்படும் ” என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக பிபிசி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

என்னென்ன சொத்துக்கள் ?

இதற்காக நிதி ஆயோக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆதார வழிமுறைகள் புத்தகத்தில், ” நெடுஞ்சாலை, ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், எரிவாயு குழாய்கள், உற்பத்தி குழாய் / மற்றவை, தொலைத்தொடர்பு, சேமிப்பு கிடங்கு, சுரங்கம், விமான நிலையங்கள், துறைமுகம், விளையாட்டு மைதானம் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் நிதி திரட்ட போவதாகக் கூறப்பட்டுள்ளது.

தனியாருக்கு கொடுக்கப்பட உள்ள அரசு துறைகளின் சொத்துக்கள் மற்றும் அவற்றின் மதிப்பு பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. நெடுஞ்சாலை(துறை) – 26,700 கி.மீ (சொத்து) – ரூ.1,60,200 கோடி (மதிப்பு)

2. ரயில்வே – 400 ரயில் நிலையங்கள், 90 ரயில்கள், மற்றும் பல – ரூ.1,52,496 கோடி

3. மின் விநியோகம் – 28,608 சர்கியூட் கி.மீ – ரூ.45,200 கோடி

4. மின் உற்பத்தி –  6.5 ஜிகா வாட் கொண்ட மின் உற்பத்தி சொத்துக்கள்  – ரூ.39,832 கோடி

5. எரிவாயு குழாய்கள் – 8,154 கி.மீ குழாய்கள் – ரூ. 24,462 கோடி

6. உற்பத்தி குழாய்கள் / மற்றவை – 3,930 கி.மீ குழாய்கள் – ரூ. 22,504 கோடி

7. தொலைத்தொடர்பு – 2.89 லட்ச கி.மீ பாரத்நெட் பைபர், 14,917 பிஎஸ்என்எல் & எம்டிஎன்எல் கோபுரங்கள் – ரூ. 35,100 கோடி

8. சேமிப்பு கிடங்கு – 210 லட்சம் மெட்ரி டன்(எல்எம்டி) – ரூ.28,900 கோடி

9. சுரங்கம் – 160 திட்டங்கள் – ரூ. 28,747 கோடி

10. விமான நிலையங்கள் – 25 விமான நிலையங்கள் – ரூ. 20,782 கோடி

11. துறைமுகம் – 9 முக்கிய துறைமுகங்களில் 31 திட்டங்கள் – ரூ. 12,828 கோடி

12. விளையாட்டு மைதானம் – 2 தேசிய மைதானங்கள் மற்றும் 2 பிராந்திய மையம் – ரூ. 11,450 கோடி

தமிழகத்தை பொறுத்தவரையில் தனியாருக்கு அளிக்கப்படும் சொத்துக்களின் பட்டியலில், சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்கள், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 3 திட்டங்கள், நீலகிரி மலை ரயில் பாதை திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Links : 

NATIONAL MONETISATION PIPELINE

Vol_2_NATIONAL_MONETISATION_PIPELINE_23_Aug_2021

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button