ஜென்ராம் மினி பஞ்ச் : அரசியல்ல இதெல்லாம்.. தொடர் -1

செய்தி : பொது சிவில் சட்டம் 

பொது சிவில் சட்டம் நாட்டின் நலனுக்கு அவசியமானது என்று பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சொல்கிறார். காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்த பிறகு இந்தக் கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். பொது சிவில் சட்டம் வருவதற்கு முன்னாலேயே ஊகத்தின் அடிப்படையில் இஸ்லாமியர்களை அது பாதிக்கும் என்று சொல்கிறார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி சார்பாக நான் கண்டிக்கிறேன்.

 

ஜென்ராம் பஞ்ச் : 

ஒன்று மற்றவர்களை பாதிக்குமா இல்லையா என்பதை எதுவும் வந்த பின் தான் சொல்ல முடியும். வரும்முன் அச்சுறுத்தக் கூடாது என்கிறார். நல்லது. அதுவும் சரிதான்.. வருவதற்கு முன்னாலேயே எச்சரிக்கையுடன் இருந்து நாம் காக்க வேண்டும் இல்லையென்றால் நெருப்பில் போட்ட வைக்கோல் போல வாழ்க்கை அழிந்து விடும்னு வள்ளுவர் தப்பா சொல்றாருன்னே வைச்சுக்குங்க.. ஆனா, பாதிக்கும்னு வருமுன் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அதேமாதிரி எதுவும் நல்லது அவசியமானதுன்னும் வர்றதுக்கு முன்னாடி சொல்ல முடியாதுதானே!

செய்தி : காங்கிரசிற்கு எதிராக மம்தா 

”மேற்கு வங்கத்தில் என் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது. பிறகு கோவாவில் அவர்களை நான் எப்படி மலர்தூவி வரவேற்க முடியும்? முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் முடிவெடுக்காமல் இருக்கும் காங்கிரசால், இந்தியா மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ” இப்படி மம்தா பானர்ஜி கோவாவில் பேசியிருக்கிறார்.

ஜென்ராம் பஞ்ச் : 

இது நமக்கு என்ன உணர்வைத் தருகிறது ? கோவாவில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து வெற்றி கொள்வதைவிட காங்கிரஸின் இடத்தை பிடிப்பதுதான் மம்தா பானர்ஜியின் நோக்கமோ என்ற சந்தேகம் வருகிறது. மம்தாவும், சோனியாவும் மோதிக் கொள்வதால் அரசியல் ஆதாயம் யாருக்கு ? அதைப் பற்றி கவலையே படாமல், இருவரும் மோதிக் கொள்வது ஏன்?

ஒருபுறம் மற்றவர்களை விட தீவிரமாக பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பது.. தேர்தலில் காங்கிரஸ் வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு உதவுவது.. இப்படி ஒரு புரிந்துணர்வு மம்தாவுக்கும் மோடிக்கும் இருக்குமோ? அல்லது நம் கையில் அதிகாரம் வரும்வரை மோடியே இருக்கட்டும் என்று காங்கிரசில் நினைக்கிறார்களா ?

செய்தி : காங்கிரஸ் கட்சி போலி மதச்சார்பின்மை – அமித் ஷா 

காங்கிரஸ் கட்சி போலி மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறது. சாலைகளில் மக்கள் அமர்ந்து வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி அனுமதி கொடுத்தது. உத்தரகாண்ட் மக்களுக்கு அந்த கட்சி நன்மை செய்யாது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரகாண்டில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

வெறுப்பையும், பிளவையும் ஊக்குவிக்கிறது பாஜக.. அன்பையும், பாசத்தையும் பேசுகிறது காங்கிரஸ் கட்சி. அவர்கள் மக்களை பிளவுப்படுத்துகிறார்கள். நாங்கள் மக்களை ஒன்றுபடுத்துகிறோம். இப்படி கோவாவில் பேசியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி.

ஜென்ராம் பஞ்ச் : 

திரிணமுல் காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு தாவிய ராஜீவ் பானர்ஜி மீண்டும் திரிணமுல் காங்கிரசுக்கு திரும்பினார். மத அரசியலை தவிர பாரதிய ஜனதா கட்சி வேறு எதுவும் செய்வதில்லை என்று மேற்குவங்கத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

மூன்று மாநிலங்களில் நடந்த மூன்று நிகழ்வுகள்.. நமக்கு சொல்வது என்ன? ராகுல் காந்தியும், ராஜீவ் பானர்ஜியும் சொல்வது ஒரே கருத்தைத்தான். ஆனால் பிரிந்து நிற்கிறார்கள்.. எதற்காக? மத அரசியல் செய்யும் பாஜக வெல்வதற்காக!

  • ஜென்ராம், மூத்த பத்திரிகையாளர் 
Please complete the required fields.




Back to top button