அரசு சிக்கனம் செய்ய அறிவுசார் குறைபாடுள்ளோருக்கான அறக்கட்டளையை மூட யோசனை!

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பே தேசிய அறக்கட்டளையாகும்(National Trust). இயலாமை உடையவர்களின் மேம்பாடு தொடர்பாக, சட்டப்பூர்வ மற்றும் நலவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதே இதன் சட்டப்பூர்வப் பணியாகும்.

Advertisement

ஆட்டிசம், பெருமூளை வாதம், மனநல வளர்ச்சியின்மை மற்றும் பன்மை குறைபாடுகள் உள்ளவர்களின் நலனுக்காக தேசிய அறக்கட்டளை 1999-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தற்போது, தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ஐ நீக்குவதற்கான முன்மொழிவு மத்திய நிதி அமைச்சகத்தின் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத் துறையின் சார்பில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சத்திற்கு திட்டத்தின் முன்மொழிவை அனுப்பப்பட்டு உள்ளது.

அறிவார்ந்த குறைபாடுகள் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் பல ஏற்பாடுகள் மற்றும் திட்டங்கள் என்.டி.ஏ-வில் உள்ளன. தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ஐ நீக்குவதற்கான முன்மொழிவிற்கு முன்னணி மாற்றுத்திறனாளி உரிமைக் குழுக்களிடம் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அறிவார்ந்த குறைபாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளின் பெற்றோர் தேசிய அமைப்பான பரிவார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதோடு, தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 மற்றும் அது தொடர்புடைய திட்டங்களை தொடர வேண்டும் என்றும், இந்த விசயத்தில் நேரடியாக தலையிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

” இவை சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவுகள், எனவே இதை செய்ய வேண்டாம் என்று நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் ” என பரிவார் பெங்கால் உடைய பொதுச் செயலாளர் உபாத்யாய் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

என்.டி.ஏ சட்டத்தின் முக்கிய உதவிகள் : 

பாதுகாவலர் : அறிவார்ந்த குறைபாடுகள் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு முடிவெடுக்க வாழ்நாள் முழுவதும் ஆதரவு தேவைப்படுகிறது. இதனை என்.டி.ஏ உள்ளூர் குழுக்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

தங்குமிடம் :  கரோண்டோ(Gharonda) திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் ஒருங்கிணைந்து மையங்களை அமைக்கின்றனர்.

இன்சூரன்ஸ் : நிரமயா திட்டத்தின் கீழ், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடு கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.

தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 நீக்கப்படுவது தொடர்பாக டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் கூறுகையில், ” இது மத்திய அரசாங்கத்தின் தவறான செயல்பாடு. ஐநாவில் மாற்றுத்திறனாளிகள் உரிமை உடன்படிக்கையில், சில விசயங்களை செய்வதாக கூறி இருக்கிறார்கள். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆட்டிசம், ஒன்றுக்கு மேற்பட்ட இயலாமை கொண்டவர்கள், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டியது இருக்கும் போது செலவினம் எனப் பார்ப்பது அரசாங்கத்தின் தவறான கண்ணோட்டமாகும்.

பிரதமர் “மன் கி பாத் ” நிகழ்ச்சியில் தெய்வ அம்சம் பொருந்தியவர்கள் என்றெல்லாம் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிவிட்டு, மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பவர்கள் சார்ந்த மற்றும் நிதி சார்ந்த பல்வேறு விசயங்களில் உரிமைகளையும், மருத்துவ செலவுகளைக் கூட பார்த்துக் கொண்டு இருந்த ஒரு தேசிய அறக்கட்டளையை தேவையில்லாத செலவினம் எனக் கூறி மூட நினைப்பது அரசாங்கத்திற்கு சரியான கண்ணோட்டம் இல்லை என்பதை காட்டுகிறது.

பிரதமரின் விமானம், ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு, பாதுகாப்பு செலவுகள், ஆளுநர்களுக்கான செலவுகள், அரசு விழாக்களுக்கான செலவுங்கள், மந்திரிகள் பயணிக்கும் விமான செலவுகள் என இவற்றையெல்லாம் கணக்கிடுவதில் 100-ல் 1 பங்கு கூட செலவினம் இருக்காது. அதேபோல், சில நாட்களுக்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளை அவர்களின் இயலாமை கொண்டு திட்டினால் கிரிமினல் வழக்காக எடுக்கக்கூடிய 2016 அவர்கள் கொண்டு வந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் முயற்சியில் இருந்தனர். அதற்கு காரணமாக, அப்படி செய்தால் தான் இந்த நாட்டிற்கு அயல்நாட்டு முதலீடுகள் வரும் எனக் கூறினர். அதற்கு எதிராக எதிர்வினையாற்றிய பிறகு அதனை எடுத்து உள்ளார்கள். அதேபோல் மத்திய அரசு தேசிய அறக்கட்டளைக்கு கடந்த 6 வருடங்களாக சேர்மனை நியமிக்கவில்லை, முறையான நிதியையும் ஒதுக்கவில்லை. கடுமையாக போராடிய பிறகே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகாரணங்கள் மீதான வரி குறைக்கப்பட்டது. மத்திய அரசின் பேச்சுக்கும் செயல்பாட்டிற்கும் சம்பந்தமில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.

மூத்தப் பத்திரிகையாளரான பாலபாரதி அவர்களிடம் பேசிய போது, ” தேசிய அறக்கட்டளை எனும் வாரியத்தை அமைத்தப் பிறகுதான் தேசிய அளவில் இருக்கும் அறிவுசார் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர முடிந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தன்னுடைய கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தில் அத்திட்டத்தை நிறைவேற்றினார். வாஜ்பாய் கொண்டு வந்த ஒரு திட்டமிது, குறிப்பாக அறிவுசார் மனவளர்ச்சி  உடைய குழந்தைகளுக்கு உதவக் கூடிய வாரியத்திற்கு நிதிப்பற்றாக்குறை இருப்பது போன்ற தோற்றதை ஏற்படுத்தி மூடும் சூழல் நிகழ நேரிட்டால் இந்தியாவில் உள்ள அறிவுசார் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அது பேரிழப்பு.

பொதுவாகவே, நீங்களும் நானும் எளிதாக இன்சூரன்ஸ் எடுத்து விடலாம். ஆனால்,  மாற்றுத்திறனாளிகளுக்கு அப்படியில்லை. இவர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தை தேசிய அறக்கட்டளைதான் கொண்டு வந்தது. இங்கு கிராமங்களில், ஏழை, எளிய நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளைக் கணக்கில் கொண்டு அந்த பகுதியில் பயிற்சி மையங்கள் வைப்பது, பயிற்சி மையங்கள் வைத்தால் நிதியுதவி அளிப்பது போன்றவற்றைச் செயல்படுத்தி வந்தனர். தேசிய அறக்கட்டளை சட்டத்தை நீக்குவது இந்த நாட்டில் உள்ள அறிவுசார் வளர்ச்சி குறைபாடு உடையவர்களுக்கு செய்யும் துரோகமாகும் ” எனக் கூறியுள்ளார்.

இந்தியாவின் பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் உள்ளிட்டோருக்கான பிரத்யேக விமானங்களை வாங்கும் அரசாங்கம் சிக்கன நடவடிக்கை எனக் கூறி மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அறக்கட்டளையை நீக்கும் யோசனையை முன்வைத்துள்ளது என யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் கேள்வி எழுப்பி இருந்தார். தேசிய அறக்கட்டளை சட்டத்தை நீக்குவது தொடர்பான முயற்சியை கைவிடுமாறு நாமும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுப்போம்.

Links : 

National Trust Act & Provisions

national-trust-act-nta-disabled-disability-msje-parivaar-developmental-disorders-cerebral-palsy-autism

PRESS_RELEASE_National_Trust_Act_1999 6 Oct 2020

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button