மீண்டும் தூசி தட்டும் பாஜக.. நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாதது ஏன்? ஓர் அலசல் !

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரவக்குறிச்சியில் ‘என் மண் என் மக்கள்’ பிரச்சாரத்தின் 100வது நாளாக நேற்று (பிப்ரவரி 22) நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது, எங்களுடைய முதல்வேளையாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு நவோதயா பள்ளிகளை கொண்டு வருவோம். இரண்டு நவோதயா பள்ளிகளுக்கும் ‘தந்தை காமராஜர் பள்ளி’ என்ற பெயரை வைப்போம்” என்று கூறியுள்ளார்.

எனவே, நவோதயா பள்ளி என்றால் என்ன ? அண்ணாமலை நவோதயா பள்ளி குறித்து தற்போது ஏன் பேச வேண்டும் ? என்பன பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு தொகுத்துக் காண்போம்.

நவோதயா பள்ளி – ஓர் அறிமுகம் :

1986-ம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வெளியான பிறகு, ஒன்றிய அரசால் ‘ஜவஹர் நவோதயா பள்ளிகள்’ என்ற பெயரில் மாதிரி பள்ளிகள் முதன்முதலில் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி ஹரியானாவின் ஜஜ்ஜரிலும், மகாராஷ்டிராவின் அமராவதியிலும் முதல் இரண்டு பள்ளிகள் துவங்கப்பட்டன. இவை இலவசக்கல்வியோடு, இருபாலருக்குமான உண்டு, உறைவிட வசதிகளையும் சேர்த்து வழங்குகின்றன. அதன்படி 6 ஆம் வகுப்பில் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரையில் இங்கு மாணவர்கள் கல்வி கற்க முடியும். இந்த பள்ளியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுதுவது கட்டாயமான ஒன்றாகும்.

அனைத்து நவோதயா பள்ளிகளும் மும்மொழிக் கொள்கையையே பின்பற்றுவதால், இங்கு பிராந்திய மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. அதன்படி, VII அல்லது VIII வகுப்பு வரை தாய்மொழி/பிராந்திய மொழியில் கற்பிக்கப்படுகின்றன. அதன்பிறகு அனைத்து நவோதயா வித்யாலயாக்களிலும், கற்பிக்கும் மொழி, இந்தி அல்லது ஆங்கிலமாக மட்டுமே இருக்கும். மேலும் நவோதயா வித்யாலயா கட்டப்படுவதற்கு மாநில அரசு இலவச நிலம் வழங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும். இதன்படி மாநில அரசு 30 ஏக்கர் வரையில் நிலத்தை ஒன்றிய அரசிற்கு வழங்கவேண்டும்.

இடஒதுக்கீடு முறை:

நவோதயா பள்ளிகளில் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில் இங்கு மாணவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கிராமப்புற குழந்தைகளுக்கு 75% இடங்களும், நகர்ப்புற குழந்தைகளுக்கு 25% இடங்களும் வழங்கப்படுகின்றன. SC & ST பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அந்தந்த மாவட்டத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் SC & ST ஒதுக்கீடு, தேசிய சராசரியை(15% SC & 7.5% ST) விட குறைவாக இல்லாதவாறு நிர்ணயிக்கப்படுகிறது. ஓபிசி மாணவர்களைப் பொறுத்த வரையில் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது தவிர மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இங்கு பள்ளி சீருடைகள், பாடப் புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டாலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடமிருந்து ‘வித்யாலயா விகாஸ் நிதியாக’ மாதம் ரூ.600/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து மாணவிகள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் மாணவர்கள் ஆகியோருக்கு இந்த கட்டனத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் விலக்கு அளிக்கப்பட்ட பிரிவினரைத் தவிர, மற்ற பிரிவினர் மற்றும் அரசு ஊழியர்களாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளைப் பொறுத்தமட்டில், மாதத்திற்கு ரூ.1500/- அல்லது பெற்றோரால் மாதந்தோறும் பெறப்படும் கல்வி உதவித்தொகை (Children Education Allowance received by the parent) இவற்றில் எது குறைவாக உள்ளதோ, அது கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள நவோதயா பள்ளிகளின் எண்ணிக்கை :

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி. ஜவஹர் நவோதயா பள்ளிகளின் (JNV) மொத்த எண்ணிக்கையை 661 ஆக உள்ளது. இந்தப் பள்ளிகளை நிர்வகிக்கும் நவோதயா வித்யாலயா சமிதி, போபால், சண்டிகர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா, புனே & ஷில்லாங் என்ற எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் மொத்தமுள்ள 638 மாவட்டங்களில் 661 ஜவஹர் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் அதிகமுள்ள 23 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் ஜவஹர் நவோதயா பள்ளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இது தவிர ஒன்றிய அரசு 2023 நவம்பர் 19 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, 26 நவோதா பள்ளிகளை ஒரிசாவில் திறந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இதே போன்று மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், 31.03.2023 வரை பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளின் படி, மொத்தம் 2,93,588 மாணவர்கள் ஜவஹர் நவோதயா பள்ளிகள் மூலமாக கல்வி பயில்கின்றனர்.

தமிழ்நாட்டில் நவோதியா பள்ளிகள் அனுமதிக்காதது ஏன் ? 

தற்போது இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதிலும் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் செயல்படுத்தப்படாமலே உள்ளது. தமிழ்நாட்டிற்கு பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் கூட இவை செயல்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1937-38 ஆம் ஆண்டுகளிலேயே பள்ளிக்கல்வியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராகப் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் இந்தியாவில் 1965 இல் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம், நிறைவேற்றப்படவிருந்த நிலையில், தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. இறுதியாக அப்போதைய முதல்வரான அறிஞர் அண்ணா தலைமையில் இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

அப்போதிலிருந்து இன்று வரையில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பயன்பாட்டில் இருந்து வருகிறன்றன. இந்நிலையில் நவோதயா பள்ளிகள் ஹிந்தியை முதன்மையாக கொண்டு, மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை இயக்க முடியாது என்று கூறி ஆரம்பத்தில் இருந்தே ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் இந்தப் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜவஹர் நவோதயா வித்யாலயாவை தமிழ்நாட்டில் அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் தாமஸ் என்பவரால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனையடுத்து பல்வேறு விசாரணைகளுக்கு பின்பு சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு நவோதயா பள்ளிகளை திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்குமாறு 2017 டிசம்பரில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவு வழங்கியது.

மும்மொழிக்கொள்கை மட்டும் தான் காரணமா ?

கிராமப்புற குழந்தைகளுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், இந்த பள்ளியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு CBSE பாடத்திட்டத்தில் நடத்தப்படுவதால், 5 ஆம் வகுப்பு வரை அரசுபள்ளிகளில் படித்த கிராமப்புற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது ? இதன் மூலம் பல்வேறு கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிறிய இடத்திலேயே கட்டப்பட்டு, சமச்சீர் கல்வி மூலம் இலவச கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளிகள் கட்டுவதற்கு அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 ஏக்கர் நிலத்தை தர வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் அரசு பள்ளிகள் ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வரும் நிலையில், நவோதயா பள்ளிகள் ஒரு மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் திறக்கப்படுவதோடு, ஒவ்வொரு வகுப்பிற்கும் 80 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், மாணவர்களுக்கு நவோதயா பள்ளியின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள் இங்கு மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் கடந்த 2022 செப்டம்பர் 20 அன்று விவேக் பாண்டே மற்றும் Careers360 மூலம், நவோதயா வித்யாலயா சமிதி குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில், இந்தியாவில் உள்ள 649 நவோதயா பள்ளிகளில் ஐந்தில் ஒரு பங்கான 128 பள்ளிகளில் 80க்கும் குறைவான மாணவர்களே 2022-23 கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இதில், உத்தரப் பிரதேசம் (15), சத்தீஸ்கர் (13) மற்றும் நாகலாந்து(11) உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிகளில் நடக்கும் தற்கொலைகளை தடுப்பதற்காக, கடந்த 2019லேயே 1,100க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளில் 25 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்:

Establishment of Jawahar Navodaya Vidyalayas

Objectives and Salient Features of Navodaya Vidyalaya Samiti

SC stays Mds HC order on establishing Navodaya schools in TN

Shri Dharmendra Pradhan launches 37 PM SHRI Kendriya Vidyalayas and 26 PM SHRI Jawahar Navodaya Vidyalayas in Odisha

25 Jawahar Navodaya Vidyalaya students succumb to suicide in five years, SC/ST most affected

Navodaya Vidyalayas Recruit Over 1,100 Counsellors After Several Incidents Of Suicide

128 JNVs admitted less than 80 students in 2022: RTI Reply

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader