“நீட்” ஆல் பாதிக்கப்படும் தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்கள் – ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கை !

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ஜூலை மாதம் தங்களின் அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது. ஏ.கே.ராஜன் குழு அளித்த 165 பக்க அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

நீட் தேர்வால் 12-ம் வகுப்பு மதிப்பெண்களை புறக்கணித்தது, தனியார் பயிற்சியை அதிகம் ஊக்குவித்தது, பழங்குடி, தமிழ்வழி, கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்புகளை மறுக்குகிறது என்கிற நீட் தேர்வை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்கள் தரவுகளின் வாயிலாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-17 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் 537 ஆக இருந்த தமிழ்வழிப் படித்த மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வு வந்த பிறகு 2017-18 கல்வியாண்டில் 56 ஆக குறைந்துள்ளது. 2020-21 கல்வியாண்டில்(92.5%) 82 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட (7.5%) இடஒதுக்கீட்டின் படி 217 பேரும் என மொத்தம் 299 மாணவர்களே தமிழ்வழிப் படித்தவர்கள். நீட் முன்பாக 500க்கும் மேற்பட்ட தமிழ் வழி மாணவர்கள் படித்து வந்த நிலையில் இடஒதுக்கீடு வழங்கியும் பாதியை மட்டுமே நெருங்க முடிந்து இருக்கிறது.

மாநில பாடத்திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் பிரிவில் பார்த்தால், 2016-17ம் ஆண்டில் 3544 மாணவர்கள் என மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை நீட் தேர்விற்கு பிறகு 2017-18-ல் 2303, 2019-20-ல் 2762 என குறைந்து இருக்கிறது. ஆனால், சிபிஎஸ்இ-ஐ எடுத்துக் கொண்டால், நீட் முன்பாக இரட்டை இலக்கத்தை தாண்டாமல் இருந்தது நீட் தேர்விற்கு பிறகு ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளதை பார்க்கலாம்.

நீட் தேர்விற்கு முன்பாக 2016-17-ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 65.66% ஆக இருந்த நிலையில் நீட் தேர்விற்கு பிறகு 2020-21-ல் 43.13% ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில், 0.39% ஆக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 26.83% ஆக உயர்ந்து இருக்கிறது.

Advertisement

நீட் தேர்வுக்கு பிறகு தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்து உள்ளது. 2016-17-ல் அரசு மருத்துவக் கல்லூரியில் 12.14% ஆக இருந்த தமிழ் வழியில் பயின்றவர்களின் சதவீதம் 2020-21ல் வெறும் 1.7% ஆக இருக்கிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மொத்த சதவீதத்தில், நீட் முன்பாக ஆங்கில வழி பயின்றவர்கள் 84.12% மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 14.88% ஆக இருந்த நிலையில், நீட் பிறகு 2020-21ல் ஆங்கில வழி பயின்றவர்கள் 98.01% ஆக அதிகரித்தும் மற்றும் தமிழ் வழி பயின்றவர்கள் 1.99% ஆக குறைந்தும் உள்ளது.

நீட் முன்பாக 2016-17ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 65.17% ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சதவீதம் நீட் தேர்விற்கு பிறகு 49.91% ஆக குறைந்துள்ளது. அதேநேரம், 34.83% ஆக இருந்த நகர்ப்புற மாணவர்களின் சதவீதம் 50.09% ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதல் தலைமுறை பட்டதாரிகளின் மருத்துவ படிப்பு சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-17-ல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 18.26 சதவீதம் ஆக இருந்தது, 2020-21-ல் 10.46 சதவீதம் ஆக குறைந்துள்ளது.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன் 2016-17ல் 47.42%-ல் இருந்து நீட் தேர்வுக்கு பிறகு 2020-21ல் 41.05% ஆக குறைந்து உள்ளது. இந்த சதவீதம் நீட் தேர்வுக்கு பிறகு 30% அளவிற்கும் குறைந்து சென்றதை பார்க்கலாம்.

நீட் தேர்விற்கு முன்பாக, அதே ஆண்டில் பள்ளி படிப்பை முடித்த 87.53% மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தனர், மீண்டும் முயற்சித்தவர் 12.47% ஆகவே இருந்தனர். ஆனால் 2020-21ம் ஆண்டில் 28.58% என தலைகீழாக மாறி உள்ளது, மீண்டும் முயற்சிப்பவர்கள் 71.42% ஆக உள்ளனர். இது நீட் தேர்விற்கு பிறகு மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் இடங்களை பெற முடிகிறது என்பதை காட்டுகிறது.

நீட் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை செலவிடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2017 முதல் நீட் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டில் இருந்து மாநில கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைப் பெறும் மாநில மருத்துவர்களின் சதவீதம் தொடர்ந்து சரிவை கண்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமடையும், தமிழ்நாட்டின் சூழலானது சுதந்திரத்திற்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்படும். எனவே, நீட் தேர்வுக்கான மசோதாவை கொண்டு வரவும், சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

Links : 

Report of the High Level Committee

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button