This article is from Apr 04, 2021

பிரச்சாரத்திற்காக மாணவி அனிதாவின் எடிட் வீடியோவை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜன்.. எழும் கண்டனங்கள் !

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவை வைத்து அதிமுகவிற்கு ஆதரவாகவும், திமுகவிற்கு எதிராக பேசுவது போன்று எடிட் செய்யப்பட்ட 45 நொடிகள் கொண்ட வீடியோவை அதிமுக அமைச்சர் பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

அந்த வீடியோவில், ” வருசத்துக்கு 427 ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் சரித்திரத்திலேயே கிடையாது. இந்த வாய்ப்பு ஜெயலலிதா அம்மாவோட ஆட்சி தந்திருக்கு. 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவ மன்னிச்சிடாதீங்க. சூரியன் உதிக்கிறது என்னமாதிரி 17 பேருக்கு அஸ்தமனம் ஆகிடிச்சு. உங்கள் கையில் இருக்கிற விரல் மை எங்கள் வாழ்க்கை. மறந்துறாதீங்க.. மன்னிச்சிடாதீங்க திமுகவ ” என பின்னணியில் பேசுவது போன்று எடிட் செய்யப்பட்டு இருக்கிறது.

அமைச்சர் மாஃபா.பாண்டியராஜனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியான இவ்வீடியோவிற்கு தலைப்போ, வேறு எந்த நிலைத்தகவலோ அளிக்கவில்லை. இறந்து போன மாணவி அனிதாவை வைத்து உருவாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும், அனிதாவின் சகோதரர் மணிரத்னம், மாஃபா.பாண்டியராஜன் மீது மோசடி புகாரை அளித்து இருக்கிறார்.

நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் புகைப்படத்தை திமுகவின் நீட் தேர்விற்கு எதிரான விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தனர். தற்போது, அனிதா அதிமுகவிற்கு ஆதரவாக பேசுவது போன்று எடிட் செய்யப்பட்ட வீடியோவையே பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் லாபத்திற்காக இறந்த பெண்ணை வைத்து விளம்பரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

கூடுதல் தகவல் : 

மாணவி அனிதாவின் எடிட் வீடியோ வெளியிட்ட 12 மணி நேரங்களுக்கு பிறகு அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த ட்வீட் பதிவும் நீக்கப்பட்டு இருக்கிறது.

Twitter link | Archive link  

அவர் வெளியிட்ட வீடியோவில், ” இன்று காலை என் ட்விட்டர் பக்கத்தில் நீட் பற்றி ஒரு ட்வீட் போடப்பட்டு இருக்கிறது. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த ட்வீட் என்னுடைய அனுமதி இல்லாமல் வந்துள்ளது. இது எப்படி வந்தது என கண்டறிந்து, அதைச் செய்தவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யும் எண்ணம் எனக்கு கிடையாது. பதிவு செய்தவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் ” எனப் பேசியுள்ளார்.

Please complete the required fields.




Back to top button
loader