நீட் மனுநீதியா ? விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு கட்டுரை !

நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட தருணத்தில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை ” மனுநீதி ” என வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
My heart goes out to the three families..! Can’t imagine their pain..!! pic.twitter.com/weLEuMwdWL
— Suriya Sivakumar (@Suriya_offl) September 13, 2020
நடிகர் சூர்யாவின் கூற்றுப்படி ” நீட் மனுநீதியா ” என யூடர்ன் தரப்பில் வெளியான வீடியோவில் வழங்கப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் விரிவாக இணைத்து உள்ளோம்.
ஆர்டிஐ தகவல் :
நீட் தேர்வு வந்த பிறகு தமிழ் வழியில் படித்த மாணவர்களின் நிலை என்ன ஆனது, குறைந்ததா அல்லது அதிகரித்ததா என்கிற கேள்வி இருக்கிறது. அந்த கேள்விக்கான பதிலை 2019-ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
” 2015-16 கல்வியாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 456 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 54 பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். 2016-17 கல்வியாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் 438 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 99 பேரும் சேர்ந்து இருக்கிறார்கள். நீட் தேர்வு வந்த பிறகு தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளது.
2017-18 கல்வியாண்டில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 40 பேரும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 12 பேர் மட்டுமே சேர்ந்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்த கல்வியாண்டான 2018-19-ல் அரசு மருத்துவக் கல்லூரியில் 88 மாணவர்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில் 18 மாணவர்களும் சேர்ந்து உள்ளதாக ” பதில் கிடைத்துள்ளது.
தோராயமாக 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியில் பயின்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில் நீட் தேர்விற்கு பிறகு தோராயமாக 100 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது.
நீட் தனியார் பயிற்சி மையங்கள் :
2019-ல் தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 23 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் தனியார் நீட் பயிற்சி மையங்களில் படிக்காமல் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 1.6% மட்டுமே. 98.4% மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களை அணுகியே நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள் என தமிழக அரசு தரவுகளை வழங்கி இருக்கிறது.
இதில், 2,041 மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,040 மாணவர்கள் மட்டுமே முதல்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் ரூ.5 லட்சம் வரை கட்டணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது (பயிற்சி மையங்களை பொறுத்து கட்டணம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்).
தமிழக மருத்துவர்கள் :
நீட் தேர்வால் தகுதியான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறுபவர்களுக்கு, நீட் தேர்வு வருவதற்கு முன்பே தமிழக மருத்துவர்களின் சாதனை என்ன என்பதை பார்க்கலாம். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 1000 பேருக்கு ஒரு மருத்துவராவது இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்தியாவில் குறைவான மக்களுக்கு அதிக மருத்துவர்கள் உள்ள மாநிலமாக தமிழகமே முதலிடம் வகிக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் 8,180 பேருக்கும், ஹரியானாவில் 6,037 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 3,767 பேருக்கும் ஒரு மருத்துவர் இருக்கிறார்.
தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகமல்ல, அவர்களின் சர்வீஸ் குறித்தும் பார்க்க வேண்டி இருக்கிறது. பிரசவத்தில் தாய் இறந்து போகும் விகிதத்தை MMR விகிதம் எனக் கூறுவர். அந்த எண்ணிக்கையைக் குறைவாகக் கொண்டு தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
2016-2018 தரவுகளின்படி, இந்தியாவில் பிரசவத்தின் போது 1,00,000 பெண்களில் 113 பேர் இறக்கிறார்கள் என்கிற விகிதம் உள்ளது. தமிழகத்தில் 1,00,000 பேருக்கு 60 பேர் மட்டுமே எனக் குறைந்து இருக்கிறது. அண்டை மாநிலங்களான கேரளாவில் (43), ஆந்திராவில் (65), தெலங்கானா (63) என்கிற அருகாமையிலேயே இருக்கிறார்கள். அசாம், பீகார் முதல் உத்தரப் பிரதேசம் வரை பல மாநிலங்களில் எம்எம்ஆர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
இதேபோல், பிறக்கும் குழந்தைகளில் இறப்பு எண்ணிக்கை விகிதத்திலும் (IMR) தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. நிதிஆயோக் வெளியிட்ட 2016-ம் ஆண்டு தரவுகளின்படி தோராயமாக ஒரே மக்கள் தொகை கொண்ட குஜராத் மாநிலத்துடன் ஒப்பிடுகையில், குஜராத்தில் பிறக்கும் 1000 குழந்தைகளுக்கு 30 குழந்தைகள் இறக்கின்றன. தமிழகத்தில் 1000 குழந்தைகளுக்கு 17 குழந்தைகளின் இறப்பு நிகழ்வதாக தரவுகள் கூறுகிறது.
நீட் மனுநீதியா ?
நீட் தேர்வு வசதிப் படைத்தவர்களுக்கு சாதகமாகவும், ஏழை மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு எதிராக இருக்கிறது எனக் கூறுவதை நிரூபிக்கும் வகையில் பல தரவுகள் அளிக்கப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க : இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !
தமிழகத்தில் 2017-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் வகுப்புவாரியான எண்ணிக்கை குறித்த ஆர்.டி.ஐ தகவலை முன்பே பலமுறை மேற்கோள்காட்டி பேசி இருக்கிறோம். இதன்மூலம்,எந்த வகுப்பினர் அதிக அளவில் தனியார் பள்ளியில் படிக்கின்றனர் என்பதையும், தமிழகத்தில் வகுப்புவாரியான எண்ணிக்கையையும் கணக்கிட முடிகிறது.
நீட் போன்ற தேர்வுகளுக்கு பின்னர், இடஒதுக்கீடு முறையால் வசதிப்படைத்தவர்கள் மட்டுமே முன்னேறி வருகிறார்கள், ஏழைகளுக்கு உதவவில்லை என்கிற கருத்தை உருவாக்கி இடஒதுக்கீட்டை நிறுத்தவும் முயற்சிக்க வாய்ப்புகள் உண்டு.
முழுமையான காணொளி :
Proof links :
6 states have more doctors than WHO’s 1:1,000 guideline
Maternal Mortality Ratio (MMR) (Per 100000 Live Births)
India registers a steep decline in maternal mortality ratio
Infant Mortality Rate (IMR) (Per 1000 Live Births)