உதவியா, நாடகமா ? நீட் தேர்வில் 104 மார்க் எடுத்தால் சீட் கிடைக்குமா ?

செப்டம்பர் 10ம் தேதி சென்னை கமலாயத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், டீக்கடை நடத்துபவரின் மகள் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து, அவர் படிப்பிற்கான செலவை தமிழக பாஜக ஏற்கும் என அண்ணாமலை உறுதி அளித்த நிகழ்வின் போது அக்கட்சியை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் கண் அசைக்க அந்த மாணவி அண்ணாமலை காலில் விழுவதாக ஓர் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Twitter link 

இதன் பிறகு மாணவி அளித்த பேட்டி தான் தற்போது பேசுப் பொருளாக மாறியும் இருக்கிறது.

அந்த மாணவி தன்னுடைய பேட்டியில், ” நான் 12-ம் வகுப்பில் 422 மார்க் எடுத்தேன், நீட் தேர்வில் 104 மார்க் எடுத்து இருக்கேன். 93 பாஸ் மார்க் என சொல்லி இருக்காங்க, ஆனா எனக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்குமா என ஒரு சந்தேகம் இருந்துச்சு. அப்போ ஒருத்தவங்க என்கிட்ட சொன்னாங்க, சாரப் போய் பாருங்க சீட் ஃப்ரீயா கிடைக்கும் என சொன்னாங்க. நீட் தேர்வு ரொம்ப கஷ்டம் என சொன்னாங்க, நிறைய பேர் நீட் தேர்வு எழுதாத பாஸ் பண்ணலைனா நம்ம மனசு தாங்காது, இறந்துருவோம்னுலா சொன்னாங்க. ஆனா, ரொம்ப கஷ்டம் இல்ல, ஈசி தான். முயற்சி பண்ணா படிக்கலாம். நான் கோச்சிங் கிளாஸ் ஏதும் போகல ” எனப் பேசி இருப்பார்.

104 மார்க் எடுத்தால் சீட் கிடைக்குமா ?

2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதிய 17,64,571 மாணவர்களில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 117-715க்கு இடைப்பட்ட மதிப்பெண் எடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 8,81,402 பேர். மீதமுள்ளவர்கள் 93-117க்கு இடைப்பட்ட மதிப்பெண்ணை பெற்றவர்கள். கடந்த ஆண்டு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணே 108 ஆக இருந்து இருக்கிறது.

இந்திய அளவில் உள்ள 612 கல்லூரிகளில் மொத்தம் 91,927 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 48,012 சீட்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 43,915 இடங்களும் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,225 சீட்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 5,500 என மொத்தம் 70 மருத்துவக் கல்லூரிகளில் 10,725 மருத்துவ சீட்கள் இந்த வருடம் நிரப்பப்பட உள்ளன.

இந்தியாவில் மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ் சீட்களே 91,927 தான், ஆனால் தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் மேல், இதிலும், 117-715க்கு இடைப்பட்ட மதிப்பெண் எடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கையே 8 லட்சத்திற்கு மேல் உள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 67,787. ஆனால், இங்குள்ள மொத்த மருத்துவ இடங்கள் 10,725 தான். இதன் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தாலே மருத்துவ சீட் கிடைத்து விடாது என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.

நீட் நிலைமை இப்படி இருக்க நீட் தேர்வில் 104 மார்க் எடுத்த மாணவிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைக்க வாய்ப்பில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களால் அரசுக் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் படித்து முடிக்க முடியும்.

அதுமட்டுமின்றி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு கோட்டாவிலும் சீட் கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு கோட்டாவில் சேர்ந்த மாணவர்களின் குறைந்தபட்ச நீட் மதிப்பெண்ணே 280 ஆக இருந்து இருக்கிறது.

தனியார் கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணம் என்ன என்று பார்த்தால், அரசு கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.4 லட்சமும், மேனேஜ்மெண்ட் கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கும் ஆண்டிற்கு ரூ12,50,000 அரசு தரப்பில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மேனேஜ்மெண்ட் கோட்டாவை பொறுத்தவரையிலும், வருடத்திருக்கு 12.5 லட்சம் (அரசு நிர்ணயத்தில்) என்ற உயரிய பணம் தேவை . மெரிட் அடிப்படையில் தனியார் , அரசு கல்லூரி இரண்டிலும் இவருக்கு சீட் கிடைப்பது கடினம் . மேனேஜ்மெண்ட் கோட்டாவில் கிடைப்பது கடினம் மற்றும் பெருஞ்செலவு.

2018ம் ஆண்டு ஓட்டல் காவலாளி மகள் நீட் தேர்வில் வெற்றி என நீட் தேர்விற்கு ஆதரவாக செய்திகளும், பதிவுகளும் வெளியாகின. ஆனால், அதே மாணவி நீயா நானா நிகழ்ச்சியில் பேசும் போதும், 3 முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் மருத்துவம் சீட் கிடைக்கவில்லை எனப் பேசியது குறிப்பிடத்தக்கது. அப்போதே அந்த மாணவி உக்ரைனில் மருத்துவம் படிக்க போவதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க : கூலி தொழிலாளியின் மகன் NEET தேர்வில் தேர்ச்சிப் பெற்றாரா ?

மேலும் படிக்க : “நீட்” சரியான புள்ளிவிவரங்கள் !

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே மருத்துவம் படிக்க சீட் கிடைத்து விடாது. அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலையிலும், போட்டியும் அங்குள்ளது. இதற்காக, நீட் கோச்சிங் சென்டரில் தொடர்ந்து சில ஆண்டுகள் செலவு செய்து பயிற்சி எடுத்து அதிக மதிப்பெண்கள் எடுப்பவர்களின் எண்ணிக்கையே இங்கு மிக அதிகம்.

தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாடும், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரல்களும் தொடர்ந்து எழுந்து வருவதால், நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களுக்கான ஒன்று என்கிற பிம்பத்தை பாஜகவினர் தொடர்ந்து உருவாக்க முயற்சிக்கின்றனர். அந்த முயற்சியில், நீட் தொடர்பாக பல வதந்திகளும், தவறான தகவல்களையும் பரப்பி வந்ததை நாம் பலமுறை முறியடித்தும் உள்ளோம்.

இம்முறை அரசுப் பள்ளி மாணவியை வைத்து நீட் தேர்விற்கு ஆதரவாக பாஜக உருவாக்க முயன்ற பிம்பம் அவர்களுக்கே எதிர் விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.

அந்த மாணவி இவர்களை நம்பி காலில் விழுந்து சீட் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இருக்கிறார் . தனியாரில் அண்ணாமலை செல்வாக்கில் பெற்று, அந்த பெருஞ்செலவை ஏற்பாரா ?

links : 

NEET 2022 : Over 91 thousand MBBS seats available in India, complete state wise list

National Eligibility cum Entrance Test (UG) – 2022

Please complete the required fields.




Back to top button
loader