This article is from Jul 30, 2021

நீட் பாஸ் ! ஆனால் மருத்துவப் படிப்பில் தடுமாறும் மாணவர்கள் – ஏ.கே.ராஜன் குழு உறுப்பினரின் தகவல் !

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்விற்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசியல் களம் கொண்டிருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய திமுக இந்த ஆண்டில் நீட் தேர்வை ரத்து செய்யவில்லை என எதிர்கட்சிகளால் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளானது.

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய திமுக அரசு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு புள்ளி விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்த தரவுகள் மற்றும் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் கருத்துக்கள் அடங்கிய 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் வழங்கியது.

இந்நிலையில், ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்ற கல்வியாளர் ஜவஹர் நேசன், ப்ளஸ் 2 மதிப்பெண் மூலம் எம்.பி.பி.எஸ் படித்த மாணவர்களை விட நீட் மூலம் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறும் வேறுபாடு இருப்பதாக தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து யூடர்ன் தரப்பில் பேசிய போது, ” 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என மாணவர்கள் படித்து விட்டு வரும் போது எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டில் அதை விட கூடுதலாக அடிப்படை அறிவியல் சார்ந்து இருப்பதால் பெரிதாக வித்தியாசம் இல்லை. ஆனால், இரண்டாம் ஆண்டில் சுயமாக சிந்திக்க வேண்டிய சூழல் போன்றவை இருப்பதால் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் படித்த மாணவர்களை விட நீட் மூலம் வரும் மாணவர்களின் திறன் குறைவாக இருக்கிறது என்கிற வேறுபாட்டை ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் உள்ள 16 அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் நீட்  தேர்விற்கு முன்பு, நீட் தேர்விற்கு பிறகு என பார்த்ததில் நீட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் இரண்டாம் ஆண்டில் பின்னடைவு இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான பல தரவுகள் அனைத்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை வெகு விரைவில் தமிழக அரசு வெளியிடும் ” எனக் கூறி இருந்தார்.

நீட் தொடர்பான விவாதங்கள் எழும் போது திறமையான மருத்துவர்களை உருவாக்கவே நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறப்படுவதை பார்த்திருக்கக்கூடும். ஆனால், நீட் தேர்வில் கூட குறிப்பிட்ட பாடத்தில் நல்ல மதிப்பெண்ணும், மற்ற பாடத்தில் நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களும் கூட மருத்துவம் படிக்கிறார்கள் எனும் தகவல்களை நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : “நீட்” சரியான புள்ளிவிவரங்கள் !

ஜவஹர் நேசன் அவர்களின் தகவலால் நீட் அடிப்படையில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் திறன் குறித்து கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணங்களையும் அறிய வேண்டிய தேவை இருக்கிறது. முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும் பட்சத்தில் தரவுகள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிக்கும் மாணவர்களின் திறன் குறித்து அறியக்கூடும்.

Please complete the required fields.




Back to top button
loader