நீட் ஆதரவு புரளிகள் விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

” Neet ஆதரவு புரளிகள் ” எனும் தலைப்பில் நீட் தேர்விற்கு ஆதரவாக பரப்பப்படும் புரளிகள் குறித்து வெளியிடப்பட்ட விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பை இக்கட்டுரையில் இணைத்துளோம்.
மேலும் படிக்க : “நீட்” ஆல் பாதிக்கப்படும் தமிழ்வழி மற்றும் கிராமப்புற மாணவர்கள் – ஏ.கே ராஜன் குழுவின் அறிக்கை !
சுமந்த் சி ராமன் :
ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தாக்கல் செய்த நீட் தொடர்பான தரவு அறிக்கை குறித்து பேசிய சுமந்த் சி ராமன், நீட் தேர்வு முன்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்பாக 2 வருட தரவுகளே இருப்பதாகவும், மற்ற அட்டவணைகளில் 10 வருட தரவுகள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனால், இது அரசு பள்ளி மாணவர்களுக்கான சிக்கல் மட்டும் அல்ல. நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள், தமிழ்வழி மாணவர்களுக்கான பாதிப்பு குறித்து முன்பே ஆர்.டி.ஐ தகவல் உடன் நாம் பேசி இருக்கிறோம். தற்போது அதற்கான சரியான விடையாக ஏ.கே.ராஜன் அறிக்கை அமைந்துள்ளது. அந்த தரவுகள் குறித்து சுமந்த் சி ராமன் ஏன் பேசுவதில்லை எனத் தெரியவில்லை.
நீட் குழு அறிக்கையில் 99 சதவீத மாணவர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றே தேர்ச்சி பெறுவதாக எதை வைத்து கூறுகிறார்கள் என தரவுகளை கேட்டு உள்ளார். ஆனால், 2019-ம் ஆண்டில் நீட் தேர்வு லட்சங்களில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் மாணவர்களுக்கே பயன் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் கிராமப்புறத்தில் பணி செய்வார்கள், நகர்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் கிராமப்புறத்தில் பணி செய்யமாட்டார்கள் என எதை வைத்து சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
மருத்துவம், சுகாதாரம் குறித்து விரிவாக எழுதக்கூடிய The lancet, ” கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறையை இந்தியா தொடர்ந்து சந்திப்பதாக ” 2015-ல் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. அதில், நகர்புறத்தை சேர்ந்த மருத்துவர்களுக்கு கிராமப்புறங்களில் சேவை செய்ய விருப்பம் இல்லை எனக் கூறப்படுவதை பார்க்கலாம்.
2021 பிப்ரவரியில் globalhealthnow எனும் இணையத்தளத்திலும், இந்தியாவில் கிராமப்புற மருத்துவர்கள் குறைவு பிரச்சனையை தெளிவாக அலசி உள்ளது.
ரங்கராஜ் :
ஏ.கே.ராஜன் குழு அறிக்கை குறித்து பேசிய திரு.ரங்கராஜ் அவர்கள், நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த 86 ஆயிரம் பேரில் 21 ஆயிரம் பேர் ஆதரவாக கருத்து கூறியுள்ளதாக தெரிவித்து இருந்தார். இதில் 65 ஆயிரம் பேர் அறிவியல் பாடம் படிக்காத மாணவர்களின் பெற்றோர் என்றும், ஆதரவாக வந்த 21 ஆயிரம் பேர் அறிவியல் பாடம் படித்த மாணவர்களின் பெற்றோர்கள் எனக் கூறி இருக்கிறார். ஆனால், இந்த 65 ஆயிரம் பேர் அறிவியல் பாடம் படிக்காத மாணவர்களின் பெற்றோர் எனக் கூறும் கருத்தித்தை எதை வைத்துக் கூறினார், அதற்கான தரவை அவர் அளிக்கவில்லை.
2017-க்கு பிறகு தமிழ் படித்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது, மாணவர்கள் சிபிஎஸ்இ நோக்கி நகர்கின்றனர் எனக் கூறி இருந்தார். அரசு, சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் என பிரிவுவாரியாக தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கையை ஏ.கே.ராஜன் அறிக்கையில் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவே. 2.1% மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.
நீட் முன்பாக 1 சதவீதத்திற்கும் குறைவான சிபிஎஸ்இ மாணவர்கள் மருத்துவ இடங்களை பெற்ற நிலையில், நீட் தேர்விற்கு பிறகு 30% மேற்பட்ட இடங்களை இந்த 2.1% பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெற நீட் வழிவகை செய்து இருக்கிறது.
நீட் தேர்விற்கு பிறகு மருத்துவப் படிப்புகளில் பொதுப்பிரிவிற்கான போட்டியில் முன்னேறிய வகுப்பினரின் சதவீதம் உயர்ந்துள்ளது எனும் தரவையும் ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் அளித்து இருக்கிறது.
links :
neet-has-benefitted-only-students-who-spend-lakhs-on-coaching-classes-madras-hc
India still struggles with rural doctor shortages
Helping Doctors Reach Rural India
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.