“நேரு” பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள்| படங்களில் இருப்பவர்கள் யார் ?

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உடைய பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, குழந்தைகள் தினத்தன்று நேரு பல பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகிறது. அரசியல் எதிர் கருத்து கொண்டவர்களும் இப்புகைப்படங்களை பகிர்ந்து விமர்சித்து இருப்பதை அதிகம் காணலாம்.
அப்படி பகிரப்படும் புகைப்படங்களில் நேரு உடன் இருக்கும் பெண்கள் பற்றி பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை. அத்தகைய புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளன என்பதை விளக்கவே இக்கட்டுரையை எழுதுகிறோம்.
முதல் படம் 1 :
முதல் புகைப்படத்தில் நேருவுடன் இருக்கும் பெண் அவரின் தங்கை விஜயலட்சுமி பண்டித் . 1949-ம் ஆண்டு விஜயலட்சுமி பண்டித் அமெரிக்க ஒன்றியத்தின் இந்திய தூதராக இருந்தார். இந்த புகைப்படம் தன்னுடைய சகோதரரின் அமெரிக்க வருகையின் போது விஜயலட்சுமி பண்டித் வரவேற்ற தருணத்தில் எடுக்கப்பட்டவை.
To Prove Hardik And Nehru Are Womanisers, BJP IT Cell Head Tweets Pictures Of Nehru Embracing..His Sister Vijayalakshmi Pandit https://t.co/PRsOnMEToB pic.twitter.com/WnENOIo9hw
— Outlook Magazine (@Outlookindia) November 16, 2017
படம் 2 :
இரண்டாம் படமானது, நேரு மற்றும் எட்வீனா மவுண்ட்பேட்டன் ஆகியோர் வேடிக்கையாக பேசிக் கொண்டிருக்கும் பொதுவான சூழ்நிலையில் எடுக்கப்பட்டவை. நேருவை அதிக விமர்சிக்கப் பயன்படுத்திய புகைப்படங்களில் எட்வீனா உடன் இருக்கும் புகைப்படம் முதன்மையாக இருக்கும்.
படம் 3 :
அடுத்ததாக மூன்றாவதாக உள்ள புகைப்படத்தில் நேரு கட்டியணைத்து இருக்கும் பெண் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டித் அவர்களே . இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட சமயத்தில் அவர் ரஷ்யாவின் தூதராக இருந்தார் . மேலும், இப்புகைப்படம் டெல்லி விமானம் நிலையத்தில் நேருவால் வரவேற்கப்பட்ட பொழுது எடுக்கப்பட்டது.
படம் 4 :
நேரு புகைபிடிக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், எதற்காக இந்த புகைப்படத்தை இணைத்தார்கள் எனத் தெரியவில்லை. நேரு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவரே. அவர் புகைபிடிக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் உள்ளன.
படம் 5 :
இப்புகைப்படத்தில் நேரு உடன் இருப்பவர் மிரிநாளினி சாராபாய். 1948-ம் ஆண்டு டெல்லியில் மனுஷ்யா கலை நிகழ்ச்சிக்கு பிறகு மிரிநாளினி சாராபாய் அவர்களை நேரு பாராட்டிய பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம். மிரிநாளினி சாராபாய் கணவர் விக்ரம் சாராபாய் குடும்பம் நேருவுடன் நண்பர்களாக இருந்தவர்கள். இப்புகைப்படம் குறித்து மிரிநாளினி சாராபாய் கூறியவை லைவ்மின்ட் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
படம் 6 :
அடுத்ததாக உள்ள புகைப்படமானது 1962-ல் ஜக்குலின் கென்னடி இந்தியாவிற்கு முதல் முறையாக வருகை தந்த பொழுது, அவருக்கு நேரு ” திலகம் ” வைத்த புகைப்படமே இது.
படம் 7 :
நான்காவது புகைப்படத்திலேயே நேரு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் எனக் கூறி இருந்தோம். இந்த புகைப்படத்தில், இந்தியாவின் முதல் BOAC விமானத்தில் பிரிட்டிஷ் டெபுட்டி ஹை கமிஷனரின் மனைவி சிமோன் உடன் நேரு பயணித்த பொழுது அவருக்கு சிகரெட் பற்ற வைத்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
படம் 8 :
இப்புகைப்படத்தில் நேருவுடன் இருப்பவர் , எட்வீனா மவுண்ட்பேட்டன் உடைய 18 வயது மகள் . மவுண்ட்பேட்டனின் மகள் பமீலா மவுண்ட்பேட்டன் தன் குடும்பத்தினர் உடன் புது டெல்லியில் இருந்து செல்லும் போது நேரு உடன் இருக்கும் புகைப்படம்.
படம் 9 :
இறுதியாக, நேருவின் கன்னத்தில் முத்தமிடும் பெண் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டித் உடைய மகள் நயன்தாரா செங்கால் . 1955-ல் நேரு லண்டன் விமான நிலையத்தில் இறங்கிய பொழுது அவரின் தங்கை விஜயலட்சுமி பண்டித் வரவேற்கும் காட்சியில், நேருவின் மருமகள் முத்தமிடும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. அந்த சமயத்தில், விஜயலட்சுமி பண்டித் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு(UK) ஹை கமிஷனராக இருந்தார்.
இப்படி நேருவின் தங்கை, மருமகள் மற்றும் குடும்ப நண்பர்கள் இடம்பெற்ற புகைப்படங்கள் மற்றும் பிற புகைப்படங்களை இணைத்து நேரு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் தருணங்கள் என அரசியல் சார்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி உள்ளனர். இதில், பல புகைப்படங்கள் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்பட்டவை.
கடந்த சில ஆண்டுகளாக இந்த புகைப்படங்களின் தொகுப்பை வைத்தே நேருவின் மீதான விமர்சனங்களை செய்து வந்துள்ளனர். இந்த புகைப்பட தொகுப்பில் இருப்பவர்கள் யார் என்பதையும், எப்பொழுது எடுக்கப்பட்டது என்பதையும் இக்கட்டுரையின் மூலம் அறிந்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்.
Links :
rare-photographs-of-pandit-nehru
Mr Nehru Arrives At London Airport (1955)