This article is from Jan 29, 2022

NeoCov மனிதர்களுக்கு இன்னும் பரவவில்லை, கோவிட்19-ன் புதிய மாறுபாடும் இல்லை !

சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் ” NeoCov (நியோகோவ்) ” எனும் புதிய வகை கொரோனா வைரசைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்துள்ளதாகவும், அதிக பரவல் வேகமும், 3-ல் ஒருவருக்கு மரணம் என அதிக உயிரிழப்பு விகிதத்தை கொண்டிருக்கும் என தகவல் வெளியிட்டு உள்ளதாகவும் இந்திய அளவில் அனைத்து செய்தி ஊடகங்களில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவின் வூகான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், ” கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த ” நியோகோவ் ” வைரல் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை www.biorxiv.org தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால், நியோகோவ் வைரல் முதல்முதலில் 2013-ம் ஆண்டில் விவாதிக்கப்பட்டது, அதன் பிறகு 2014-ல் ” Rooting the phylogenetic tree of middle East respiratory syndrome coronavirus by characterization of a conspecific virus from an African bat ” எனும் தலைப்பில் அறிக்கைகள் வெளியாகின. இது முன்பே தென்ஆப்ரிக்காவில் வௌவால்களிடம் கண்டறியப்பட்டது.

கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நியோகோவ் வைரல் ஆனது வௌவால்களிடம் காணப்படுகிறது. இதில் மரபணு மாற்றம் ஏற்பட்டு மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் என சீன விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நியோகோவ் வைரல் இன்னும் மனிதர்களுக்கு இடையே பரவவில்லை. இது கோவிட்-19 உடைய புதிய மாறுபடும் அல்ல. 

இதற்கிடையில், ” நியோகோவ் என்பது மெர்ஸ்கோவ் உடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பழைய வைரஸ். இது DPP4 ஏற்பிகள் வழியாக செல்களுக்குள் நுழைகிறது. இதில் புதியது என்னவென்றால், நியோகோவ் வௌவால்களின் ace2 ஏற்பிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் புதிய பிறழ்வு ஏற்படாதவரை அவை மனித ace2 ஏற்பிகளை பயன்படுத்த முடியாது ” என மகாராஷ்டிரா மாநில கோவிட்-19 பணிக்கழுவின் உறுப்பினரும், சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவருமான டாக்டர் சஷாங் ஜோஷி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

மனிதர்களுக்கு ஏற்படும் 75% தொற்று நோய்களுக்கு விலங்குகள் ஆதாரமாக உள்ளன. பொதுவாக, கொரோனா வைரஸ் விலங்குகளில்(குறிப்பாக வௌவால்கள்) இருந்து தான் வருகின்றன. ஆகையால், நியோகோவ் வைரஸ் வௌவால்களிடம் கண்டறியப்பட்டு உள்ளதாக வெளியான ஆய்வறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும், கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த நியோகோவ் வைரஸ் வௌவால்களிடம் மட்டுமே காணப்படுகிறது, இதுவரை ஒரு மனிதரைக்கூட நியோகோவ் வைரஸ் பாதிக்கவில்லை, அதனால் யாரும் இறக்கவும் இல்லை. நியோகோவ் வைரஸ் கோவிட்-19 உடைய புதிய மாறுபாடு அல்ல. ஆகையால், தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கவும்.

Please complete the required fields.




Back to top button
loader