பெட்ரோலுக்காக நேபாளம் செல்லும் இந்தியர்கள்.. கடத்தல் அதிகரிப்பதால் நேபாளம் எடுத்த முடிவு !

இந்தியாவின் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 90ரூ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையின் தொடர் உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், அண்டை நாடான நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டது கள்ள சந்தை விற்பனை நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110 நேபாலிஸ் ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு இந்தியா ரூபாயில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.70, டீசல் 60ரூ மட்டுமே என்பதால் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அந்நாட்டிற்கு படையெடுத்து செல்கின்றனர். இதிலும், நேபாளம் இந்தியாவிடம் இருந்து தான் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்டவையை வாங்கி வருகிறது. நேபாளம் போன்ற சிறிய நாட்டில் தேவையும், விலையும் குறைவு. ஆனால், இந்தியாவில் எரிபொருள் தேவை அதிகம்.
எல்லைப் பகுதி, செல்லக்கூடிய இந்தியா ரூபாய் என நேபாளம் சென்று பெட்ரோல், டீசல் வாங்குபவர்களுக்கு சாதகங்களாக அமைந்து விடுகிறது. இந்தியாவில் இருந்து லாரிகள், இருசக்கர வாகனங்கள் கூட நேபாள எல்லையோரங்களில் உள்ள பங்குகளுக்கு சென்று பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொள்வது சட்டப்படி குற்றமில்லை எனக் கூறப்பட்டாலும், அது கள்ள சந்தையாகவும் உருவெடுத்து உள்ளது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இச்சம்பவங்கள் அதிகம் நிகழ்கின்றன.
வடக்கு பீகாரில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் எல்லையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் தேவையும் அதிகரித்து வருகிறது. நேபாளத்திற்கு ஒரு நாளைக்கு 5 முறை இருசக்கர வாகனத்தில் சென்று 70ரூபாய்க்கு வாங்கி வரும் பெட்ரோலை 90-95ரூ என விற்பனை செய்வதாக ஒருவர் செய்தி தளத்திற்கு தெரிவித்து இருக்கிறார். சில பகுதியில் சாலையோரங்களில் குறைந்த விலைக்கு சில்லறையாக பெட்ரோல், டீசல் விற்பனையும் நிகழ்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நேபாளத்திற்கு சென்று விடுகிறார்கள். மக்கள் விலை குறைந்த பெட்ரோலுக்காக நேபாளத்திற்கு செல்வதால் விற்பனையில் 15-20% பாதிக்கப்படுவதாக தனக்பூரில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் நியூஇந்தியன்எக்ஸ்பிரஸ் செய்திக்கு தெரிவித்து உள்ளார்.
எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் கிஷான்கஞ் எஸ்.பி குமார் ஆஷிஷ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்திக்கு தெரிவித்து இருக்கிறார்.
கடந்த வாரத்தில், நேபாளத்தில் இருந்து 1,360 லிட்டர்(359 கேலன்) டீசல் ஏற்றப்பட்டஒரு பெரிய எண்ணெய் ட்ரக் இந்தியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது என போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக லைவ் மின்ட் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசலுக்காக நேபாளத்திற்கு வருவதை கட்டுப்படுத்த நேபாள அரசும் சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பெட்ரோல் பங்க்களில் இந்திய வாகனங்களுக்கு 100 லிட்டருக்கு மேல் வழங்கக்கூடாது மற்றும் கேலன்களில் பெட்ரோல், டீசல் வழங்கக் கூடாது என நேபாள எண்ணெய் கழகம் அறிவித்துள்ளது.
இந்திய எல்லைகளில் இருந்து நேபாளத்திற்கு சென்று பெட்ரோல், டீசல் கடத்துவது கடந்த 2018-ம் ஆண்டிலும் நிகழ்ந்து இருக்கிறது. அப்போது பெட்ரோல் விலை இந்தியாவில் 85ரூ, நேபாளத்தில் 65ரூ ஆக இருந்தது.
இந்தியா, நேபாளம் பெட்ரோல் விலை ஒப்பீட்டை சமூக வலைதளங்களில் ஏன் அரசியல் கட்சியினர் கூட பயன்படுத்தி கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ” பெட்ரோல், டீசலை குறைவாக பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு. பொதுவாக அதிகமாக எரிபொருள் நுகரப்படும் பொருட்கள் விலை அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.32, அதுவே நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் ரூ57 மற்றும் ரூ.59 வரை விற்பனை செய்யப்படுகிறது ” என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதில் அளித்து இருந்தார்.
இந்தியாவிடம் பெட்ரோல், டீசல் வாங்கும் நேபாளத்திற்கு சென்று இந்தியர்கள் பெட்ரோல், டீசல் வாங்கி வருவதாக சமூக வலைதளங்களில் கிண்டல், நையாண்டி செய்து வருகிறார்கள். ஆனால், விலை உயர்வால் இந்தியா-நேபாளம் எல்லைப் பகுதியில் பெட்ரோல், டீசல் கள்ள சந்தை விற்பனையாக உருவெடுத்து இருக்கிறது.
Links :
Nepal caps fuel supply as peddlers from India borders strike it rich
Petrol price hike impact: Cheap fuel smuggled in from Nepal
high gas diesel prices in india prompt smuggling of fuel from nepal