ஜூன் 1 லிருந்து அறிமுகமாகும் புதிய ஓட்டுநர் உரிம விதிகள்.. இனி RTO அலுவலகம் செல்ல தேவையில்லையா?

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் ஜூன் 1, 2024 முதல் புதிய ஓட்டுநர் உரிம விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செயல்முறைகளை எளிதாக்கும் நோக்கில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.

புதிய ஓட்டுநர் உரிம விதிகள்:

வருகின்ற ஜூன் 1 முதல் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்டிஓ (RTO) அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனங்களில் மக்கள் ஓட்டுநர் சோதனைகளை மேற்கொள்ள முடியும். எனவே ஓட்டுநர் உரிமத் தகுதிக்கான சான்றிதழ்களை இனி தனியார் ஓட்டுநர் நிறுவனங்களே வழங்கும். 

விண்ணப்பதாரர் தனியார் பள்ளிகளில் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மூலம் RTO அலுவலகத்தில் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் ஓட்டுனர் உரிமம் பெற முடியும். இவ்வாறு ஓட்டுநர் தேர்வை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சான்றிதழ்களை ஒன்றிய அரசே வழங்கும். இருப்பினும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் ஒன்றிய அரசிடம் சான்றிதழ் பெறாத பட்சத்தில், விண்ணப்பதாரர் ஆர்டிஓவில் நடத்தப்படும் ஓட்டுநர் தேர்வில் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும்.

மேலும் புதிய விதிமுறைகளின் படி, ஓட்டுநர் பயிற்சி உரிமம் வழங்கும் தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்திற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களுக்கு,  ஓட்டுநர் மையத்தில் கூடுதலாக 2 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். ஆனால் சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் இடநெருக்கடி இருப்பதால், இந்த விதிகளை அமல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

தனியார் ஓட்டுநர் உரிம பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். இதைத்தவிர பயிற்சியாளர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  பயோமெட்ரிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் குறித்தும் பயிற்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் கார் ஓட்டினாலோ, அதிவேகமாக வாகனம் ஓட்டினாலோ இப்போது ₹1,000 முதல் ₹2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய விதிகளின் படி, 18 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் இனி ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அவரின் வாகன பதிவு சான்றிதழும் ரத்து செய்யப்படும். சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

900,000 பழைய அரசு வாகனங்களை படிப்படியாக வெளியேற்றுவதன் மூலம் மாசுபாட்டைக் குறைக்கவும்,  கடுமையான கார் மாசுபாட்டு விதிமுறைகளை அமல்படுத்தவும் இந்த புதிய விதிகள் நோக்கமாக கொண்டுள்ளன. இதன் மூலம் அரசு மின்சார வாகனங்களை (EV கள்) ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிக்கிறது.

ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் புதிய ஓட்டுநர் உரிமம் பெறும் விண்ணப்பதாரர்களுக்கு இப்போது குறைவான ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இதன் மூலம் புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்களையும் அமைச்சகம் தனது இணையதளத்தில் எளிமைப்படுத்தியுள்ளது.

பயிற்சி காலங்கள்:

  • இலகு ரக வாகனப் பயிற்சியை (For Light Motor Vehicles) 4 வாரங்களில் (குறைந்தபட்சம் 29 மணிநேரம்) முடிக்க வேண்டும்.  பயிற்சியை குறைந்தது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். இதில், தியரி வகுப்புகள் (Theoritical Training) 8 மணி நேரமும், நடைமுறை பயிற்சிகள் (Practical Training) 21 மணி நேரமும் இருக்க வேண்டும்.
  • கனரக மற்றும் நடுத்தர மோட்டார் வாகனங்களுக்கு (Heavy and Medium Motor Vehicles), 38 மணிநேர பயிற்சி இருக்கும்.  இதில் 8 மணிநேர தியரி வகுப்புகள் (Theoritical Training) மற்றும் 31 மணிநேர நடைமுறை பயிற்சிகள் (Practical Training) ஆகியவை அடங்கும். இந்த பயிற்சி 6 வாரங்களுக்குள் முடிக்கப்படும்.

புதிய விதிகளின் படி கட்டண விவரங்கள்:

வரிசை எண். ஓட்டுனர் உரிமத்தின் வகைகள் திருத்தப்பட்ட கட்டணம்
           1 கற்றல் உரிமம் (Learner’s Licence)            ₹200
           2 கற்றல் உரிமம் புதுப்பித்தல் (Learner’s License Renewal)            ₹200
           3 சர்வதேச உரிமம் (International Licence)            ₹1,000
           4 நிரந்தர உரிமம் (Permanent Licence)            ₹200
           5 நிரந்தர உரிமம் புதுப்பித்தல் (Permanent License Renewal)            ₹200
           6 புதுப்பிக்கப்பட்ட ஓட்டுனர் உரிமத்தின் வெளியீடு (Issue of a Renewed Driver’s License)            ₹200

 

விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் 

  • https://parivahan.gov.in என்ற இணையதள முகவரி பக்கத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்ப படிவத்தில் மாநில விபரங்கள் உட்பட, தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
  • படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • உங்கள் விருப்பத்தைப் பொறுத்து ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப செயல்முறையை முடித்த பிறகு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கும் உங்கள் ஆதாரங்களை வழங்குவதற்கும் ஆர்டிஓ அலுவலகத்தை அணுகவும்.
  • அனைத்து படிகளையும் சமர்பித்த பிறகு, உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.

ஆதாரங்கள்:

https://www.thehindu.com/news/national/new-driving-licence-rules-2024-all-you-need-to-know/article68202847.ece

https://indianexpress.com/article/what-is/new-driving-license-rules-in-india-from-june-1-heres-all-you-need-to-know-9356575/

https://www.thehindu.com/news/national/controversy-surrounds-new-driving-license-rules-stakeholders-express-doubt/article68217892.ece

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader