138 ஆண்டுகளுக்கு பின்பு அறிவிக்கப்பட்டுள்ள தகவல் தொலைத்தொடர்பு சட்டங்கள்.. அவசியமும், சிக்கல்களும் !

பத்திரிகை, பொழுதுபோக்கு மற்றும் இணைய சேவைகளில் உச்சபட்ச வரம்பைக் கொண்டுள்ளதா அரசு..? ஓர் பார்வை !

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறை தற்போது வரை பின்வரும் மூன்று சட்டங்களின் கீழே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

(i) இந்தியத் தந்திச் சட்டம் 1885 – தந்தி தொடர்பான நடவடிக்கைகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் தகவல் தொடர்பு இடைமறிப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

(ii) இந்திய கம்பியில்லா தந்தி சட்டம் 1933 – கம்பியில்லா தந்தி சேவைகளுக்கான கருவிகள் வைத்திருப்பதை ஒழுங்குபடுத்துவதற்காக உள்ளது.

(iii) தந்தி கம்பிகளை வைத்திருப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான தந்தி கம்பிகள் (சட்டவிரோத உடைமை) சட்டம், 1950 – கம்பியில்லா தந்தி சேவைகளுக்கான கருவிகள் சட்டவிரோதமாக வைத்திருப்பதை தடுக்கிறது.

இந்நிலையில் பெரும்பான்மையான எதிர்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையிலும், மக்களவையில் கடந்த டிசம்பர் 20 அன்றும், மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் 21 அன்றும் தகவல் தொலைதொடர்பு தொடர்பான பின்வரும் மூன்று புதிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

1 . தொலைதொடர்பு மசோதா 2023

2. வரைவு ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதா

3. டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2023

இதன் மூலம் கடந்த 138 ஆண்டுகளாக இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையை நிர்வகித்து வந்த “இந்தியத் தந்திச் சட்டம் 1885”-க்கு மாற்றாக இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய மசோதாக்கள் இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை கட்டமைப்பு மற்றும் உரிமை வழங்கும் முறைகளில் பல திருத்தங்களைக் கொண்டுள்ளது. இந்த மசோதாவின் முதன்மையான விதிகளில், தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை நிறுவுதல், இணைய சேவைகளை வழங்குதல், ஸ்பெக்ட்ரம் சேவைகளை ஒதுக்குதல் மற்றும் இத்தகைய சேவைகளுக்கான அங்கீகாரத்தை கட்டாயப்படுத்துதல் ஆகியவை அடங்கியுள்ளன. 

மேலும் இதில் பயனர்களைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் உட்பட குறிப்பிட்ட காரணங்களுக்காக தகவல் தொடர்புகளை இடைமறிக்கவும் (interception) இது அனுமதிக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு ஏலமற்ற வழியை வழங்கவும் இந்த மசோதா அரசுக்கு உரிமையளிக்கிறது.

இதுதவிர தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு, Universal Service Obligation Fund மற்றும் அபராதங்கள் போன்றவற்றில் இந்த மசோதா பல சிக்கல்களையும் கொண்டுள்ளது. மேலும் ‘இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்’ (TRAI) மற்றும் ‘தொலைத்தொடர்பு தகராறுகளுக்கான தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ (TDSAT) போன்றவை தற்போது வரை ‘TRAI சட்டம் 1997’ மூலம் நிறுவப்பட்டு வந்த நிலையில், இந்த புதிய மசோதாக்கள் TRAI நியமனங்களிலும் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன.

தொலைத்தொடர்புத் துறையின் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகளை முழுமையாக மாற்ற காரணம் என்ன?

Text, ஒலி (Sound), படங்கள் (Pictures) மற்றும் வீடியோ தரவுகளில் (video data) நிகழ்நேர பரிமாற்றத்தை (Real-time transmission) செயல்படுத்துதல் போன்ற பழைய தொழில்நுட்பங்களிலிருந்து, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தற்போது குரல் அழைப்பு (Voice calling,), SMS, வானொலி ஒலிபரப்பு (radio broadcasting), தொலைக்காட்சி மற்றும் மெசேஜ் மற்றும் வீடியோ அழைப்புக்கான இணையம் சார்ந்த தகவல் தொடர்பு சேவைகள் என மிகப்பெரிய அளவில் முன்னேறி உள்ளது. இதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையின் அபரிவிதமான வளர்ச்சி, தொலைத்தொடர்பு துறைக்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மேலும், இணைய சேவைகளை வழங்க கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துதல் போன்ற பல தொழில்நுட்பங்களின் மூலம் ஒரே மாதிரியான சேவைகளை மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. எனவே தொலைத்தொடர்புத் துறையின் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கும் வகையில், தொலைத்தொடர்புகளின் தன்மை மற்றும் அதன் பயன்பாடுகள் தற்போது மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மசோதாவின் கீழ் ஒன்றிய அரசு நிறைவேற்றும் முதன்மையான ஒழுங்குமுறைக் கடமைகள் என்ன?

தொலைத்தொடர்பு மசோதா, 2023ன் படி, ஒன்றிய அரசு பின்வரும் முக்கிய ஒழுங்குமுறை செயல்பாடுகளை மேற்கொள்ளும்:

– தொலைத்தொடர்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்தல் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தல்.

– அனுமதி அல்லது பணி நியமன விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் மீறல்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் புகார்களைக் கேட்டல்.

– தகவல் தொலைத்தொடர்பு தொடர்பான தரநிலைகளைக் (standards) கணக்கிடுதல் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள், நெட்வொர்க்குகள் மற்றும் சேவைகளை மதிப்பிடுதல்.

– உரிய அதிகாரங்கள் வழங்கி செய்யப்படும் மின்சாரம் மற்றும் வங்கி போன்ற துறைகளிலிருந்து இனி பின்வரும் பணிகள் தனித்தனியாக இயங்கும் என்றும் இந்த மசோதாக்கள் கூறுகின்றன.

(i) தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளை உருவாக்கி இயக்குதல்

(ii) தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குதல்

(iii) சொந்த வானொலி உபகரணங்களுக்கு, ஒன்றிய அரசின் ஒப்புதல் வாங்குதல்

– அங்கீகரிக்கப்படாத தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகள் அல்லது உபகரணங்கள் உள்ளதா என்பதை அறிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் மூலம் இனி உரிய வளாகங்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சரிபார்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

– அரசின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு அல்லது குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தொலைத்தொடர்புதுறையை இடைமறிக்கும் மற்றும் இணையத்தை முடக்குவதற்கான அதிகாரத்தையும் இந்த புதிய மசோதாக்கள் கொண்டுள்ளன.

– குறிப்பிட்ட தகவல்தொடர்புகளைப் பெறுவதற்கு முன் அனுமதி பெறுதல் (prior approval) மற்றும் தொந்தரவு செய்யாத பதிவேட்டை (do not disturb registry) நிறுவுதல் போன்ற பயனர்களைப் பாதுகாக்கும் உள்கட்டமைப்புகளையும் ஒன்றிய அரசு இந்த மசோதா மூலம் இயற்ற உள்ளது. ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் பொது பாதுகாப்பு அல்லது பொது அவசரகால கோரிக்கையில் அவசியமானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ இருக்க வேண்டும். மேலும் அவை கீழே உள்ளவாறு குறிப்பிடப்பட்ட காரணங்களின் நலனுக்கானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் :

(i) மாநிலத்தின் பாதுகாப்பு

(ii) குற்றங்கள் தூண்டுவதைத் தடுத்தல்

(iii) பொது ஒழுங்கு

புதிய மசோதாக்கள் மீதான விமர்சனங்கள் என்னென்ன?

– பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மூலம் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் Online Content-களை மதிப்பீடு செய்ய, வரைவு ஒளிபரப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஒன்றிய அரசின் மூலம் ஒரு உள்ளடக்க மதிப்பீட்டுக் குழு (content evaluation committee (CECs)) அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் CEC மூலம் சுய சான்றளிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே ஊடக நிறுவனங்கள் ஒளிபரப்ப செய்ய முடியுமோ என்ற கேள்வி எழுகிறது? இதன் மூலம் அரசாங்கம் விவாதிக்க விரும்பாத பிரச்சினைகள் தடுக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக ஊடகங்கள் கருதுகின்றன.

– மேலும் ஒவ்வொரு செய்தி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் (Editor) செயல்பட்டு வரும் நிலையில், இந்த உள்ளடக்க மதிப்பீட்டுக் குழுவின் மூலம் பத்திரிகை நிறுவனங்களின் சுதந்திரம் பாதிக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. 

– அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் விமர்சிக்கும் அல்லது விமர்சித்து செய்தி வெளியிடும் ஊடகங்களையும், பத்திரிக்கையாளர்களையும் இந்த மசோதாக்கள் கட்டுப்படுத்துவதாக உள்ளன என்றும் பல செய்தி நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.

தொலைத்தொடர்பு மசோதா 2023-ல் தகவல் தொலைத்தொடர்பு கண்காணிப்புகள், இடைமறிப்பு மற்றும் இணைய முடக்கம் ஆகியவை பாதுகாப்பு கருதி செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏற்கனவே 2016 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலங்களில், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இணைய முடக்கங்களில் 60% இணைய முடக்கம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது..! 

ஆதாரங்கள்:

https://prsindia.org/files/bills_acts/bills_parliament/2023/The%20Telecommunications%20Bill,%202023.pdf

https://mib.gov.in/sites/default/files/Public%20Notice_0.pdf

https://www.meity.gov.in/writereaddata/files/Digital%20Personal%20Data%20Protection%20Act%202023.pdf

https://prsindia.org/billtrack/the-telecommunication-bill-2023

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader