விவாத நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் சொல்வது உண்மையா ? : பகுதி 1 நியூஸ் விவாதத்தில் இருந்து Fact check !

நியூஸ் 7 தொலைக்காட்சியில் 2022 அக்டோபர் 10ம் தேதி “எதிர்க்கட்சிகள் மீதான முதலமைச்சரின் விமர்சனம் எதை காட்டுகிறது?” என்ற தலைப்பில் கேள்விநேரம் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, வலதுசாரி ஆதரவாளர் நித்தியானந்தம் முதலானோர் கலந்து கொண்டனர்.

முதலில் பேசிய நித்தியானந்தம் 39,000 வீடுகள் கட்ட கொடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நிதியில், 3,400 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அளித்த தரவுகளின் அடிப்படையில் ஒன்றிய அமைச்சர் இது குறித்துப் பேசியுள்ளதாகக் கூறினார். முதலில் 39,000 வீடுகள் எனப் பேசிய அவர், பின்னர் 39,000 கோடி ரூபாய்  எனப் பேசி இருந்தார்.

அவரை தொடர்ந்து பேசிய தமிழன் பிரசன்னா, பெட்ரோல் விலை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும், டீசல் விலை அதிகம் உள்ள நாடு பட்டியலில் முதல் இடத்திலும் இருப்பதாகப் கூறினார். இவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். 

உண்மை என்ன ?

வலதுசாரி ஆதரவாளரான நித்தியானந்தம் பேசியது குறித்து இணையத்தில் தேடினோம். கடந்த 7ம் தேதி  வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் ஒன்றிய இணையமைச்சா் ஏ.நாராயணசாமி இது தொடர்பாகப் பேசியுள்ளார். பல்வேறு துறை அதிகாரிகளுடனான இக்கூட்டம் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ஏ.நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இணையமைச்சர் பேசியதாவது, “பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை 36,000 வீடுகள் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் இதுவரை 3,900 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு 60 சதவீதம் நிதி அளிக்கிறது. மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்குகிறது. மத்திய அரசு வழங்கும் நிதியினை ஏன் மறைக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையமைச்சர் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக் கூட்டம் மற்றும் வேலூர் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வலதுசாரி சிந்தனையாளர் கிஷோர் கே சாமி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை அடிப்படையாக கொண்டே நியூஸ் 7 விவாத நிகழ்ச்சியில் நித்தியானந்தம் பேசியுள்ளார். ஆனால், வீடுகளின் எண்ணிக்கை மற்றும் நிதி குறித்து முன்னுக்கு பின்னாக மாற்றி மாற்றி பேசி இருக்கிறார். 

அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய இணையமைச்சர் பேசியது தொடர்பாக வேலூர் மாவட்ட திட்ட இயக்குநராக பணிபுரியும் ஆர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

” இணையமைச்சர் கூட்டத்தில் பேசுகையில் எந்த துறையையோ, திட்டத்தையோ குறிப்பிட்டு 36,000 வீடுகள் ஏன் கட்டவில்லை எனக் கேள்வி கேட்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களில் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. திட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டிருந்தால் அதற்கான அதிகாரி பதிலளித்து இருப்பார். ஆனால் அவ்வாறு கேட்கப்படவில்லை.

அமைச்சர் குறிப்பிடுவதைப் போல 36,000 வீடுகள் என்பது, வேலூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வீடு கட்டும் அனைத்து திட்டங்களின் கூட்டுத் தொகைக்கும் நிகராகவில்லை. மேலும் அது நாங்கள் அமைச்சருக்கு அளித்த தரவுகள் அல்ல ” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ” வேலூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நகர மற்றும் கிராமப்புறத்தில் எத்தனை வீடுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன எனக் கேட்டோம். 2016-17 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டில் சுமார் 7,000 வீடுகளும், 2021-22 நிதியாண்டில் 7,510 வீடுகளும் கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

2016-17 முதல் 2019-20 வரையில் அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளின் கட்டிடப் பணிகள் 92 சதவீதம் நிறைவடைந்து விட்டது. மொத்தமாக 2016-17 முதல் 2021-22 வரையிலான வீடுகளில் 60 சதவீத கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ளதாக ” அவர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட திட்ட இயக்குநர் அளித்த தகவலின்படி, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 36,000 வீடுகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என ஒன்றிய இணையமைச்சர் பேசி இருப்பது தொடர்பாக எந்த தரவுகளும் இல்லை. இதுவரையில் அம்மாவட்டத்தில் 2016-17 முதல் 2021-22 வரையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் சுமார் 15,000 வீடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டீசல்விலை:

Link :

பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முறையே 3 மற்றும் முதல் இடத்தில் இருப்பதாகப் பேசியது குறித்து  இணையத்தில் தேடினோம். 

உலக அளவில் பெட்ரோல் விலை அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசைப் பட்டியலில் இந்தியா 54வது இடத்திலும்,  டீசல் குறித்தான பட்டியலில் 55வது இடத்திலும் உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவாகவே உள்ளது.

Link : 

காங்கிரஸ் ஆட்சிக் காலமான 2004 முதல் 2014 வரையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 34.16 அமெரிக்க டாலரிலிருந்து 110 அமெரிக்க டாலராக உயர்ந்தது. அவ்வளவு அதிகரித்த போதிலும் 2013 – 14 காலக் கட்டத்தில் சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 60 முதல் 70 ரூபாயாக இருந்துள்ளது.

தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 2022 அக்டோபரில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 90.86 அமெரிக்க டாலராக உள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.102 ஆக உள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவில் பெட்ரோல் விலை 105 ரூபாய்கும், டீசல் விலை 96 ரூபாய்கும் விற்கப்பட்டது. ஆனால் தமிழன் பிரசன்னா கூறியதை போல பெட்ரோல் விலை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இல்லை என்பதினை அறிய முடிகிறது.

முடிவு :

நம் தேடலில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 36,000 வீடுகள் கட்டி இருக்க வேண்டிய நிதியில் வெறும் 3,900 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய இணையமைச்சர் பேசியதும், அதனை மேற்கோள்காட்டி நித்தியானந்தம் பேசியதற்கும் எந்த தரவுகளும் இல்லை. 2016-17 முதல் 2021-22 வரையில் மொத்தம் 15,000 வீடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால், தமிழன் பிரசன்னா கூறியதை போல பெட்ரோல் விலை அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும், டீசல் விலையில் முதல் இடத்திலும் இருக்கிறது என்பது தவறான தகவலாகும். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் முறையே 54 மற்றும் 55 என்ற இடத்தில் இந்தியா உள்ளது.

Link:

7-year record: UPA raised petrol, diesel prices more than BJP, but global story was different

Please complete the required fields.




Back to top button
loader