2ஜி வழக்கில் ஆ.ராசா முக்கிய குற்றவாளி.. 2011 செய்தியை புதிதுபோல் வெளியிட்ட ஊடகங்கள் – பின்னணி என்ன ?

2ஜி அலைக்கற்றை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திமுக எம்.பி ஆ.ராசா மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக பழைய செய்தியை முன்னணி ஊடக நிறுவனங்கள் பலவும் காப்பி பேஸ்ட் செய்து மீண்டும் புதிய செய்தியாக வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

2022 அக்டோபர் 5ம் தேதி ஐஏஎன்எஸ் (Indo-Asian News Service) என்ற செய்தி நிறுவனம், 2ஜி அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஆ.ராசா குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளதாகவும் கூறி செய்தி வெளியிட்டு இருந்தது. 

Twitter link 

ஆனால், தவறான செய்தி என அறிந்த உடன் ஐஏஎன்எஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் 2ஜி குறித்து தவறாகச் செய்தி வெளியிட்டு விட்டோம். மேலும் அச்செய்தியை நீக்கிவிட்டோம், சிரமத்திற்கு வருந்துகிறோம் என டிவீட் செய்துள்ளது. 

ஐஏஎன்எஸ் செய்த இந்த தவறை Deccan Herald⁩, Business Standard, zee news என முன்னணிப் பத்திரிக்கைகள் பலவும் காப்பி பேஸ்ட் செய்து செய்தியாக வெளியிட்டன. 

இந்த தவறுகளுக்குத் தொடக்கம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 2022 அக்டோபர் 5ம் தேதி வெளியிட்ட செய்தித்தாளின் முதல் பக்கத்திலிருந்து தொடங்கியதாகும். அன்றைய தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் முதல் பக்கத்தில் “THE WORLD AT OUR FEET” என்ற தலைப்பில் 2011ல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற செய்தி மற்றும் “CBI charges Raja, babus, top corporate bosses for 2G fraud” என்ற தலைப்பிட்ட 2ஜி அலைக்கற்றை குறித்தான செய்தியையும் வெளியிட்டுள்ளது. இதே செய்திகள் 2011, ஏப்ரல் 3ம் தேதி வெளியான தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நாளிதழிலும் வெளியாகியுள்ளது.

எதற்காக 2011 ஏப்ரலில் நடைபெற்ற நிகழ்வுகள் தற்போது செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது என்ற கேள்வி எழ செய்யும். அதற்கான பதில் அக்டோபர் 5ம் தேதி வெளியான தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் 2ம் பக்கத்திலேயே உள்ளது. 

அப்பக்கத்தின் வலது புற மேல் ஓரத்தில் “ADVERTORIAL” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பரத்தைச் செய்தி வடிவில் கொடுப்பதே ADVERTORIAL. 

மேலும், அப்பக்கத்தில் “இன்றைய செய்தித் தாளின் முதல் பக்கம் தவறாக வெளியிடப்பட்டதல்ல. இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் உலகக் கோப்பையைக் கைப்பற்ற, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஓரியோவுடன் இணைந்து உதவ உள்ளது. 2011ம் ஆண்டு ஓரியோ அறிமுகம் செய்த போது இந்திய கிரிகெட் அணி உலக கோப்பையினை வென்றது. தற்போது 2022ல் ஓரியோ மீண்டும் அறிமுகமாகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி குறித்தான தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முதல் பக்க செய்தியினை ஓரியோவின் ADVERTORIAL-க்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா உலக கோப்பையை வெற்றி பெற்ற மறு நாளான 2011, ஏப்ரல் 3ம் தேதி வெளியான தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளின் முதல் பக்கத்தில் 2ஜி குறித்தான செய்தியும் வெளியாகியுள்ளது. தற்போது ADVERTORIAL-காக அப்பக்கம் முழுமையும் அச்சிடப்பட்டுள்ளது. இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட, அதனைத் தொடர்ந்து மற்ற செய்தி நிறுவனங்களும் அதே செய்தியை வெளியிட்டு உள்ளன. 

ஐஏஎன்எஸ் தவறான செய்தி வெளியிட்டதாக டிவிட்டரில் தெரிவித்ததையடுத்து, மற்ற செய்தி நிறுவனங்கள் தாங்கள் வெளியிட்ட செய்திகளை நீக்கி உள்ளன. 

இதே போன்று 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவின் சார்பில் அனைத்து செய்தி தாள்களிலும் திமுக செய்த குற்றச்சாட்டுகள் மற்றும் தவறுகள் குறித்து ADVERTORIAL வெளியிட்டது

2ஜி வழக்கின் தொடக்கமும், முடிவும் :

2010 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி நிதி இழப்பு நடைபெற்று இருப்பதாக அன்றைய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் மதிப்பீடு செய்தார். இது தொடர்பாக சிபிஐ 80,000 பக்கம் கொண்ட  குற்றப் பத்திரிக்கையை 2011, ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தது. இதில் முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  உட்படப் பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

பல கட்ட விசாரணைக்குப் பிறகு, 2017ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. 

நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்ற இந்த வழக்கு குறித்துப் பேசாத ஊடகங்களே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த வழக்கு குறித்தும், 2017ம் ஆண்டு இவ்வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டது குறித்தும் Deccan Herald⁩, Business Standard போன்றவை தங்களின் இணையதளங்களிலேயே செய்திகளை வெளியிட்டு உள்ளன. அப்படி இருக்கையில் ADVERTORIAL-ல் வந்த ஒன்றினை எந்த சிந்தனையும் இல்லாமல் செய்தியாக வெளியிடுவது என்பது கவனக்குறைவு என்பதைத் தாண்டி அலட்சியமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

Link :

A Raja, Kanimozhi, 17 others vindicated in 2G scam case: What experts say

Please complete the required fields.
Back to top button
loader