முகநூலில் ஆபாச பதிவால் பறிபோன இரு உயிர்கள் | நெய்வேலி அருகே பதற்றம்.

நெய்வேலி அருகே உள்ள குறவன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகள் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். ஜூன் 10-ம் தேதி தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதனையறிந்த, அவரின் காதலரும்(உறவினர்) வடலூர் அருகே செங்கால் பாளையத்தில் சாலையோரத்தில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இருவரின் தற்கொலை நிகழும் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கு முன்னர் அதே பகுதியில் வசித்து வந்த பிரேம் குமார் என்பவர் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.
இதனையறிந்த, அப்பெண்ணின் குடும்பத்தினருக்கும், பிரேம் குமார் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதங்கள், தகராறுகள் ஏற்பட்டன. முகநூலில் ஆபாசமாக படத்தை பதிவிட்ட சம்பவத்தாலும், வீட்டில் பெற்றோர்கள் திட்டிய காரணத்தினால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த உடன் அவரின் காதலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முன் விரோதம் :
பிரேம் குமாருக்கு, தற்கொலை செய்து கொண்ட மாணவியின் காதலர் மீது இருந்த முன் விரோதத்தால் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பதிவிட்டு உள்ளார் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, மைனர் பெண்ணை காதலித்த பிரேம்குமார், அப்பெண்ணை தன் வீட்டிற்கும் அழைத்து சென்றது இரு வீட்டாருக்கும் தெரிய வந்து பிரச்சனை காவல்துறை வரை சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் மைனர் என்பதால் பிரேம்குமாரை சிறுமி கடத்தல் வழக்கில் காவல்துறை கைது செய்தனர். பின் ஜாமீனில் வெளியே விட்டனர்.
இதற்கு சாட்சியாக இருந்தது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் காதலர். ஆகையால், அவரை பழிவாங்க அவரின் காதலியின் புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்து ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு உள்ளார்.
போராட்டம் :
மாணவி தற்கொலைக்கு பிரேம்குமார் தான் காரணம், அவரை கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்கள் இரவில் காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். அதில், மர்ம நபர்களால் கல்வீச்சும், போலீசாரால் தடியடியும் நடந்தது.மாணவியின் இறப்பிற்கு பிறகு அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து, பிரேம் குமாரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சாதி மோதல் :
தற்கொலை செய்து கொண்ட மாணவி மற்றும் அதற்காக கைது செய்து செய்யப்பட்ட பிரேம்குமார் ஆகிய இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதிய வன்மம் தலை தூக்கி உள்ளது.
ஆனால், இங்கு நடந்தது ஆணாதிக்கம் என்ற கர்வத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.