This article is from Sep 21, 2021

நிப்மெட் நிறுவனத்தை செகந்திராபாத்திற்கு மாற்றும் ஒன்றிய அரசு முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு !

சென்னை முட்டுக்காடு பகுதியில் அமைந்துள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனத்தை(NIEPMD) செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் வளர்ச்சிக்குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன்(NIEPID) உடன் இணைக்க ஒன்றிய அரசு முயற்சி வருவதாக வெளியான செய்திகளுக்கு எதிராக பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றனர்.

2005-ம் ஆண்டு ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகள் விவகாரத்துறை, சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகத்தின் சார்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு உடையோரின் மேம்பாட்டுக்காகத் தேசிய (NIEPMD) நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இங்கு சிறப்பு கல்வி உள்பட அவர்களின் தேவைக்கான பயிற்சிகள் வழங்குவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Twitter link 

தமிழ்நாட்டில் உள்ள நிப்மெட்(NIEPMD) தேசிய நிறுவனத்தை செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன்(NIEPID) இணைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைப்பதாக மூத்த பத்திரிகையாளரும், பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற யெஸ்.பாலபாரதி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து யெஸ்.பாலபாரதி கூறுகையில், ” செவித்திறன் குறைபாடு இருக்கும் ஒருவருக்கு அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடும் இருப்பதை ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடு( Multiple Disabilities) என்கிறார்கள். இப்படி இருக்கும் குழந்தைகளை கையாள்வதற்கு பயிற்சி தேவைப்படும். இத்தகைய பயிற்சிகள் மற்றும் அக்குழந்தைகள் குறித்து ஆய்வும் மேற்கொள்ள 2005-ல் நிப்மெட்(NIEPMD) நிறுவனம் முட்டுக்காடு பகுதியில் துவங்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழிகாட்டியாக இந்நிறுவனம் உதவி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் தலைமையிடமாக இருந்து வருகிறது.

இதற்கு முன்பாக, அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களின் வளர்ச்சிக்கான தேசிய நிறுவனம் செகந்திராபாத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், அது அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடையவர்களுக்கு மட்டுமே, தமிழ்நாட்டில் இருப்பது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உடையவர்களுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனம்(NIEPMD). தற்போது ஒன்றிய அரசு நிப்மெட் நிறுவனத்தை நிப்பிட் உடன் இணைக்க உள்ளது. இப்படியொரு விசயம் நடக்கிறது என்பதை வழக்கறிஞர் அபிநயா வெளியுலகத்திற்கு கொண்டு வருகிறார். இதனை தமிழ்நாடு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல பலரும் முயற்சித்து வருகிறோம்.

செகந்திராபாத்தில் உள்ள நிப்பிட் நிறுவனம் சிறப்பானதாக இருந்தாலும், அது அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு எனும் ஒரு குறைபாட்டில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடியது. அந்த நிறுவனத்தின் கிளை வேண்டுமென்றாலும் தமிழ்நாட்டில் அமைக்கலாம். ஆனால், அதனுடன் நிப்மெட் நிறுவனத்தை இணைப்பதும், தலைமையிடத்தை மாற்றுவதும் தேவையற்றது. ” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் உடையவர்களுக்கான மேம்பாட்டு தேசிய நிறுவனம்(NIEPMD) செகந்திராபாத்தில் உள்ள நிப்பிட் உடன் இணைக்கப்பட்டால் முக்கிய முடிவுகள், மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்பிற்கான அனுமதிகளை பெற செகந்திராபாத் தலைமையகத்தை அணுக வேண்டிய நிலைக்கு செல்ல நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader