நீலகிரி மலை ரயில் தனியாருக்கு ஒப்படைத்ததாக பரவும் தகவல்| தென்னக ரயில் மறுப்பு !

கொரோனா வைரஸ் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான நீலகிரி மலை ரயில் 8 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் ரயில் சேவை தற்போது இயக்கப்பட்டது. மலை ரயிலின் நிறம், பணி பெண்கள் என மலை ரயில் ஒன்று முழுவதுமாக மாற்றப்பட்டு இருக்கும் புகைப்படங்களால் மலை ரயில் சேவை முழுவதுமாக தனியார் வசம் கொடுக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.
தனியார் நிறுவனம் மலை ரயிலை இயக்கியதால் ஒரு நபருக்கு 3,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதும் சர்ச்சையாகியது. ரயில்வே சேவையை தனியார் வசம் ஒப்படைத்த காரணத்தினால் கட்டணம் இவ்வளவு உயர்ந்துள்ளது.
இனி, 400-க்கு சென்ற மலை ரயில் பயணத்தை 2,500 முதல் 12,000 வரை கொடுத்து செல்ல வேண்டிய சூழல் இருக்கும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது. ஆனால், நீலகிரி மலை ரயில் சேவை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதாக பரவிய தகவலை தென்னக ரயில்வே மறுத்துள்ளது.
” நீலகிரி மலை இரயில் ( Nilgiris Mountain Railway-NMR) தனியார் வசமானது என்பது தவறான பதிவு. ரயில்வே துறையின் பாலிசிபடி எந்த ஒரு தனி நபர் வேண்டுமானாலும் ஒரு ரெயிலையோ, ஒரு இரயில் பெட்டியை full tariff rate (FTR ) என்ற முறையில் ஒரு குழுவிற்கு அல்லது சுற்றுலா ஏற்பாடு செய்வதற்காக அல்லது திருமண நிகிழ்ச்சிகாக பணம் செலுத்தினால் ரயில்வே துறை அவர்களுக்கு ஒரு ரெயிலை அல்லது ஒரு இரயில் பெட்டியை இயக்கும். இது chartered trip என்றும் அழைக்கப்படும். இதற்கு முன்பு ரயில்வே இது போல் பல chartered trip-களை இயக்கி உள்ளது.
அத்தகைய chartered trip முறையிலேயே இந்த பயணம் டிசம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் தனியார் நிறுவனத்தின் விண்ணப்பத்தின் படி இயக்கப்பட்டது. இதை NMR தனியார் மயமாக்கப்பட்டு விட்டது என கூறுவது முற்றிலும் தவறான புரிதல் இல்லாத இடபட்ட பதிவு ஆகும்.
இந்த ஒரு chartered trip-க்கும் இரயில்வேயின் வழக்கமான NMR சேவைக்கும் சம்பந்தம் இல்லை. இரயில்வேயின் வழக்கமான சேவைகள் கோவிட்-19 ஐ கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதை இயக்க உரிய அனுமதி வந்த பிறகு பொது மக்களுக்காக ஏற்கனவே இருந்த கட்டணத்தின் அடிப்படையில் இயக்கப்படும் ” என தென்னக ரயில்வே கூறியுள்ளது.