நிபா வைரஸ்..!

உயிர்க்கொல்லி நோய்களுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லை. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். அதைபோல் உயிரைப் பறிக்கும் நோயாக நிபா வைரஸ் கேரளாவில் பரவி வருகிறது. நிபா வைரஸால் கேரளா மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் தென்னிந்திய மாநிலங்களுக்கு புதிதே தவிர இந்தியாவிற்கு புதிதல்ல.

Advertisement

நிபா வைரஸ் :

“ நிபா வைரஸ் ” என்பது ஒருவகையான சூனாட்டிக் வைரஸ் ஆகும். காரணம் இவை விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் ஆகும். நிபா வைரஸ் “ பாராமிக்ஸோவிரிடே ” என்ற குடும்பத்தை சேர்ந்தவை. முதன் முதலில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பானது மலேசியாவில் இருந்தே தொடங்கியது என்று கூறப்படுகிறது. 1998 முதல் 1999-ம் ஆண்டு காலகட்டத்தில் மட்டும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் மட்டும் இந்த வைரஸால் 276 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 105 பேர் இறந்தனர்.

இந்த வைரஸ் மலேசியாவில் மட்டுமின்றி 2001-ம் ஆண்டில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் நாட்டில் 2001 மற்றும் 2007 ஆகிய இரு ஆண்டுகளில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் உருவாகியது. 2001 ஆம் ஆண்டில் சிலிகுரியிலும், 2007 ஆம் ஆண்டில் நாடியாவிலும் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

நிபா வைரஸ் பரவும் முறை :

“ பழந்தின்னி வௌவால்கள் “ மூலமாக பரவுவதாகக் கூறப்படும் நிபா வைரஸ் பன்றி, நாய், ஆடு, குதிரை போன்ற விலங்குகள் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது. வைரஸ் பாதித்த வௌவால்கள் உண்ணும் பழங்களை உண்பதாலும், விலங்குகளின் கழிவுகள் மூலமும் நிபா வைரஸ் பரவுவதாகக் கூறப்படுகிறது. விலங்குகளில் இருந்து பரவுவது மட்டுமின்றி நிபா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தொடுதல், இருமல், தும்மல், கழிவுகள் போன்றவற்றால் பரவுகிறது. நிபா வைரஸ் அச்சுறுத்தல் நிகழும் காலங்கள் அனைத்தும் வௌவால்களின் இனப்பெருக்க காலமான டிசம்பர் முதல் மேவரையிலான காலகட்டத்திலேயே நிகழ்கின்றன. வைரஸ் மனித உடலுக்குள் புகுந்து தாக்கத்தை ஏற்படுத்த 3 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை கூட ஆகலாம்.

Advertisement

வைரஸ் அறிகுறி & சிகிச்சை :

நிபா வைரஸின் அறிகுறிகளாக காய்ச்சல், கழுத்து மற்றும் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, உடல் சோர்வடைதல், சுவாசிப்பதில் ஏற்படும் பிரச்சனை, மனக்குழப்பம், உளறுவது ஆகியவற்றை கூறுகின்றனர். உயிரைப் பறிக்கும் நோய் என்பதால் உடனடியாக பதற்றம் ஏற்படுவது இயல்வு. எனினும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கேரளாவில் நிபா வைரஸால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் அதற்கான சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இது உயிரைப் பறிக்கும் வைரஸ். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 50 முதல் 100 சதவீதம் வரை இறந்து விடுகின்றனர். இதற்கென பிரத்யேக மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகையால், ரைபாவாரின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சலை குறைக்கும் தடுப்பு மருந்துகளுமே கொடுத்து வருகின்றனர்.

கேரளாவில் நிபா வைரஸ் நிலவரம் :

கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய நிலையில் மே 22-ம் தேதி கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுல்லா செல்ல வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்தது. இதன்பின் மே 25-ம் தேதி வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆகையால், கேரளாவில் சுற்றுலா பகுதிகள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அடுத்த அறிவிப்புகள் வரும் வரை கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளை மட்டும் தவிர்க்குமாறு அரசு அறிவித்துள்ளது.

கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் மத்திய, மாநில சுகாதாரத்துறையினர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். நிபா வைரஸிற்கு மருந்துகள் ஏதும் கண்டறியப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியாவில் இருந்து நிபா வைரஸ் தடுப்பு மருந்துகள்விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 டோசெஜ் மருந்துகள் வந்துள்ளது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் மருந்துகள் வரவழைக்கப்படும் என்று கேரளா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிபா வைரஸ் சோதனை :

நிபா வைரஸ் கேரளாவில் எவ்வாறு பரவியது என்று குழப்பத்தில் உள்ளனர். ஆம், நிபா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வௌவால் மற்றும் இதர விலங்குகளிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் இருந்து 3 பூச்சி உண்ணும் வௌவால்கள், 4 ஆடுகள், 5 மாடுகள், 8 பன்றிகளிடம் நடந்த மருத்துவ பரிசோதனையில் நிபா வைரஸ் தாக்குதல் கண்டறியப்படவில்லை. மேலும், 21 பழந்தின்னி வௌவால்களின் இரத்த மாதிரிகளை போபால் உள்ள National institute of high security Animal Diseases பரிசோதித்து வெளியிட்ட ஆய்வுக் அறிக்கையில் நிபா வைரஸ் தொடர்பான தாக்கம் ஏதுமில்லை என அறிவித்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து வந்த மொஹம்மது சபித் என்பரே முதன் முதலில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் மலேசியாவில் இருந்து வரும் போதே வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையான கேரளா சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றன. நிபா வைரஸ் வௌவால்கள் மூலமே பரவியதாக எடுத்துக் கொண்டாலும், வௌவால்களின் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே வீரியமாக இருந்துள்ளது. மே மாதத்தோடு வௌவால்களின் இனப்பெருக்க காலம் முடிவடைவதால் நிபா வைரஸின் தாக்கமும் குறைய வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதை கண்டறிய முடியாத நிலையும், கேரளாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் நிபா வைரஸ் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், வீண் வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றனர். இதற்கு முன்பாக வௌவால்கள் இல்லையா இப்பொழுது மட்டும் எப்படி நிபா வைரஸ் என்ற புதிய உயிர்க்கொல்லி உருவானது, இந்திய மக்கள் புதிய மருந்துகளை பரிசோதித்து பார்க்கும் எலிகள் என தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றனர். நிபா வைரஸ் தொடக்கம் மலேசியாவிலும், அதற்கு பின்பாக மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் போன்ற பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வௌவால்கள் மீது பரிசோதனைகள் நடத்தினாலும், வௌவால்களின் இனப்பெருக்க காலத்தில் மட்டுமே இந்த வைரஸின் வீரியம் அதிகமாகவும், அதனால் உயிரிழப்புகளும் உண்டாகிறது.

நிபா வைரஸ் கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தியதால் அண்டை மாநிலங்களில் வைரஸ் குறித்த அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. எனினும், தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும், சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

நிபா வைரஸ் புதிய உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் பரவும் அபாயமும் மக்களிடையே உள்ளது எனினும், நிபா வைரஸ் தொடர்பான வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்பத் தேவையில்லை. சுகாதாரமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவி உண்ண வேண்டும். புதிய நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளச் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.

National guideline for management preventation control of Nipha virus 

directorate of health services kerala nipha virus infection guidelines

Health Advisory to person travelling to kerala 

nipha virus that klled 12 in kerala may not be linked to bat

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button