விலையேற்றம், ஜி.எஸ்.டி பற்றி நிர்மலா சீதாராமன் பேசியது சரியா ?

ஆகஸ்ட் 1-ம் தேதி மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில், திமுக அரசு பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியுடன் கூடுதல் விலையை விதித்து உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஜி.எஸ்.டி கவுன்சில் : 

விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது, அத்தியாவசிய பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “இது மத்திய அரசோ, பிரதமர் மோடியோ எடுத்த முடிவு அல்ல. திமுக அமைச்சர் உள்பட மாநிலங்கள் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு ” எனப் பேசியுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலைப் பொறுத்தவரையில், மொத்தம் 33 உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் துணை நிதியமைச்சர் உள்ளனர். இவர்களோடு 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். கவுன்சிலில் எந்தவொரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றாலும் 75% வாக்குகள் தேவை. மொத்த வாக்குகளில், ஒன்றிய அரசின் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டும் மூன்றில் ஒரு பங்கு(33%) உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 67% வாக்கு மட்டுமே .

இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. குதிரை பேரம், ஆட்சிக் கவிழ்ப்பு என மாநிலங்களில் உள்ள ஆட்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இப்படி இருக்கையில், ஒன்றிய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டு வரும் முடிவுகளுக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் ஆதரவு, அதேபோல் பாஜக ஆதரவு நிலையில் இருக்கும் மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் எளிதாக  ஏற்றுக்கொள்ளப்படும். பெரும்பான்மையான ஆதரவு ஆளும் பாஜக அரசிற்கு இருப்பதால், ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் கூட கவுன்சில் முடிவை தடுக்க இயலாது.

நிர்மலா சீதாராமனின் ஜிஎஸ்டி கவுன்சில் பேச்சுக் குறித்து விளக்கம் அளித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர், ” ஜிஎஸ்டி வரி மாற்றத்தை உருவாக்க முதல்படி பிட்மேன் கமிட்டி எனும் குழு அமைக்கப்படும். அதில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவர். விவாதத்தில் தமிழக அதிகாரி வரி மாற்றத்தை எதிர்ப்பதாக தெரிவித்து விட்டார். ஆனால், பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு அடுத்த கட்டமாக அமைச்சர்கள் கூட்டத்திற்கு சென்றது. அந்த குழுவில் தமிழ்நாடு அமைச்சர்(நான்) இல்லை. இருந்தாலும் கூட, இதையெல்லாம் தமிழ்நாடு எதிர்க்கிறது நான் எழுத்துப்பூர்வமான அனுப்பி இருந்தேன்.

இதன் பின்னர், குழுவின் 56 பரிந்துரைகளும் ஒரே அஜெண்டாவாக முழு கவுன்சில் சந்திப்பில் விடப்பட்டது. இந்த 56 பரிந்துரைகளும் ஒரே வாக்காக ஆம், இல்லை என்ற வாய்ப்பு தான் அளிக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில், அனைத்து மாநிலங்களும் 56 பரிந்துரைகளையும் ஒரே முடிவாக எடுத்துக் கொண்டது உண்மை. அந்த 56-ல் இதுவும் ஒன்று. இதை அவைக்கு வெளியில் தெளிவாக கூறிய நிதியமைச்சர், மக்களவையில் யாரும் எதிர்க்காமல் நேரடியாக கொண்டு வரப்பட்டது எனக் கூறி இருக்கிறார் ” எனத் தெரிவித்து உள்ளார்.

பெட்ரோல், டீசல் வரி குறைப்பு : 

பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை இருமுறை குறைத்து உள்ளதாகவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் குறைக்கவில்லை என நிதியமைச்சர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க : தமிழக அரசு பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதாக வதந்தி பரப்பு பாஜகவினர் 

ஆனால், கடந்த வரும் தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 3 ரூபாய் குறைத்து இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி இருந்தது. ஆனால், அதைப் பற்றி பாஜகவினர் பேசுவதில்லை. பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்த தமிழக அரசை வரியைக் குறைக்கவே இல்லை எனப் பேசி வருகின்றனர்.

விலையேற்றம் : 

ஜிஎஸ்டி குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ” பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பிராண்டு பொருட்களுக்கு மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இது மத்திய அரசோ, பிரதமர் மோடியோ எடுத்த முடிவு அல்ல. உங்கள்(திமுக) அமைச்சர் உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுத்த முடிவு.

இன்று செய்தித்தாளில் வெளியான பொருட்களின் விலையைக் குறிப்பிடுகிறேன். ஒரு கிலோ தயிரின் பழைய விலை ரூ.100, அதற்கு மேல் 5% ஜிஎஸ்டி வரி விதித்தால் 105 ரூபாய். ஆனால், நீங்கள் 120 ரூபாய்க்கு விற்கிறீர்கள். அதேபோல், லெஸ்சி பழைய விலை 27 ரூபாய். அதற்கு ஜிஎஸ்டி 5% விதித்தால் 28.35 ரூபாய்க்கு விற்க வேண்டும், ஆனால், நீங்கள் 30 ரூபாய்க்கு விற்கிறீர்கள். அடுத்து மோர்(பட்டர் மில்க்), 10ரூபாய்க்கு விற்கப்படும் மோருக்கு 5% வரி போட்டால் 10.50 ரூபாய், ஆனால் 12 ரூபாய்க்கு நீங்கள் விற்கிறீர்கள். இப்படி ஜிஎஸ்டி மீது பழியைப் போட்டு நீங்கள் அதிக விலைக்கு விற்கிறீங்க ” எனப் பேசி உள்ளார்.

நிர்மலா சீதாராமன் கூறிய விலை குறித்து தேடிய போது, ஆவின் நிறுவனத்தின் இணையதளத்தில் தயிர், லெஸ்சி, மோர் உள்ளிட்ட பொருட்களின் பழைய விலையே காணப்படுகிறது. இந்த பழைய விலையானது நிர்மலா சீதாராமன் கூறியதுடன் ஒத்துப் போகிறது.

அதேபோல், ஜிஎஸ்டி 5% விதிக்கப்பட்ட பிறகு ஜூலை 21-ம் தேதி ஆவினின் திருத்தி அமைக்கப்பட்ட விலைப் பட்டியலில், ஒரு கிலோ தயிர் 120 ரூபாய், லெஸ்சி 30 ரூபாய், மோர் 12 ரூபாய்க்கு விற்கப்படுவதாக இடம்பெற்று உள்ளது. இது நிர்மலா சீதாராமன் கூறியதுடன் ஒத்துப் போகிறது.

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பிராண்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 5% ஜி.எஸ்.டி வரியுடன் ஆவின் பொருட்களின் விலையும் ஏற்றப்பட்டு உள்ளது. வரியுடன் கூடிய புதிய விலையானது பைசாக்களில் வரும் போது அதை முழுமையடைய (Roundoff) செய்துவண்டு. ஆனால், ஆவின் நிறுவனத்தில் முழுமையான விலையுடன் கூடுதலாக 1 ரூபாய் முதல் 15 வரை ஏற்றப்பட்டு இருக்கிறது. இது மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும்.

நிர்மலா சீதாராமன் கூறியபடி, ஆவின் நிறுவனம் 5% ஜிஎஸ்டி உடன் பால் பொருட்களுக்கு கூடுதல் விலையை ஏற்றி உள்ளது. ஆனால், அரசின் ஒரு நிறுவனத்தில் ஏற்றப்பட்ட விலையை வைத்துக் கொண்டு ஜிஎஸ்டி விதிப்பை நியாயப்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டு முழுவதும் இப்படி நிகழ்வது போன்ற தோரணையில் அமைச்சர் பேசி இருப்பது ஏற்புடையது அல்ல. மேலும், எதிர்க்கட்சி எம்.பியால் கேட்கப்பட்ட கேள்வி என்பது இந்தியா முழுமைக்குமானது. ஆனால், நிதியமைச்சரோ ஒரு கட்சிக்கு எதிராக மற்றும் ஒரு மாநிலத்திற்கு எதிராக சித்தரித்து பேசி இருக்கிறார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களான பால் பொருட்களுக்கு மட்டுமின்றி லேபிள் ஒட்டிய பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பால் அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் கூட பொருட்களின் விலையை ஏற்றியோ அல்லது எடையைக் குறைத்தோ விற்பனை செய்யக்கூடும்.

இதுமட்டுமின்றி, பள்ளி குழந்தைகள் பென்சில் சீவப் பயன்படுத்தும் சார்பினருக்கு கூட ஜிஎஸ்டி வரி 12-ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

நாட்டில் மேன்மேலும் வரிகள் விதிக்கப்படுவதும், அதை அரசியலரீதியில் விவாதமாக்கி கொள்வதிலேயே அரசு முயல்கின்றது. இவையனைத்தாலும் பாதிக்கப்படுவது எளிய மக்களே !

Please complete the required fields.
Back to top button
loader