வெள்ளை அரிசியின் ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா.. பாதிப்புக்குள்ளாகும் உலக நாடுகள்.. காரணம் என்ன..?

உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளர்களில் ஒன்றான இந்தியா, பாஸ்மதி அரிசி (Basmati Rice), பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி (Non Basmati White Rice), புழுங்கல் அரிசி (Par-Boiled rice) மற்றும் தீவனங்களுக்காக பயன்படுத்தப்படும் உடைக்கப்பட்ட அரிசி (Broken Rice) என பல்வேறு வகையான அரிசி வகைகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2022 செப்டம்பர் முதல் Broken Rice எனப்படுகின்ற உடைக்கப்பட்ட அரிசிக்கான ஏற்றுமதியை தடை செய்த இந்தியா, தற்போது வெள்ளை அரிசிக்கான ஏற்றுமதியையும் தடை செய்துள்ளது. எனவே அரிசிக்கான தட்டுப்பாடு இனி அதிகமாக ஏற்படலாம் என கருதி, அமெரிக்காவில் உள்ள கடைகளில் மக்கள் அரிசிக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அந்த வீடியோக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அரிசியை நூற்றுக்கணக்கில் மொத்தமாக வாங்குவதையும் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் இருந்து பாசுமதி தவிர பிற வகையான அரிசி ஏற்றுமதிக்கு தடை என்ற செய்தியால் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கடைகளில் இருந்த அரிசியை மூட்டை மூட்டையாக அள்ளி சென்றனர் 🙂 pic.twitter.com/tyH3JjT3Ad
— Vetri Vel ..Proud Hindu.. ….🇮🇳 🚩🚩🚩 (@vetriii) July 22, 2023
உலக அரிசி சந்தையில் வெள்ளை அரிசிக்கான திடீர் தட்டுப்பாடு ஏன்?
இந்தியாவில் பொதுவாக மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யபட்ட அரிசி உள்நாட்டு தேவை போக உலகின் 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் உலகின் பெரிய நான்கு தானிய ஏற்றுமதியாளர்களான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவை விட இந்தியா தானிய ஏற்றுமதியில் முன்னிலையில் இருந்து வருகிறது. இருப்பினும் இங்கு தக்காளி உட்பட அனைத்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலையும் இதற்கு முன்பு இருப்பதை விட வரலாறு காணாத அளவு விலை அதிகரித்து வருவதையே காண முடிகிறது.
இந்ந சூழ்நிலையில் இந்தியாவில் பருவ மழை காரணமாக வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே கனமழையும் தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு புதிதாக பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் அனைத்தும் வெள்ளத்தால் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அரிசியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்திய சந்தையில் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைப்பதற்காகவும், ஒன்றிய அரசு கடந்த ஜூலை 20 அன்று வெளிநாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதி செய்வதை தடை செய்வதாக அறிவித்தது.
அந்த அறிவிப்பில், “உள்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரிசிக்கான சில்லறை விலைகள் ஒரு வருடத்தில் 11.5 சதவீதமும், கடந்த மாதத்தில் மட்டும் 3 சதவீதமும் அதிகரித்துள்ளன. பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி 08.09.2022 அன்று விதிக்கப்பட்டது. 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்ட பிறகும், கடந்த ஆண்டு ஏற்றுமதியான 33.66 LMT (செப்டம்பர்-மார்ச் 2021-22)-ஐ விட இந்த ஆண்டுக்கான ஏற்றுமதி 42.12 LMT (செப்டம்பர்-மார்ச் 2022-23)-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த அரிசியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25% ஆகும். பாஸ்மதி அல்லாத இந்த வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், நாட்டில் அரிசியின் விற்பனை விலை குறையும்.” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கப்பலில் பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றும் பணி இந்த அறிவிப்பிற்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா கடந்த ஜூலை 20 முதல் வெள்ளை அரிசிக்கான தனது ஏற்றுமதித் தடையை அமல் படுத்தியுள்ளது.
உலக அரிசி சந்தையில் இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன?
உலக அரிசி ஏற்றுமதியில், இந்தியா 40 சதவீதத்துக்கும் அதிகமான அளவில் உள்ளது. இது கடந்த 2022-இல் மட்டும் 55.4 மில்லியன் மெட்ரிக் டன் அளவுகளாக உள்ளது. இவ்வாறு ஏற்றுமதி செய்யப்படும் 140 நாடுகளில் பெனின் (Benin), பங்களாதேஷ் (Bangladesh), அங்கோலா (Angola), கேமரூன் (Cameroon), ஜிபூட்டி (Djibouti), கினியா (Guinea), ஐவரி கோஸ்ட் (Ivory Coast), கென்யா (Kenya) மற்றும் நேபாளம் (Nepal) போன்ற நாடுகள் அதிகளவில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை இந்தியாவில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றனர்.
இந்நிலையில் வறட்சி மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல்வேறு நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வேளையில், உலகில் மிகவும் குறைந்த விலையில் அரிசியை ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவின் இந்த அறிவிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.
இதன் மூலம் உலக அளவில் அரிசி தட்டுப்பாடு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனவும் Fitch Solutions வெளியிட்ட கருத்துக்கணிப்பில் லண்டனைச் சேர்ந்த விவசாய பொருட்களுக்கான ஆராய்ச்சியாளரான சார்லஸ் ஹர்ட் (Charles Hart) தெரிவித்துள்ளார்.
மேலும் 2023 ஜூன் மாதத்திற்கான அரிசி பற்றாக்குறை (Rice Inflation) கடந்த ஆண்டின் சதவீதமான 6 %-இல் இருந்து, 12 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இனிவரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும் எனவும் பொருளாதார நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரிசியை முதன்மையான உணவாக உலக மக்கள் தொகையில் பாதி பேர் கொண்டுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் ஆப்பிரிக்கா போன்ற பல ஏழை நாடுகளின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது..??
ஆதாரங்கள்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1941139
https://www.thehindu.com/business/agri-business/centre-bans-export-of-non-basmati-white-rice
https://www.fitchsolutions.com/events/cop26-one-year-later-what-happened-and-whats-next