வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வர காரணம் என்ன ?

சமீப காலத்தில் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான மக்கள் புலம்பெயர்கின்றனர்; இதனால் தமிழர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது என சில அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் இங்குள்ள வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டிலும்; பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே சரியான வார்த்தை உபயோகமாக இருக்கும்.

Read this article in English : Why North Indians migrate to Tamil Nadu?

ஏன் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் தென்னிந்தியாவிற்கு அதிக அளவில் புலம்பெயர வேண்டும்? அதற்கான தேவை என்ன?

புலம்பெயர்பவர்களும் பூர்வீகர்களும் : 

வரலாறு முழுவதும் புலம்பெயர்தல் என்பது நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்று. தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வெளிநாடு செல்வது போல், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தென்னிந்தியாவில் நிலையான வேலைவாய்ப்பு, வருமானம், அமைதியான வாழ்க்கைச் சூழல் போன்ற காரணங்கள் இங்குப் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.

அத்தகைய புலம்பெயர்வுகள் நிகழும் போது, அப்பகுதியில் ஆரம்பக் காலத்திலிருந்து இருக்கும் பூர்வக்குடிகள், தங்களின் உரிமைகள் பாதிக்கப்படுகிறது, புலம்பெயர்ந்து வந்தவர்களால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து விட்டது எனக் சொல்வது உலகளவில் நடைபெறுகிறது .

அமெரிக்க பூர்வக்குடிகளாக இருந்த செவ்விந்தியர்களை கொன்று குவித்த வந்தேறிகள் தான் ஐரோப்பாவில் இருந்து வந்திறங்கிய இன்றைய அமெரிக்கர்கள். ஆனால், இன்று அவர்கள் ஆசிய மக்களை வந்தேறி வெளியேறு என்கிறார்கள் ! இதில் யார் வந்தேறி என்றால் இருவருமே. முன்னவர் நாடுபிடிக்க வந்தனர், பின்னவர்கள் உழைத்து நாடு செழிக்க உதவுபவர்கள்.

குறையும் தென்னிந்திய மக்கள் தொகை :

நம் கதைக்கு வருவோம், 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளில், அதாவது 2036ம் ஆண்டு மக்கள் தொகையில் எம்மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என ‘மின்ட்’ இணையதளம் கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டு இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டினர் உள்ளனர். இந்த நிலை 2036ம் ஆண்டு 5.14 சதவீதமாகக் குறைந்து விடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய மக்கள் தொகை வீழ்ச்சி என்பது தமிழ்நாடு மட்டுமில்லாமல் தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் ஏற்படும். மக்கள் தொகை குறைவதற்கு பொருளாதாரம், மருத்துவ வளர்ச்சி, கல்வி அறிவு, எதிர்கால திட்டமிடல் போன்ற பல்வேறு அம்சங்கள் காரணமாக உள்ளது.

தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறையும் அதே நேரத்தில், வட இந்திய மாநிலங்களான குறிப்பாகப் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் மக்கள் தொகை அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அத்தரவுகள் கூறுகின்றன.

ஆக தென்மாநிலங்களின் மக்கள்தொகை குறைகிறது, வட மாநிலங்களின் மக்கள்தொகை அதிகரிக்கும்.

கருவுறுதல் விகிதம் குறைதல் : 

‘ரீபிளேஸ்மென்ட் லெவல் பெர்டிலிட்டி’ (Replacement level fertility) என்பது மக்கள் தொகையைக் குறையாமலும், அதிகப்படுத்தாமல் அதே நிலையில் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை என மாறும் போது தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அளவை குறிப்பிடுவதாகும். மொத்த மக்கள் தொகையில், சராசரியாக ஒரு பெண் 2.1 குழந்தைகள் பெற்றெடுத்தால், மக்கள் தொகை Replacement level fertility அடைந்துள்ளதாக கருதப்படும். 

Total Fertility Rate 2.1க்கும் குறைவாக இருந்தால் காலப்போக்கில் மக்கள் தொகை குறையும். 2.1க்கு மேல் இருந்தால் மக்கள் தொகை அதிகரிக்கும். தமிழ்நாட்டில் Total Fertility Rate என்பது 2000களின் தொடக்கத்தில் இருந்தே 2.1க்கும் கீழாகவே இருந்து வருகிறது. NFHS-3 யில் 1.8 ஆகவும், NFHS-4ல் 1.7 ஆகவும், NFHS-5ல் 1.8 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. (NFHS – *National Family Health Survey)

மேலும் , 2022ம் ஆண்டு வெளியான ‘சாம்பிள் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம்’  (Sample Registration System) ஆய்வின் படி தமிழ்நாட்டின் Total Fertility Rate 1.4 என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2.1 என கருதப்படும் Replacement level fertilityயில் இருந்து மிகவும் குறைவானது.  2 தசாப்தங்களாக நிலவிவரும் இந்த சூழ்நிலையால், தமிழ் நாட்டில் வேலைக்கு செல்லும் வயதில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

மேலும், Mint பத்திக்கையின் ஆய்வின் படி, 2011ம் ஆண்டு தமிழ் நாட்டில் வசிப்பவர்களது சராசரி வயது (Median Age) 29.9 ஆக கணக்கிடப்பட்டது. இதற்கு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. 2036ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்களின் சராசரி வயது என்பது 40 ஆக இருக்கும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

அதே காலக்கட்டத்தில், பீகார் மாநிலத்தில் சராசரி வயது 28 ஆக இருக்கும். அதாவது இளைஞர்களின் எண்ணிக்கை அதிக அளவில் கொண்ட மாநிலம் பீகாராக இருக்கும். உத்திர பிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களும் இதே போன்று இளம் வயதினரை அதிகம் கொண்டவைகளாக இருக்கும்.

இதனால், தமிழ் நாட்டில் உருவாகும் மனித ஆற்றலுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய பிற மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது நிகழும் Inward migration எனப்படும் மற்ற மாநிலத்தவர் குடிபெயர்வுக்கும் இது முக்கியக்காரணம். உடல் உழைப்பு சார்ந்த வேலைக்கு இளைஞர்கள் எண்ணிக்கை மிக முக்கியம் அல்லவா ?

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி :

மக்கள் தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப கல்வி, வேலை வாய்ப்பு போன்ற கட்டமைப்பு வசதிகளையும் அம்மாநில அரசு ஏற்படுத்த வேண்டியது முக்கியம். அத்தகைய கட்டமைப்புகள் உருவாக்கப்படாத நிலையில் வேலைவாய்ப்பை நாடி தொழில் வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கு மக்கள் சொல்வார்கள் .

தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக உற்பத்தி செய்யும் மாநிலத்திற்கு வேலைக்கு ஆள் தேவை தானே ?

இந்தியாவின் GER (Gross Enrolment Ratio) என்பது 25ல் இருந்து 27 சதவீதமாக உள்ளது. இது தமிழ்நாட்டின் GER 47 முதல் 49 சதவீதமாக உள்ளது.

GER என்பது ஒரு மாநிலத்தில் 18 முதல் 23 வயதுக்குள் இருப்பவர்கள், எவ்வளவு பேர் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி படிப்பில் சேர்கிறார்கள் என்ற எண்ணிக்கை. 2035ம் ஆண்டு இந்தியா அடைய வேண்டும் என நிர்ணயித்துள்ள GER இலக்கை 2021ம் ஆண்டே தமிழ்நாடு அடைந்து விட்டது.

அதாவது நம் ஊர் பிள்ளைகள் அதிகப்பேர் பட்டதாரிகள் !

கல்வியில் வளர்ச்சி அதிகரிக்கையில் ‘மரபுசாரா தொழிலாளர்கள் (Unskilled Labours)’ பற்றாக்குறை ஏற்படுகிறது. அப்பற்றாக்குறையை பூர்த்தி செய்யப் பிற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் நமக்கு தேவை தானே ?

குஜராத் புலம்பெயர் தொழிலாளர்கள் : 

தொழில்துறையில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் புலம்பெயர்தல் என்பது அதிகம் நடைபெறுகிறது. அவ்வகையில் பார்க்கும்போது குஜராத் மாநிலத்திலும் அதிக அளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் குடியேறுகின்றனர்.

அவர்கள் மீதான வெறுப்புணர்வால் குஜராத் மாநிலத்தில் 2018ம் ஆண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மிகப்பெரும் தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அத்தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பும் சம்பவமும் நிகழ்ந்தது.

குஜராத் மாநிலம் ஹிம்மத்நகர் என்னும் கிராமத்தில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தையை ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டார். இதைச் செய்தது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிந்திர சாஹு என்று கண்டுபிடித்து, அவரை கைதும் செய்தது அம்மாநில காவல்துறை. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களால்தான் இம்மாதிரியான குற்றச் சம்பவங்கள் நடக்கிறது என வெளிமாநில தொழிலாளர்கள் மீது பெரும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அத்தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறி தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

இந்நிலையில், வட மாநில தொழிலாளர்களின் புலம்பெயர்தலுக்குக் கல்வி, பிறப்பு விகிதம், தொழில் துறை, நிலையான வருமானம் போன்றவற்றில் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி அடிப்படை காரணங்களாக அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு முறைசாரா தொழிலாளர்கள் அதிக அளவில் தேவை. ஆனால், நமது மாநிலத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதே சமயத்தில் கல்வி கற்றவர்களின் விகிதமும் அதிகம். அவர்கள் படிப்பிற்கு ஏற்ற வேலையை நாடி செல்கின்றனர். எனவே அதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப பிறமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருகை என்பது அவசியம்.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எப்படி அமெரிக்கா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பணி செய்து வருமானம் ஈட்டுகிறார்கள். அது போல் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு போன்ற மனித ஆற்றல் தேவையுள்ள பகுதிகளில் வேலை வாய்ப்பிற்காக புலம்பெயர்கின்றனர்.

அவர்களது உழைப்பு என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரும் உறுதுணையாகவே இருக்கும். புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் எனில், அது தமிழ்நாட்டின் வளர்ச்சியையே குறிக்கிறது.

Link :

TN’s total fertility rate declines to 1.4, lowest in India: SRS data

Demographic divide between north and south set to widen: official projections

Economy of Tamil Nadu

Sectorwise GDP of Gujarat

Replacement level fertility and future population growth

tab818

Thousands of migrant workers flee Gujarat after alleged hate attacks

Please complete the required fields.




Back to top button