This article is from Apr 07, 2021

மாஸ்க் அணியாத சாமானியரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்.. வைரலாகும் வீடியோ !

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மாஸ்க் அணியாத காரணத்திற்காக சாமானியர் ஒருவரை அவரது மகன் முன்னிலையிலேயே இரு காவல்துறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த இச்சம்பவத்தின் 1.54 நிமிட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று மீண்டும் இந்தியாவில் பரவி வரும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது என்றாலும் அதற்காக காவல்துறையினர் சாமானிய ஒருவரை சரமாரியாக தாக்கியது கண்டனங்களுக்கு உள்ளாகி உள்ளது.

“ மருத்துவமனையில் உள்ள என் தந்தைக்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும்போது மாஸ்க் நழுவி இருந்ததன் காரணமாக காவல் அதிகாரிகள் என்னைப் பிடித்து காவல் நிலையம் வரும்படி கூறினர். நான் சிறிது நேரம் கழித்து வருவதாக வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அதனை ஏற்காமல் என்னை தாக்கினர் ” என தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் ஏஎன்ஐ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதனிடையில், ” காவல் துறையினர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டபோது அந்த நபர் காவல் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாகவும், காவல் துறைக்கு கலங்கம் விழைவிப்பதற்காகவே காணொளியிள் அந்த காட்சிகளை வெட்டி பதிவிடுவதாகவும் ” இந்தூரின் எஸ்பி பக்ரி ஏஎன்ஐ ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும், காவல் அதிகாரிகள் செய்தது தவறு தான் என்றும், அவர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

” மாஸ்க் இறங்கி இருந்த காரணத்திற்காக என் தந்தை கொடூரமாக தாக்கினர். நான் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை ” என பாதிக்கப்பட்டவரின் மகன் கூறியதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இரு காவலர்களால் தனது தந்தை தாக்கப்படுவதை பார்த்து எதுவும் செய்யமுடியாத நிலையில் அவரின் மகனின் சுற்றி சுற்றி வந்து கதறும் காட்சி மனதை கலங்க வைக்கிறது. இச்சம்பத்திற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனம் எழுந்து வருகிறது.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி) 
Please complete the required fields.




Back to top button
loader