This article is from Jul 20, 2021

ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு ஊதியம், வேளாண் வருமானத்தை சேர்க்க வேண்டாம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு !

இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் 27% இடஒதுக்கீடு ஆனது இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு(ஓபிசி) வளமான பிரிவினரை(Creamy Layer) நீக்கப்பட்டே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு(ஓபிசி) சாதி சான்றிதழ் வழங்கும் போது பெற்றோரின் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ள வேண்டியதில்லை என தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சீர்மரபினர் நலத்துறை செயலாளர் ஆ.கார்த்திக் வெளியிட்ட கடிதத்தில்,

” இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை(Creamy layer) நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் இந்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை கணக்கிடும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தைச் சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு 1 லட்சத்திலிருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

2. மேற்சொன்ன ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிரமம் இருப்பதாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசின் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் பயன் பெற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.

3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து இந்திய அரசின் அலுவக குறிப்பாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றன.
உதாரணமாக, பெற்றோரின் ஆண்டு வருமானம் கீழ்கண்டவாறு இருக்கும் சூழ்நிலையில், 1, ஊதிய வருமானம் ரூ.3 லட்சம், 2. வேளாண் வருமானம் ரூ.4 லட்சம் , 3. இதர வருமானம் ரூ.3 லட்சம் என இருக்கும்பட்சத்தில் ஊதியம் மற்றும் வேளாண் வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் இதர வருமானத்தை மட்டும் கணக்கில் கொண்டு ஓபிசி சான்றிதழ் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இதர வருமானம் 8 லட்சத்திற்கு மேல் செல்கையில் சான்றிதழ் வழங்க வேண்டாம் எனக் கூறப்பட்டு உள்ளது.
Please complete the required fields.




Back to top button
loader