This article is from Jun 23, 2020

OBC இடஒதுக்கீட்டின் வரலாறும், அவசியமும் !

இடஒதுக்கீடு என்றுக் கூறினாலே எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் மட்டுமே இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள், அனைவருக்கும் திறமையின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும், இடஒதுக்கீட்டு முறையை நிறுத்த வேண்டும் எனப் பேசுபவர்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். அப்படி பேசுவது யார் என்று பார்த்தால் இடஒதுக்கீட்டில் பயனடைந்தும், அதை அறியாமல் அதற்கு எதிராக பேசும் மக்களே. நாங்கள் ஆண்டப்பரம்பரை எனக் கூறிக் டிக்டாக் வீடியோ போட்டு ஜாதி பெருமை பேசி வரும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சமகாலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைப் போன்று அவ்வளவு எளிதாக கிடைத்தது அல்ல.

 

இடஒதுக்கீடு முறையில் அதிக அளவில் பங்கு வகிப்பது ஓபிசி பிரிவினரே. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 69% பிரிவு வாரியான இடஒதுக்கீடும், 31 சதவீதம் பொதுப் பிரிவினருக்கும்(யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்) வழங்கப்பட்டு வருகிறது. இதில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 26.5%, பிற்படுத்தப்பட்ட சமூகம் (முஸ்லீம்) 3.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 20%, எஸ்.சி 18%, எஸ்.டி 1% என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீட்டில் பெரிய பலனை அனுபவித்து வருகிறார்கள் எனக் குற்றம் சுமத்தப்படும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மொத்தம் 19% இடஒதுக்கீடும், அவர்களுக்கு எதிராக பேசி வரும் ஓபிசி, எம்பிசி பிரிவினருக்கு மொத்தம் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை அவர்களே அறியவில்லை என்பதே நிதர்சனம். ஆக, எஸ்.சி, எஸ்.டி அல்லாதவர்களுக்கும் இடஒதுக்கீடு பெரிதும் பயன்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு சில ஜமீன்கள் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவை அளித்தனர், மெட்ராஸ் மாகாணத்தில் நீதிக்கட்சி உள்ளிட்டவை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். சுதந்திர இந்தியாவில் அம்பேத்கர் உள்ளிட்டோரின் முயற்சியின் பயனாக எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு சாத்தியமானது. ஆனால், ஓபிசி பிரிவினருக்கு அப்படி இல்லை.

இன்று குறிப்பிட்ட சாதியின் தலைவராக மாற்றப்பட்ட அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் நேருவிடம் கடிதத்தை வழங்கினார். அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிக முக்கியமான ஒன்று ” ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அதற்காக தனி கமிஷன் அமைக்க வேண்டும் ” என வலியுறுத்தியே. அம்பேத்கரின் அழுத்தத்தின் காரணமாக 1953-ம் ஆண்டு காக்கா காலேல்கர் கமிஷன் அமைக்கப்பட்டு 1955-ம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த கமிஷனின்படி ஓபிசி பிரிவினருக்கு 52% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. அந்த பட்டியலில், 2,399 பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், 837 மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் இடம்பெற்றனர். ஆனால், அப்பொழுது அந்த பரிந்துரை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது.

இதன் பிறகு 1979-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மொரார்ஜி தேசாய் அரசானது பீகாரின் முன்னாள் முதல்வர் பிண்டேஸ்வரி பிரசாத் மண்டல்  தலைமையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இரண்டாம் கமிஷனை அமைத்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு 1980 டிசம்பர் 31-ம் தேதி மண்டல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் ஆட்சி மாற்றம் என அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் 1990 ஆகஸ்ட் 7-ம் தேதி பிரதமர் விபி சிங் நாடாளுமன்றத்தில் தங்களின் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். அதில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

1990-ல் நாடாளுமன்றத்தில் மண்டல் கமிஷன் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, ” பிரிட்டிஷார் செய்ததில் இருந்து மிகவும் வேறுபட்டதல்ல. நமது நாட்டைச் சாதி மற்றும் மதம் குறித்து பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், விரிவான செயல் திட்டமே பின்தங்கிய சமூகங்களுக்கான உறுதியான செயல் திட்டம் ” எனக் கூறியதாக 2006-ல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாகவும், பின்னும் பிரதான முன்னணி கட்சிகள், முன்னேறிய வகுப்பினர் மற்றும் மாணவர்கள் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நிகழ்ந்ததை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

செப்டம்பர் மாதம் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தின் போது டெல்லி பல்கலைக்கழக மாணவர் தன்னை தீயிட்டுக் கொழுத்திக் கொண்டார். இதேபோல் அந்நகரில் பல மாணவர்கள் தீ வைத்துக் கொண்டனர். ஆனால், தென்னகத்தில் நீண்ட வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றால் அதன் தேவை புரிந்து இருந்தனர்.

இப்படி 1950-களில் தொடங்கி 40 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு 1990-ல் தான் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு என்பது சாத்தியமாகி இருக்கிறது. அதுவும் காக்கா காலேல்கர் கமிஷன் பரிந்துரை செய்த 52%-ல் இருந்து 27% என குறைந்தும் உள்ளது. தற்போது உள்ள 27 சதவீதமும் போராடி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இடஒதுக்கீடு கொண்டு வரும் போது இந்த சாதிக்கு இவ்வளவு, அந்த சாதிக்கு இவ்வளவு என எடுத்த உடன் கொடுக்கவில்லை. அதற்காக அமைக்கப்படும் கமிஷன், சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் அளிக்காமல் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி அறிவு உள்ளிட்டவையில் பின்தங்கியவர்களை ஆராய்ந்தே இடஒதுக்கீட்டில் இடமளிக்கின்றனர்.

சரி, இந்தியாவில் இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதான் அனைவரும் முன்னேறி விட்டனரே பிறகு எதற்கு இடஒதுக்கீடு, அதை நிறுத்தி விடலாம் எனக் கூறுபவர்கள் ஏராளம். அவர்கள் புரிந்து கொள்ள ஆர்.டி.ஐ தகவலுடன் சில உதாரணத்தை சொல்ல விரும்புகிறோம்.

விரிவாக படிக்க : இட ஒதுக்கீடு எதற்காக ? | யார் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் !

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சமூக வாரியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டது. 2017-ம் ஆண்டு தரவு படி, தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களை வகுப்பு வாரியாக பிரித்து பார்க்கையில், ஓசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 74% பேர், பிசி பிரிவில் 40%, எம்பிசி பிரிவில் 25% பேர், பட்டியல் இனத்தவர் (எஸ்சி) 15% பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

பிசி பிரிவில் 50 சதவீத பேர் கூட தனியார் பள்ளியில் படிக்கவில்லை, எஸ்.சி பிரிவில் 15% பேர் மட்டுமே தனியார் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால், ஓசி பிரிவில் 74% பேர் தனியார் பள்ளியில் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளில் பணம் கட்டி படிக்க வைக்க முடியும் என்ற அளவிற்கு பொருளாதார வசதி கொண்டவர்கள் யார் குறைவு என நீங்களே புரிந்து கொள்வீர்கள். இப்படியிருக்கையில், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வேண்டாம் எனக் கூறுவதே அபத்தம்.

சாதி சான்றிதழை கிழித்து விட்டால் சாதி ஒழிந்து விடும் எனக் கூறுவதெல்லாம் அற்பத்தனமான பேச்சுக்கள். சாதி என்பது வெறும் சான்றிதழில் இருக்கும் விசயம் அல்ல, அது ஒவ்வொருவரின் தலையில் ஏறி உட்கார்ந்து இருக்கும் விசயம். சாதி பெருமை பேசி மக்களை ஓட்டுக்களாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் கூட இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்களை முன்னேடுத்து இருக்கிறார்கள். ஆனால், தங்கள் சமூகத்தினர் அதற்கு எதிராக திசை திருப்பப்பட்டு உள்ளார்கள் என்பதை அறிந்தும் வாய்மூடி அமைதி காத்து வருகிறார்கள். எந்த தலைவராக இருந்தாலும் தன்னை நம்பும் சமூகத்தினரை சமூகத்திலும், கல்விலும், பொருளாதாரத்தில் முன்னேறவே வழிவகை செய்ய வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சாதி பெருமை பேசி வரலாற்றை மறந்து தன்னை விட பின்தங்கிய சமூகத்திடம் சண்டையிட்டு வருகிறார்கள். இடஒதுக்கீட்டின் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது ஓபிசி பிரிவினரே. இடஒதுக்கீடு தவறானது எனும் எண்ணம் மாற வேண்டும். மக்கள் தெளிவு பெற வேண்டும்.

Links : 

Why only Dalit icon, Ambedkar is an OBC icon too

Sunday Story: Mandal Commission report, 25 years later

The Constitution (Seventy-sixth Amendment) Act, 1994

Once upon a time, Rajiv Gandhi asked same questions as SC

Please complete the required fields.




Back to top button
loader