This article is from Dec 25, 2021

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருளின் அடிப்படை விலையை அதிகரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் !

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பொதுமக்களின் வாழ்விலும், அரசின் மீதும் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது. அரசியல் காரணமாக பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில மற்றும் ஒன்றிய அரசு குறைக்க செய்கிறது. சிறிதளவு வரி குறைந்தாலும் கூட பெட்ரோல் விலை 100ரூபாயைத் தாண்டியே இருக்கிறது.

கடந்த 50 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40-க்கும், டீசல் ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 50 நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஏறி, இறங்கினாலும் கூட பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தையே ஏற்படுத்துகிறது.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 84 டாலர்களாக இருந்த போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டெல்லி விலைப்பட்டியலில், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை(வரிகள் இல்லாமல்) 44.06 ரூபாயாக இருந்துள்ளது.

ஆனால், டிசம்பர் 16-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 72 டாலர்களாக குறைந்த போதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டெல்லி விலைப்பட்டியலில், வரிகள் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 47.93 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பாக, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 5 ரூபாய் மற்றும் 10ரூபாய் வீதம் ஒன்றிய அரசால் குறைக்கப்பட்டது. பல மாநில அரசுகளும் வாட் வரியைக் குறைந்து கொண்டன.

இதுவே, கடந்த செப்டம்பர் மாதம் 16-ம் தேதி கச்சா எண்ணெய் விலை 73 டாலர்களாக இருந்த போதும் கூட வரிகள் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 40.78 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது.

இதன் பிறகு அக்டோபரில் கச்சா எண்ணெய் விலை 80 டாலர்களைத் தாண்டி சென்ற பிறகு தற்போதுவரை கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களாக குறைந்தே இருக்கிறது. ஆனால், அடிப்படை விலை குறைக்கப்படாமல் அதிகரிக்கவே செய்யப்பட்டுள்ளது. டாலரின் இந்திய மதிப்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருப்பினும், தோராயமாக லிட்டருக்கு 8 ரூபாய் அதிமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை எனப் பெரிதாய் பேசப்பட்டாலும், மகிழ்ச்சி கொண்டாலும் கூட சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட பெட்ரோல், டீசலின் அடிப்படை விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து பெட்ரோல், டீசல் விலையைக் கையாண்டு வருகின்றன.

Links : 

Price Buildup of Petrol at Delhi effective 16-Dec-21

Price Buildup of Petrol at Delhi effective 16-Oct-21

Price Buildup of Petrol at Delhi effective 16-Sep-21

Oil Price Charts

Please complete the required fields.




Back to top button
loader