This article is from May 09, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் வாய்ப்பில்லையா.. அமைச்சர் பி.டி.ஆர் கூறியதென்ன ?

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்து இருந்தனர். ஆனால், நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

பி.டி.ஆர் கூறியதென்ன ? 

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிதித்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசிய போது, ” பல மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்து உள்ளனர். ராஜஸ்தான் மாநில அரசு தேசிய ஓய்வூதியத் திட்டத்தில்(என்பிஎஸ்) சேர்ந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு செல்கிறோம் எனக் கூறி அங்குள்ள நிதியை எடுங்கள் என கேட்டதற்கு, பிஎஃப்ஆர்டிஏ ஆனது உரிமை கிடையாது, அதை திருப்பி தர முடியாது என ஒரு விளக்க கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது.

ஏனெனில், 2003-ம் ஆண்டிற்கு முந்தைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், 2004-க்கு பிந்தைய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், 2003-க்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தில் முழு நிதி அரசின் பொறுப்பில், கணக்கில் இருந்தது. அரசிற்கு அந்த தொகையை நிறைவேற்றும் கடமை உள்ளது. அப்போ அது அரசின் நிதி, கூடுதலாகவோ, குறைவாகவோ வைத்துக் கொள்ளலாம், இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் எடுத்துக் கொள்ளலாம், கடன் வாங்கலாம்.. இதெல்லாம் அரசின் நிதி, அரசின் கடமை.

ஆனால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிய பிறகு அனைத்தும் தனி நபரின் பணம், அவர்களுடைய ஊதியத்தில் இருந்தும், அரசு அளிக்கும் பங்களிப்பும் ஒவ்வொரு நபரின் பெயரில் தனியாக கணக்கில் வைக்கப்படுகிறது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தவிர மீதமுள்ள மாநிலங்களும் என்பிஎஸ்-ல் சேர்ந்து விட்டு நிதியை மாற்றி விட்டார்கள். இதற்கு முந்தைய ஆட்சியில் 2016-ல் ஒரு ஆய்வுக் குழு அமைத்து 2018-ல் அவர்களுடைய அறிக்கையையும் பெற்று இருக்கிறார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தனி நபர் கணக்கில் நிதியை வரவு வைத்த பிறகு அதை திருப்பி எடுத்து அரசு நிதியாக ஆக்குவதற்கு சட்டம் அனுமதிக்காது என்கிற விளைவு இருக்கிறது. இதை சிந்திக்க வேண்டும்

இந்த ஆண்டு ஓய்வூதியத்திற்கு ரூ.39,500 கோடி செலவிடப்படுகிறது. 2004-க்கு பிறகு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூ.3,250 கோடி ஒதுக்கப்படுகிறது. சராசரியாக, ஒரு பணியாளருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் அரசு தரப்பில் பங்களிப்பாக ஒதுக்கப்படுகிறது. 2003-க்கு முந்தைய பணியாளர்களின் ஓய்வூதியத்திற்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சேர்ந்து ரூ.24,000 கோடி செலவிடப்படுகிறது. சராசரியாக, ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம். இதுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கும், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.

கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர்களின் ஓய்வை நிறுத்தி வைத்துள்ளனர். அதனால், சேர்த்து வைத்து எல்லாம் இந்த ஆண்டு ஓய்வுப் பெறும் போது ரூ.2,150 கோடி செலவிட உள்ளது. அரசு நிதியுதவி பெரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓய்வுப் பெற்றவர்களின் ஓய்வூதியத்திற்காக ரூ.5,200 கோடி செலவிடப்படுகிறது.

இதை ஒப்பிட்டு பார்க்கும் போது , சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரைக்கும் ஓய்வுப் பெற்ற அனைத்து நீதிபதிகளின் ஓய்வூதியத்துக்கு ரூ.7 கோடி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியத்திற்கு ரூ40 கோடி செலவிடப்பட உள்ளது.

ஆகையால்தான் சொல்கிறேன், நியாயத்திற்கு ஏற்ப பேரவையின் முன்னவரும், முதலமைச்சரும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுபட்டவன். அதை செயல்படுத்துவேன் ” எனப் பேசியுள்ளார்.

நிதியமைச்சர் பேசியதில், பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவதில் சட்ட சிக்கல் மற்றும் அதிக செலவு ஆகிய இரு காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க கூடாது, செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், ” பழைய ஓய்வூதிய திட்டம் சுமையல்ல. அரசின் கடமை. தமிழக நிதியமைச்சர் நேற்று, மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது மீண்டும் ஒருமுறை பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை என தெரிவித்திருக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்திட வேண்டும் ” என அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. ஆனால், அதிலுள்ள சிக்கலை நிதியமைச்சர் கூறியுள்ளதால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு மீண்டும் கொண்டு வருமா என்கிற கேள்வி எழுந்து வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader