ஒரு முட்டை உற்பத்தியாக 196 லிட்டர் தண்ணீர் தேவை.. விமர்சிக்கப்படும் மேடை பேச்சு.. உண்மை என்ன ?

மேடையில் பேசும் இளைஞர் ஒருவர், ” நீர்நிலைகள் காணாமல் போய்விட்டது. நாம் சாப்பிடும் ஒரு முட்டை உற்பத்தியாகி விற்பனைக்கு செல்ல 196 லிட்டர் தண்ணீர் செலவாகிறது எனச் சொல்கிறார்கள். ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி முட்டைகள் உற்பத்தியாகி விற்பனைக்கு போகிறது. இந்தியாவின் முட்டைத் தேவையில் 90% தமிழ்நாடுதான் பூர்த்தி செய்கிறது ” எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வைரலாகி வருகிறது.

Archive link 

வைரல் செய்யப்படும் வீடியோவில் பேசும் நபர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்றும், அந்த வீடியோவில் பேசியதை வைத்து நாம் தமிழர் கட்சியினரை கடும் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.

உண்மை என்ன ? 

ஒரு முட்டை உற்பத்தியாகுவதற்கு 196 லிட்டர் தண்ணீர் தேவை எனப் பேசியது பற்றி தேடும் போது, இது கடந்த 2016ம் ஆண்டில் இருந்தே சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது என அறிய முடிந்தது. ஆனால், மேடையில் பேசியவர் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவரா மற்றும் அவர் பேச்சின் முழுமையான வீடியோவும் நமக்கு கிடைக்கவில்லை.

மேற்கொண்டு தேடிய போது 2013ம் ஆண்டு, ” ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் மறை நீர்! ” எனும் தலைப்பில் மறை நீர் குறித்து தி இந்து தமிழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது.

அக்கட்டுரையில், ” முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கலுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தப்பட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம் ? முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் 4,325 லிட்டர் ” என இடம்பெற்று இருக்கிறது.

ஒரு பொருள் உருவாகுவதற்கு பின்னால் பயன்படுத்தப்பட்டு இருக்கும் நீரை மறை நீர் எனக் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, ஒரு உணவுப்பொருளோ அல்லது காரோ உருவாக அதிக அளவு நீர் தேவைப்படும் நிலையில் அதை இறக்குமதி செய்து அந்த பொருள் உருவாவதற்கு தேவையான தண்ணீர்(மறை நீர்) பயன்பாட்டை இறக்குமதி செய்யும் நாடு சேமித்து வைத்துக் கொள்கிறது. மறை நீர் பற்றி பேசுக்கள் பல ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வின் இணையதளத்தில், ஒரு பொருள் உருவாக பயன்படுத்தப்படும் தண்ணீர் பற்றிய கேள்விப் பதில் பற்றிய பிரிவில், ” ஒரு முட்டைக்கு 50 கேலன் (189 லிட்டர்) தண்ணீர் பயன்படுத்தப்படுவது சரியான விடை என்றும், பெரும்பாலான தண்ணீர் கோழிக்கு கொடுக்கவே பயன்படுத்தப்படுகிறது என்றும் ” குறிப்பிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் மறை நீர் பற்றி பேசுபவர்கள் இப்படி ஒரு பொருள் உருவாவதற்கு பின்னால் இருக்கும் தண்ணீர் பயன்பாடு என உதாரணமாகக் குறிப்பிடுவது. பெரும்பாலும், ஒரு கார் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரை அளவையே மறை நீருக்கு உதாரணமாக கூறுவதுண்டு.

Links : 

ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் மறை நீர்!

The Water Content of Things: How much water does it take to grow a hamburger?

Please complete the required fields.
Back to top button
loader