ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை தடை செய்ய உரிய சட்டம் வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை!

ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின்றன. ஆனால், இதனால் பணத்தை இழப்பவர்கள் குறித்து யாரும் பேசுவதில்லை, இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்னவென்று யூடர்ன் வீடியோ வாயிலாக விளக்கி இருந்தோம். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஆன்லைனில் பணம் கட்டி விளையாடப்படும் ரம்மி உள்ளிட்ட சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
நெல்லையைச் சேர்ந்த சிலுவை என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தனியார் தோட்டத்தில் நண்பர்கள் உடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த போது கூடங்குளம் போலீசார் தங்களின் மீது வழக்குப் பதிவு செய்தனர். பொது இடத்தில் சீட்டு விளையாடினால் தான் குற்றம். எனவே இந்த வழக்கை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுக்களை விளையாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட இலவசமாக அனுமதிக்கிறார்கள். தமிழகத்தில் லாட்டரி சீட்டை தடை செய்தது போன்று ஆன்லைன் மூலம் விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் எஸ்3த்ரீ, பாக்கெட் 52, போக்கர்டங்கல் போன்ற பல்வேறு இணைய விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். வேலையில்லாத இளைஞர்களின் நேரம் மற்றும் திறனை இதுபோன்ற விளையாட்டுகள் கெடுக்கின்றன. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டம் இயற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என அறிவுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் மூலம் பணம் கட்டி விளையாடும் ரம்மி போன்ற விளையாட்டுகள் தொடர்பாக உரிய சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.