தேங்காய் மூடி 1,300 ரூபாய், வரட்டி 300 ரூபாய் | ஆன்லைன் விற்பனை.

மதிப்பீடு
ஆன்லைன் வர்த்தகத்தின் பயன்பாடு பெருகி வரும் வேளையில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அப்படி விற்பனை செய்யப்படும் பொருட்களில் நாம் அன்றாடம் பார்க்கும் எளியப் பொருட்கள் அல்லது சிறு வயதில் நம்மை சுற்றி காணப்பட்டவைகளை விலை கொடுத்து வாங்குவதாக பார்க்கும் பொழுது நகைக்க வைக்கிறது.
ஆன்லைன் விற்பனை தளத்தில் நாம் இயற்கையாகவே பார்த்தவைகள் மற்றும் நம் பாரம்பரிய வழியில் பயன்படுத்திய பல பொருட்களையும் காண முடியும். இதெற்கெல்லாம் பணம் கொடுத்து வாங்க வேண்டுமா என நீங்கள் கூறினால் கடந்த காலத்தில் சிறிதாவது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவராக இருந்து இருப்பீர்.
அப்படி ஆச்சரியமூட்டும் பொருட்கள் என்ன என்ன என்பதை வரிசையாக காணலாம்.
தேங்காய் மூடி :
அமேசான் நிறுவனத்தின் தளத்தில் “ Natural Coconut shell cup “ என்ற பெயரில் தேங்காய் மூடியை விற்பனை செய்கின்றனர். நாம் பயன்படுத்தி விட்டு வேண்டாம் என தூக்கி எறியும் தேங்காய் மூடி, அதிலும் அரை மூடியை ரூ.3000 க்கு விற்கிறார்கள். அதற்கு சலுகை அளித்து 1,300, 1,000 என விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
தேங்காய் மூடியை சுத்தம் செய்து சில மாறுதல்கள் செய்து விற்பனை செய்பவர்களும் உண்டு, இது இயற்கையான தேங்காய் மூடி என விரிசல் உள்ள மூடியை விற்பனை செய்வதையும் பார்க்க முடிகிறது. வெளிநாடுகளில் இதற்கு ரேட்டிங் கூட கொடுக்கிறார்கள் என்பது வேடிக்கை.
மாட்டு சாண வரட்டி :
“ COW DUNG CAKE “ என்ற பெயரில் மாட்டின் சாணத்தின் வரட்டியை அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனை செய்கின்றனர். வரட்டி விற்பனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. ஆனால், அவற்றின் பயன்பாடு வீடுகளில் அடுப்பு எரிப்பதற்காக இருக்கும்.
தற்போது 32 எண்ணிக்கை கொண்ட வரட்டிக்கு ரூ.300 விலை நிர்ணயம் செய்து அதற்கு சலுகை அளித்து ரூ.200 மற்றும் டெலிவரி சார்ஜ் ரூ.119 சேர்த்து விற்கின்றனர். இதன் விற்பனை சென்னையில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.
மா இலை :
வீட்டில் விசேச நாட்களில் மா இலை தோரணங்கள் கட்டுவது நம் பண்பாடு. அத்தகைய மா இலைகளை அயல்நாட்டில் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பது ஆச்சரியம். பச்சை நிறத்தில் இருக்கும் மா இலைகளுக்கு 50% சலுகை அளித்து 14-29 யூரோக்கள் நிர்ணயிக்கின்றனர்.
தமிழகத்தில் கூட நகர்புறங்களில் விசேச நாட்களில் மா இலைகள் கிடைப்பது அரிதாகிறது. மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆகவே, கடைத் தெருக்களில் மா இலைகள் கூட விற்பனை செய்வதை பார்க்கலாம்.
வேப்பம் இலை :
இந்தியாவில் வேப்பம் மரங்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெப்பமண்டல பகுதிகளில் வேப்பம் மரம் அதிகம் வளரும். மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் மரத்தின் இலைகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் கூட இதனை விற்பனை செய்கின்றனர்.
அயல்நாட்டில் உள்ள ஆன்லைன் வர்த்தக தளத்தில் புத்துணர்ச்சியான வேப்பம் இலைகள் 2.99 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் 242 ரூபாய். இதுபோன்ற இந்தியப் பொருட்களை நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைன் தளத்தில் விற்கின்றனர்.
வேப்பம் குச்சி :
டூத் பேஸ்ட், ப்ரெஷ் என நாம் அதிகம் பயன்படுத்தி வருகிறோம், ஆனால், வெளிநாட்டில் வேப்பம் குச்சியைப் பயன்படுத்த சொல்லி விற்கிறார்கள் என்ற பதிவுகளை அதிகம் பார்க்கலாம்.
அமெரிக்காவில் உள்ள ஆன்லைன் தளத்தில் 6 வேப்பம் குச்சியின் விலை 12 டாலர்களுக்கு விற்கின்றனர். ஏனெனில், வேப்பம் சார்ந்தவை அங்கு அரிதானவையே.
இது போன்று பல உதாரணங்கள் கூறிக் கொண்டே செல்லலாம். இந்தியர்களே ஆன்லைன் வர்த்தக தளத்தில் இங்குள்ள பொருட்களை விற்பனை செய்கின்றனர். அமேசான் போன்ற பெரு நிறுவனங்களிலும் இயற்கையான பொருட்கள் என நாம் எதை எல்லாம் பெரிதாக கருதவில்லையோ அவற்றை அதிக விலைக்கு விற்கின்றனர்.
நம் கண்முன்னே காலங்கள் மாறுகிறது. நாம் ஒதுக்குபவை கூட எங்கோ யாருக்கோ விற்கப்படுகிறது. நகர்புற வாழ்க்கையில் பலவற்றையும் இழந்து வருகிறோம்.
இயற்கைப் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானவையே. முடிந்தவரை இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம் ! இனி எதையும் சாதரணமாக எண்ணி ஒதுக்கும் முன் யோசிப்போம்.
Navya Agriallied Shivapriya Havan Kande/Cow Dung Cake/Uple/Thepdi/130 mm Round Shape – Set of 32
Coconut Geckos Half Shell Cave