This article is from Jan 20, 2020

ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத டெபிட், கிரெடிட் கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனை சேவை ரத்து – ஆர்.பி.ஐ

இந்தியா முழுவதும் பல கோடி வங்கி கணக்கு தொடங்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலானோர் ஏடிஎம் கார்டை கூட பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக, பலருக்கு வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கவே முடியாமல் அபாரதத் தொகை செலுத்த வேண்டி இருக்கிறது. நாட்டில் ஆளுக்கு ஒரு டெபிட் கார்டுகளை வைத்திருந்தாலும் கூட ஒருமுறை கூட ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தாதவர்களும் உண்டு.

இந்நிலையில், இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனை வசதியை நீக்கும் நடவடிக்கையை செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி குறிப்பாணை அனுப்பியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய பரிவர்த்தனை விதியானது அனைத்து வங்கிகளுக்கும், பயனர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய விதியானது வருகிற மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகள் நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் தங்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை, சர்வதேச பரிவர்த்தனை மற்றும் தொடர்பில்லா பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் புதிதாக வங்கியில் விண்ணப்பித்து பெற வேண்டி இருக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களின் கார்டுகளை ஏடிஎம் மையங்கள், விற்பனை மையங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை, சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பில்லாத பரிவர்த்தனைகள் என சுவிட்ச் ஆன் அல்லது சுவிட்ச் ஆப் செய்ய முடியும் என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

நகர்புறங்களில் பெரும்பாலானோர் தங்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்காக பயன்படுத்தி இருக்கக்கூடும். ஆனால், ஊரகப் பகுதிகளிலேயே அதிக அளவிலான மக்கள் டெபிட் கார்டுகளை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக, இத்தகைய பகுதிகளில் இருக்கும் கார்டுகளின் விவரங்கள் திருடி டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடி நடைபெறுகிறது. இதை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளதாக செய்திகளில் கூறப்படுகிறது.

இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தாத டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை கொண்டவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய விதியை அறிவுறுத்த வேண்டியது அவசியம். வாடிக்கையாளர்களின் கார்டுகளின் நிலை குறித்து வங்கிகளும் எஸ்.எம்எஸ் மற்றும் ஈமெயில் வழியாக தெரிவிக்க வேண்டும் என ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.

Links : 

Enhancing Security of Card Transactions

Debit, credit cards to be disabled for online transactions if not used before

Never used Credit, Debit card for online/contactless transactions? You will lose this facility soon!

Please complete the required fields.




Back to top button
loader