ஓடிடி சென்சார்ஷிப்: மத்திய அரசு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?

நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபலமடைந்ததிலிருந்து, அவற்றின் காணொளிகள் கூறிவரும் கருத்துக்கள் மீதான விமர்சனங்கள் பரவலாக எழுந்துள்ளன. இதனிடையில், தொலைகாட்சி மற்றும் சினிமாத்துறைக்கு உள்ளதைப் போன்ற “சென்சார்ஷிப்” முறையை ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு நடைமுறைப்படுத்த இருக்கிறது.

இந்தியா அரசு தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 பிரிவு 87 கீழ் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021யை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரின் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

மத்திய அரசின் இந்த விரிவான விதிகள் ஆன்லைன் செய்தி தளங்கள் போன்ற பல்வேறு டிஜிட்டல் ப்ளாட்பார்ம்களில் உள்ள தகவல்களுக்கும், நெட்ஃப்லிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான்  பிரைம் போன்ற ஓடிடி தளங்களுக்கும் பொருந்தும்

ஓடிடி  தளங்களைப் பொருத்தவரை 3-அடுக்கு குறை தீர்க்கும் வழிமுறை (3-tier three-level grievance redressal mechanism) எனப்படும் வழிமுறையை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி,

நிலை 1 :  ஓடிடி  தளங்களே தங்கள் காணொளிகள் மீது வைக்கப்படும் புகார்களை 15 நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். அதற்கு மேலும் திருப்திகரமாக தீர்க்கப்படவில்லை என்றால் புகாரைப் பல்வேறு ஓடிடி தளங்கள் கூட்டாக நிறுவப்பட்ட சுய ஒழுங்குமுறை அமைப்பிடம்  (Self – regulatory body) மேல்முறையீடு செய்யலாம் .

நிலை 2 :  சுய ஒழுங்குமுறை அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் யாராவது பதவிவகிக்கலாம். ஊடகங்கள், ஒளிபரப்பு, பொழுதுபோக்கு, குழந்தை உரிமைகள், மனித உரிமைகள் அல்லது பிற தொடர்புடைய துறைகளில் இருந்து ஆறு உறுப்பினர்களுக்கு குறையாமல் இந்த அமைப்பில் இடம்பெறலாம். இந்த அமைப்பிற்கு தணிக்கை அதிகாரமும் உண்டு

நிலை 3 : நிலை மூன்றில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமே காணொளிகளை மேற்பார்வை செய்கிறது. “ ஓவர் சைட்  மெக்கானிசம்” எனப்படும் இந்த மேற்பார்வையில் காணொளிகளைத் தணிக்கை செய்வதற்கான வரையறைகளையும், புகார்களை கையாள்வதற்கான விதிகளையும் தானே வகுக்கிறது.

இதை தாண்டி, மத்திய அரசு தனது “அவசரகால அதிகாரங்களாக” சிலவற்றைக் கொண்டுள்ளது. அதன்படி, “ அவசர நடவடிக்கைகளுக்கான தேவை ஏற்பட்டால் ” தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர்,“இது அவசியமானது அல்லது நியாயமானது என முடிவுசெய்தால் ” எந்தவொரு தகவலையும் பொதுமக்கள் அணுகுவதைத் தடுக்க உத்தரவுகளை வழங்கலாம். அவ்வாறு செய்வதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் . அது ஒரு இடைக்கால நடவடிக்கையாக இருக்கும்.

மேலும், “ சினிமா சென்சார்ஷிப்பைப் போன்று ஓடிடி  தளங்களே தங்களுடைய காணொளிகளை சரிபார்த்து U (யுனிவர்சல்), U / A 7+, U / A 13+, U / A 16+, மற்றும் A (வயது வந்தோர்) என ஐந்து வயது அடிப்படையிலான வகைகளாக  வகைப்படுத்தவேண்டும் . U / A 13+ அல்லது அதற்கு மேற்பட்டதாக வகைப்படுத்தப்பட்டதை “பேரண்டல் லாக்” செய்வதற்கான வசதியினையும் , “A” என வகைப்படுத்தப்பட்டதை நம்பகமான வயது சான்றிதழ்களை சரிபார்த்த பின்பு காணொளிகளைக் காண அனுமதிக்கவேண்டும்” என  மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்

அந்தந்த வயதிற்கு ஏற்ற தரவுகளைக் காண இந்த மேற்பார்வைகள் உதவினாலும்; தணிக்கைகள் மற்றும் வரையறைகளுக்கு அவை  நுனிப்புற்களே . 

இந்தியாவில் ஓடிடி தளங்கள் என்பது வெறும் படங்கள் பார்க்க இருக்கும் ஒரு ஊடகமாக இல்லாமல், சினிமாவிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட இயலாத குறைகள் பேச, நிலைமையை உணர்த்த, சமூதாய ஏற்றத்தாழ்வை வெளிக்கொணர, மத ரீதியான சமூக கட்டுப்பாட்டை எதிர்க்க என ஒரு போராட்ட களமாகவே படைப்பாளிகளாலும், சமூக ஆர்வாளர்களாலும் பார்க்கப்பட்டது.

Pk எனும் பாலிவுட் திரைப்படத்துக்கு எதிராக மத ஆர்வலர்கள் தொடுத்த போர்க்கொடிகள், சமீபமாக ஒளிபரப்பப்பட்ட தனிஷ்க் விளம்பரத்தை வற்புறுத்தி தடைசெய்ய வைத்தது, “தாண்டவ்” எனப்படும் ஹிந்தி தொடர் உத்தரப் பிரதேச காவல்துறையையும், இந்திய பிரதமரையும் தவறான முறையில் சித்தரிக்கப்பதாக கூறி தொடுக்கப்பட்ட வழக்குகள் என பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட மதத்தின் மீதோ அல்லது இந்தியாவின் சமூக கட்டமைப்பின் மீதோ எந்த ஒரு கேள்வியை வெளிப்படுத்தினாலும் மத்திய அரசிடம் இருந்து வெளிப்படும் அதிகப்படியான உணர்ச்சிவசம், எளிதில் புண்பட்டுவிடும் மனநிலையும் தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான பயமே ஆகும்.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், “ஒரு மாற்றுவழி ஊடகத்தினை ஒடுக்கப்பார்கிறார்கள் என புரிகிறது. இந்த அரசியல் அமைப்பிற்கு இந்த மாற்று ஊடகம் கூறும் செய்திகளை விரும்பவில்லை. ஆனால் அதைப் பற்றி விவாதிக்க நமக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். மக்கள் உள்ளடக்கத்தைப் பார்த்து முடிவுகளுக்கு வரட்டும், ” என சாடியிருக்கிறார்.

மதக்கோட்பாடுகளை முன்னிறுத்தி பல்வேறு சமூக அநீதிகளை மத ஒழுக்கம் என்ற பெயரில் சிலர் நடத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்கள் எதைப் பார்க்கவேண்டும், கலைஞன் எதை சிந்திக்கவேண்டும், எதைச் சித்தரிக்கவேண்டும் என அரசு நிர்பந்தப்படுத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையான “ freedom of speech and expression” மீது தொடுக்கப்படும் மற்றும் ஒரு அடக்குமுறை.

  • அருண் ப்ரசாத், மாணவ பத்திரிகையாளர்(பயிற்சி)

References

Press release : Press Information Bureau

Please complete the required fields.




Back to top button