பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்து தீ வைத்த வன்முறை கும்பல் !

பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையின மக்களாக வாழ்ந்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களுக்கு எதிராக குற்றங்களும், வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தால் உணர்வை தூண்டி அங்குள்ள இந்து கோவிலை உடைத்து, தீயிட்டு அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துவாவின் கராக் மாவட்டத்தில் உள்ள தேரி எனும் கிராமத்தில் கிருஷ்ணா துவாரா மந்திர் உடன் ஸ்ரீ பரமஹான்ஸ் ஜி மகாராஜின் சமாதி அமைந்துள்ளது.
கோவில் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஜமாத் உலேமா-இ-இஸ்லாம்(ஜேயுஐ-எஃப்) எனும் இஸ்லாமிய மதவாதக் கட்சி பேரணி ஒன்றை நடத்தியது. பேரணியில் இந்து கோவிலுக்கு எதிராக மத உணர்வை தூண்டும் விதத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. பேரணி முடிந்த சில மணி நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் இடம்பெற்ற கும்பல் கோபத்துடன் இந்து கோவிலை இடித்து தீ வைத்து கொளுத்தி அழித்து உள்ளனர்.
Today in Pakistan.
A charged mob destroyed a Hindu temple by setting it on fire and razing it to the ground in Khyber Pakhtunkhwa district of Karak.The incident took place after a JUI-F rally was held nearby where speakers delivered fiery speeches. #NayaPakistan #Pakistan pic.twitter.com/9iX2K3ipux
— Geeta Mohan گیتا موہن गीता मोहन (@Geeta_Mohan) December 30, 2020
வன்முறை கும்பலால் இந்து மத கோவில் அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து பேரணி நடத்திய ஜமாத் உலேமா-இ-இஸ்லாம்(ஜேயுஐ-எஃப்) அரசியல் கட்சியின் தலைவர் மெளளானா அதர் ரகுமான், ” இந்து மத கோவில் தீ வைக்கப்பட்ட சம்பவத்திற்கும் எங்கள் கட்சியின் பேரணிக்கு எந்த தொடர்பும் இல்லை ” எனக் கூறியதாக செய்திகளில் வெளியாகி உள்ளது.
” அந்த கும்பல் கோவிலின் பழைய கட்டுமானத்துடன் கூடிய புதிய கட்டுமானம் மற்றும் கோவிலின் விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக ” அம்மாவட்ட காவல்துறை அதிகாரி இர்பான் மார்வத் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் இடம்பெற்று உள்ளது.
1919-ல் இறந்த ஸ்ரீ பரம்ஹான்ஸ் ஜி மகாராஜ் இறந்த இடத்திலேயே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலும் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த இடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்வர்.
1997-ம் ஆண்டு இக்கோவில் முதல் முறையாக இஸ்லாமிய மதவாதிகளால் இடிக்கப்பட்டது. அந்த இடம் உள்ளூர் மத தலைவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. எனினும், 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு கோவில் புனரமைப்பு பணிகளுக்கு உள்ளூர் சமூகம் ஒப்புக் கொண்டது. புனரமைப்பு பணிகள் இருந்தபோதிலும், கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.
“கோவில் கட்டுவதற்கு ஒப்புக் கொண்ட நிலப்பகுதியை தாண்டவில்லை என்றும், அங்குள்ள மக்கள் கோவிலை அழிப்பதன் மூலம் ஒப்பந்தத்தை மீறியதாக ” அங்குள்ள இந்து சமூகத்தின் பிரதிநிதியான வழக்கறிஞர் ரோஹித் குமார் கூறியதை உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தானில் இந்து கோவில்கள் கட்டுவதற்கு எதிர்ப்புகளும், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கராச்சியில் உள்ள இந்து கோவில் அழிக்கப்பட்டது.
ஜூலை மாதம், இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் கட்டுவதற்கு எதிராக இஸ்லாமிய ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று தடை பெற்றனர். எனினும், இந்த திட்டம் செயல்பட மாநில அமைப்பான இஸ்லாமிய கருத்தியல் கவுன்சில் அனுமதி வழங்கியது. இப்படி பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்ட இருக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மையினராக இந்துக்கள் உள்ளனர். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அங்குள்ள சமூகத்தினரின் கூற்றின்படி, 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்கின்றனர். இந்துக்கள் பெரும்பாலும் சிந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மதம் சார்ந்து துன்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுகின்றன.
Links :
Hindu temple in Pakistan vandalised, set on fire
Angry mob vandalises Hindu temple, sets it ablaze in Pak’s Khyber Pakhtunkhwa
Angry mob destroys Hindu temple in northwestern Pakistan