பண்டோரா பேப்பர்ஸ்: ரகசிய முதலீடு, சொத்துக்கள்.. பட்டியலில் சச்சின், அனில் அம்பானி பெயர் !

உலக நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் ரகசியமாக கோடிக்கணக்கில் முதலீடுகள், சொத்துக்களை குவித்துள்ள பட்டியல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் இடம்பெற்று இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிபிசி, இங்கிலாந்து நாட்டின் தி கார்டியன் மற்றும் இந்தியாவின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 150 ஊடகங்களை உள்ளடக்கிய சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு(ICIJ) ஆனது பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பனாமா, பெலிஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் உள்ள 14 சர்வதேச கார்ப்பரேட் பெரு நிறுவனங்களில் இருந்து கசிந்த 1.90 கோடி ஆவணங்கள் மற்றும் கோப்புகள் 117 நாடுகளின் 600க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களால் புலனாய்வு செய்யப்பட்டு “ பண்டோரா பேப்பர்ஸ் ” பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
“பண்டோரா பேப்பர்ஸ்” பட்டியலில் இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நீரவ் மோடியின் சகோதரி உள்பட மொத்தம் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் முதலீடு செய்து நிறுவனம் ஒன்றை தொடங்கியதாகவும், 2016-ம் ஆண்டில் பனாமா பேப்பர்ஸ் வெளிவந்த 3 மாதங்களுக்கு பிறகு அந்த நிறுவனத்தை கலைக்கும்படி சச்சின் கேட்டுக் கொண்டதாகவும் பண்டோரா ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இங்கிலாந்து நீதிமன்றத்தில் திவாலான நிலையை அறிவித்த அனில் அம்பானிக்கு கடல்சார் நிறுவனங்களில் 18 சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், இந்தியாவில் இருந்து நீரவ் மோடி தப்பி செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது சகோதரி ஒரு அறக்கட்டளையை அமைத்தார் உள்ளிட்ட பல விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ICIJ பட்டியலின் படி, ” இந்த ரகசிய ஆவணங்களில் ஜோர்டான் மன்னர் அப்துல்லா, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அவரது மனைவி ஷெரி பிளேர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன், கென்யா, ஈக்வடார் நாடுகளின் ஜனாதிபதிகள், செக் குடியரசின் பிரதமர், பாப் இசை பாடகி ஷகிரா உள்ளிட்டோர் மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட செல்வந்தர்களின் நிதி நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தி உள்ளது.
2016-ம் ஆண்டில் கசிந்த 11.5 மில்லியன் ரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை கொண்டு சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட பனாமா பேப்பர்ஸ் பட்டியல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எஃப் நிறுவனத்தின் தலைவர் கேபி சிங் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது.
பண்டோரா பேப்பர்ஸ் படி, பாகிஸ்தான் நாட்டின் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை பயன்படுத்தியது புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நாட்டின் நிதியமைச்சர் உள்பட அமைச்சர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முக்கிய நிதி ஆதரவாளர்கள் உள்பட பலரும் ரகசியமாக பல மில்லியன் டாலர்கள் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளையை வைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
கசிந்த தரவுகளில் 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர்கள் இருந்தாலும் கூட, அனில் அம்பானி, சச்சின், நீரவ் மோடி சகோதரி, பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தர் ஷா உள்ளிட்ட 4 இந்தியர்களின் பெயர்கள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
Links :
Pandora Papers: Secret wealth and dealings of world leaders exposed
Sachin Tendulkar among celebrities named in ‘Pandora Papers’ leak exposing offshore dealings
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.