பேப்பர் & பார்சலில் 100 கோடி சாம்ராஜ்யம் | அண்ணாச்சிக் கதைகள்.

எல்லோரையும் போலவே கடைசி நிமிடத்தில் புத்தகங்களை அள்ளிப் போட்டுக்கு கொண்டு பள்ளிக்கு செல்லும் மும்பை சிறுவன் தான் திலக். மும்பை என்றவுடன் பரபரப்பான நகரமும், டப்பாவாலாக்களும் நமக்கு ஞாபகம் வரும். டப்பாவாலாக்களை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம் . வேலைக்கு செல்பர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவை பெற்று அவர்கள் அலுவலகத்தில் கொண்டு சேர்ப்பவர்கள் தான் டப்பாவாலாக்கள்.
ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான மதிய உணவை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதில் திறமைசாலிகள் இவர்கள். 60 லட்சம் மதிய உணவு பைகளில் ஒன்றே ஒன்று மாற்றிக் கொடுக்கப்பட்டது தான் இவர்கள் வேலை முறையின் துல்லியத்துக்கு அளவுகோல்.
கணிப்பொறி இல்லாது பெரிய படிப்பு இல்லாத சாதாரண மக்கள் செய்யும் இந்த துல்லிய வேலையை பல வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பாடமாக படிக்கிறார்கள் . இந்த கிளைக் கதையின் நாயகர்கள் நம் கதையின் உண்மையான நாயகர்கள்.
நம் கதையின் நாயகன் 13 வயது திலக், மும்பையின் மற்றொரு பகுதியில் இருக்கும் தன் மாமா வீட்டிற்கு சென்று இருந்தார். வீட்டுப்பாட நோட்டு, புத்தகத்தையும் வீட்டிலேயே விட்டு விட்டு வந்துவிட்டார். சரி , அப்பாவை அழைத்து எடுத்துக் கொண்டு வரச் சொன்னால் அவர் எடுத்து வருவார். ஆனால் வேறுபட்ட வேலை நேரத்தில் வேலை செய்யும் அவருடைய அப்பா அப்பொழுது தான் வேலை முடித்து வந்தார் என்ற விவரம் திலக் தொலைபேசியில் அவர் அம்மாவிடம் உரையாடிய போது தெரிந்தது.
தானும் இங்கிருந்து உடனே வீட்டிற்கு செல்ல முடியாது அப்பாவை புத்தகங்களை எடுத்து
வரச் சொன்னால் அவருக்கு சிரமாக இருக்கும். என்ன செய்யலாம் ?
புதிய வியாபாரச் சிந்தனைக்கெல்லாம் எப்போதுமே ஒரு பிரச்சனை தான் ஆரம்ப புள்ளியாக இருக்கும். நமக்கு இருக்கும் பிரச்சனை எல்லோருக்கும் இருந்தால் அதற்கு உரிய தீர்வை குறைந்த விலையில் எளிய முறையில் கொடுத்தால் அது தான் புதிய வியாபாரம்.
நாம் எல்லோருக்கும் இருந்த பிரச்சனை நாம் விரும்பும் போது ஆட்டோவோ , டாக்சியோ கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அவர்கள் நாம் சொல்லுகின்ற இடத்திற்கு வர மாட்டார்கள். ஏனென்றால், நம்மை இறக்கி விட்ட பின் அவர்களுக்கு கிளம்பிய இடத்திற்கு வருவதற்கு பயணிகள் கிடைக்கமாட்டார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் திரும்ப வருகின்ற பெட்ரோல் செலவையும் நம்மிடம் தான் கேட்பார்கள். பயணியும் அதிக பணம் தர விருப்பப்படமாட்டார். இரண்டு பக்கமும் நியாயமான காரணங்கள். இரண்டு பக்கமும் பிரச்சனை.
இறக்கி விட்ட இடத்தில் அந்த ஆட்டோகாரருக்கு இன்னொரு சவாரி கிடைத்தால்? கிளம்பும் போதே விலை குறைவாக ஏசி போன்ற வசதிகள் பயணிக்கு கிடைத்தால் ? இரண்டு பக்கமும் தேவைகளை நிறைவு செய்து குறைகளைக் களைந்தால்? அதை செய்து காட்டியது நம்ம ஆட்டோ, ஓலா மற்றும் ஊபர் போன்ற நிறுவனங்கள்.
திரும்ப நாம் கதையின் நாயகனின் பிரச்சனைக்கு போவோம். அப்பா வராமல் யாரிடமாவது புத்தகங்களை கொடுத்து விடச் சொல்லலாம் ? வருகிறவர் தெரிந்தவராக இருக்க வேண்டும் . குறைவான பணம் கேட்க வேண்டும் . சரியாக கொண்டு வந்து சேர்க்க வேண்டும். ஒரு ஆட்டோ டிரைவரிடம் முகவரி சொல்லி கொடுக்க சொன்னால் அவர் கொடுக்கலாம் . ஆனால் செலவு ? அதை தவிர்க்க திலக் தேர்ந்து எடுத்த வழிதான் டப்பாவாலா.
மாமாவின் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு மதிய உணவை கொண்டு வரும் டப்பாவாலாவிடம் தனது புத்தகத்தை கொடுத்து விடச் சொன்னார் திலக். டப்பாவாலா தெரிந்த நபர் – நம்பத்தன்மை. அரை நாளில் மும்பையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருளை அனுப்ப முடிகிறது. காலம் ஏற்கனவே டப்பவாலா செய்கின்ற தொழிலோடு இதையும் செய்ததால் – குறைந்த செலவு.
தன்னைப் போலவே தேவை இருப்பர்களுக்கு ஒரே நாளில் மும்பைக்குள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல டப்பாவாலாக்களுடன் இணைந்து
ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தால் என்ன ? என்ற யோசனையை தன் அப்பாவிடம் தெரிவித்தார் திலக்.
அப்பாவின் வழிகாட்டுதலுடன் இதற்கென தனியாக ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்பட்டது. மற்ற கூரியர் சர்வீசில் இல்லாத அம்சமான வீட்டிற்கே / அலுவலகத்திற்கே வந்து பார்சலை பெற்றுக் கொள்ளும் வசதி. இப்போது பார்சல் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என அறியும் வசதி, கார்பரேட் நிறுவனங்களுக்கு தனிபிரிவு என பல புதிய அம்சங்களுடன் டப்பாவாலாக்கள் துணையுடன் இந்த நிறுவனம் வெற்றி நடைபோடுகிறது.
நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் ஓடிவந்து 300 நபர்கள் பணிபுரியும் பேப்பர்ஸ் & பார்சல்ஸ் நிறுவனத்தின் ( https://www.papersnparcels.com ) சி.இ.ஒ எனப்படும் தலைமை பணியை ஏற்றுக் கொள்கிறார் இந்த 8 வகுப்பு மாணவன் .
” மும்பை நகரின் கூரியர் வியாபாரத்தில் 20 சதவீத இடத்துடன் 100 கோடி இலக்கை 2020 ஆண்டில் அடைய காத்திருக்கிறது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் “.
– அனு
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.