மயான சூழலில் நாடு, பிரதமர் புகழ் பிம்பத்தால் மறைக்க முடியாது – நிர்மலா சீதாராமன் கணவர் பரபரப்பு வீடியோ !

உலகின் மிக மோசமான கொரோனா அலை இந்தியாவை திணறடித்துக்கொண்டிருக்கிறது. பிணக்குவியல்களின் உயரம் அதிகரித்துக்கொண்டே இருக்க, சென்ற திங்கட்கிழமை(ஏப் 19) கணக்கெடுப்பின்படி, ஒரு நாளில் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,59,000. ஒருநாளில் உயிரிழந்தவர்கள் 1,761. கோவிட்19 பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,14,714. அன்றைய தேதி வரையிலான மொத்த உயிரிழப்பு 1,80,550.
நாடு ஒரு பெரும் மருத்துவ நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நெருக்கடி நிலையில், நம்மை பாதுகாக்க வேண்டிய அரசின் பொறுப்பு துறப்பும், மரத்து செயலிழந்த தேசத்தின் உணர்வும், கண்முன்னே அரங்கேறும் ஆகப்பெரிய அழிவின் மௌனசாட்சியாயிருக்கும் அவலம்.
நம் முகத்தில் அறையும்வரை இறப்பு என்பது காற்றில் கிறுக்கி அனுப்பப்பட்ட ஒரு செவி வழி செய்தி. வெறும் தகவல். அரசுக்கு அது புள்ளிவிவரம். வெறும் எண்கள். 1981 இல், தன் இளம் வயதில் என் தகப்பனார் இறக்கும் வரை எனக்கும் அது வெறும் செய்தியாகத்தான் இருந்தது. குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்படுத்தும் வலி, விட்டுச் செல்லும் வெற்றிடம் இவற்றை அனுபவப்பூர்வமாக உணர்ந்த பொழுதில்தான் இறப்பின் பின்னுள்ள இழப்பும், குடும்பத்தினர் எதிர்கொள்ளும் இன்னல்களும் புரிந்தன.
கடந்த ஒரு வருடத்தில் ஏராளமான இழப்புகள். நானும் என் நண்பர்கள் பலரை இழந்திருக்கிறேன். தகப்பனாக, தாயாக, மகனாக, மகளாக மருத்துவமனை சென்றவர்கள் ஒரு பிடி சாம்பலாக வீடு திரும்பினர். நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றன. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டன. வேலையை பறிகொடுத்தவர்கள் அநேகம். பெரும்பாலானோர் இன்னமும் இழப்பின் வலியில் இருந்து மீள இயலாமல் தவித்து வருகின்றனர். அரசின் எந்த உதவியும் இன்றுவரை உரியவர்களைச் சென்றடையவில்லை. கோவிட்டின் முதல் அலை இப்படித்தான் ஓய்ந்தது.
இரண்டாவது அலை. வைரஸ் இன்னமும் மூர்க்கமாக தாக்கத் துவங்கியிருக்கிறது. மேலே சொல்லியருக்கும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை நாம் அனைவரும் அறிந்ததே. உண்மை நிலை பன்மடங்கு மோசமாக இருப்பதாக மருத்துவ நண்பர்கள் கூறுகிறார்கள். மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்ப, பரிசோதனை நிலையங்கள் மாதிரிகளை ஏற்க மறுக்கின்றன. அவை வீணாகுமுன் அவர்களால் சோதித்து சொல்ல இயலாத நிலையில் மருத்துவத்துறை திணறுகிறது. மருத்துவமனையின் வாயிலில் நீளும் வரிசைகள், ஓலங்கள், எரியும் பிரேதக்குவியல்கள் என காணொளிகளில் எரியும் புகையால் சமூக வலைதளங்கள் மூச்சுத்திணறுகின்றன.
அரசியல் தலைவர்களுக்கும், மத தலைவர்களுக்கும் இதைப்பற்றி கொஞ்சமும் அக்கறையில்லை. அரசியல் தலைவர்களுக்கு தேர்தலும், மதத்தலைவர்களுக்கு தங்கள் மத கிரீடமும் இறங்கிவிடக்கூடாதென்ற கவலையைத் தவிர வேறெதிலும் கவனமில்லை. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்கட்சி தலைவர்கள் என விழிப்புணர்வூட்ட வேண்டிய அனைவரும் லட்சங்களில் மக்களைக்கூட்டி தேர்தல் மாநாடு நடத்த, மற்றொருபுறம் கும்ப மேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடிக்களித்தனர். கொரோனாவின் கோரத்தாண்டவம் தேசம் முழுவதும் பரவியிருக்க, கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றையும் பின்பற்றாமல் மேற்கு வங்க தேர்தலுக்கு ஆள் சேர்த்தன பிரதான கட்சிகளான பிஜேபியும், திரிணமூல் காங்கிரஸும். இந்தக்கூட்டங்களை நியாயப்படுத்தி அரசியல் தலைவர்களும், மதத்தலைவர்களும் பேசத் துவங்க முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அடுத்து கட்டுப்படுத்த இயலாத கோபத்தில் ஒரு நாள் முழுவதும் மாய்ந்துப்போனேன். இப்பொழுது அந்தப்பேச்சுகள் அருவெருப்பாய் இருக்கிறது.
இறப்பு விகிதம், குணமாவோரின் எண்ணிக்கை என பிற நாடுகளோடு ஒப்புமைப்படுத்தி அர்த்தமற்ற, உணர்வற்ற கணக்கீடுகளின் மூலம் தங்கள் தரப்பை தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். கணவனை, மனைவியை, தாயை, தந்தையை இழந்து வாழும் குடும்பங்களுக்கு எந்த ஒப்பீட்டை காண்பித்து ஆறுதலா சொல்வீர்கள் ?. முகங்களை மறந்து வெற்று எண்ணிக்கைகளை கணக்கில் கொண்டு என்ன நியாயத்தை உங்கள் சுவடிகளில் எழுதுவீர்கள் ?.
அவர்கள் சொல்லும் அந்த தவறான புள்ளிவிவரங்களை கணக்கில்கொண்டாலும், மொத்த இறப்புகள்(ஜன. 2020 இல் இருந்து நேற்றுவரை), ஒருநாளில் ஏற்படும் மரணங்கள், ஒருநாளில் பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை இவற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ், பூடான், நேபாள், ஶ்ரீலங்கா உள்ளிட்ட அண்டை நாடுகளைவிட பன்மடங்கு அதிகம்.
இந்த இமாலய சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்கு நம்முன் ஒற்றை வழிதான் திறந்திருக்கிறது. தடுப்பூசிகள். சுமார் 70% மக்கள்( கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர்த்து) தடுப்பூசி செலுத்தி பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொண்டால்தான் இந்த நிலை மாறுவதைப் பற்றி யோசிக்க இயலும். ஏதோ ஓரிடம், ஏதோ ஒரு மூலை விடுபட்டால்கூட மறுபடி முதலிருந்து தொடங்கும் அபாயத்தில்தான் இருக்கிறோம். லாக்டவுன் என்பது தீர்வல்ல. அது தீர்வை நோக்கிய பாதையை சிறிது தெளிவாக்கி வைப்பதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் நேரம். மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்தி, மோசமான காலத்திற்காக நம்மை தயார் செய்துக்கொள்ள வேண்டிய இடைவெளி. நாம் அந்தத் தீர்வை நோக்கிய பாதையில்தான் பயணிக்கின்றோமா ?.
இல்லை என்பதுதான் உண்மை. சென்ற திங்கட்கிழமை மாலை 7 மணியுடன் முடிவடைந்த நாளில் 12.29 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முந்தைய நாளைவிட சுமார் 14.54 லட்சம் குறைவு. முந்தைய வாரத்தில், ஒரு நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை விட சுமார் 17 லட்சம் குறைவு. உலக சராசரியான 100 க்கு 11.61 டோஸ் தடுப்பூசிகள் என்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 100 க்கு 9 டோஸ்கள் தடுப்பூசி என்ற நிலையில்தான் இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கிறது.
நம்மிடமிருக்கும் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல அரசு தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங்கின் அறிவுப்பூர்வமான ஆலோசனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் அடக்கமற்ற, அதிர்ச்சியூட்டக்கூடிய மிக மோசமான அணுகுமுறையினாலான பதில்கள் அரசின் மெத்தனப்போக்கையே எடுத்துரைக்கின்றன. அரசியல் பஞ்ச் டயலாக்குகள் பேசுவதில் இருக்கும் முனைப்பும், மற்றவரை கைகாண்பிப்பதில் இருக்கும் முனைப்பும் வைரஸுக்கெதிரான நடவடிக்கைகளில் இல்லை.
தலைப்புச்செய்திகளில் இடம் பிடிப்பதில் இருக்கும் ஆர்வம், கள நிலவரத்தை சமாளிப்பதிலோ, எதிர்கொள்வதிலோ இல்லை. மக்களை சென்றடையாத ஒரு போலி ஊக்கத்தொகையை நிராதரவான மக்களை நோக்கி வீசியதைத் தவிர என்ன செய்தது அரசு?. தேவைகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, விநியோகத்தை முறைப்படுத்துவதில் கூட அரசின் கையாலாகாத்தனம் தெளிவாக தெரிகிறது. இந்தப் பேரிடருக்கு நாம் எத்தனை தயாராக இருந்தோம்?.
ஏப்ரல் 2020 இல் இருந்து, வெறும் 19,461 வென்டிலேட்டர்கள், 8,648 ICU வசதிகள், 94,880 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மட்டுமே நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பும் கூட தேசம் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பதிலளிக்கையில், மஹாராஷ்டிரா, தமிழகம் போன்ற ஒருசில மாநிலங்களே கட்டமைப்பை சிறிதளவில் மேம்படுத்தியிருக்கின்றன. சுமார் 9 மாநிலங்களில் இவ்வசதிகள் சாதாரண நாட்களை விட குறைந்திருக்கிறது என்று பதிவு செய்கிறார்.
இந்த மூழ்கடிக்கும் அலையில் நீந்தி மேலே வருவதற்குரிய தடங்களைச் சொல்லி வழிநடத்த ஏராளமான வல்லுநர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்திக்கொள்ளவோ, அணுகி ஆலோசனை பெறவோ அரசு தயாராக இல்லை. பிரதமரின் பேச்சுத்திறன், புகழ், பிம்பம் அனைத்தும் இந்த மயான சூழலையும் ஈடுகட்டி, நிர்வாகத் திறனற்ற அரசை மீட்டெடுத்துவிடும் என கனவு காண்கிறார்கள்.
இந்த அரசும், ஆள்பவர்களும் மக்களின் சீற்றத்தை கையாளுவதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டார்கள். வலியின் கூக்குரல்கள் நாளடைவில் நீர்த்து, மரத்துப் போய்விடும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இந்த யுக்திதான் பணமதிப்பிழப்பின் போது கையாளப்பட்டது. இதே யுக்திதான், ஆத்திரத்துடன் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தவர்களை கேள்வி கேட்காமல் அமைதியாக வேலைக்கு திரும்பச் செய்தது. சீக்கிரமே மரத்துவிடும் நம் உணர்வுகளின் மீதேறி தற்பொழுதைய குழப்பநிலையையும் கடக்க அவர்கள் யத்தனித்திருக்கக்கூடும்.
இந்த பிம்பமும், புகழும் ஒரு நாடகக் கவர்ச்சிப்போல வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும். ஆனால், மரத்துப்போன ஒரு தேசத்தின் உணர்வுகள் மடிந்துவிடாது. வெளிப்படையான, நிர்வாகத் திறனுள்ள, மனிதாபிமான அடிப்படையிலான அரசும், அரசரும் மட்டுமே வரலாற்றின் ஏடுகளில் நிலைத்திருப்பார்கள்.
- முனைவர். திரு. பரகலா பிரபாகர்( திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களின் கணவர், பொருளாதார நிபுணர், அரசியல் விமர்சகர்) அவர்கள் Midweek Matters எனும் யூடியூப் சேனல் காணொளியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.
தமிழ் மொழியாக்கம் : வித்யா ஞானசேகரன்
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.