நாடாளுமன்றத்தில் பிரதமர் தொடங்கி பாஜக எம்.பிக்கள் வரை கூறிய பொய்கள், தவறான தகவல்களின் தொகுப்பு !

ணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை பேச வைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் I.N.D.I.A கூட்டணி கட்சிகள் தரப்பில் ஆளும் அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்(No-confidence Motion) மீது நடத்தப்பட்ட விவாதத்தின் போது பிரதமர் மோடி கலந்து கொண்டு 2 மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். ஆனால், அவருடைய உரையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக மணிப்பூர் பற்றி எதுவும் பேசவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னரே, மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேசத் துவங்கினார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சியினரின் உரையில் பல்வேறு பொய் செய்திகளும், தவறான தகவல்களும் இடம்பெற்றது ஒன்றன்பின் வெளிவரத் தொடங்கின. இக்கட்டுரையில் பிரதமர் மோடி தொடங்கி பாஜக அமைச்சர்கள் வரை கூறிய பொய்கள் மற்றும் தவறான தகவல்களின் தொகுப்பை காணலாம்.

1. திமுக அமைச்சர் வடஇந்தியாவே இந்தியா என்கிறார் : ஸ்மிருதி இரானி & மோடி 

இந்தியா என்பது வடஇந்தியா மட்டுமே என காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக அமைச்சர் பேசி இருக்கிறார் என ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற விவாதத்தில் ஆகஸ்ட் 9ம் தேதி பேசி இருக்கிறார். இந்த வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

Archive link

இதை ஆகஸ்ட் 10ம் தேதி பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் பேசும் போது ‘திமுக அமைச்சர் ஒருவர் வட இந்தியாதான் இந்தியா என பேசுகிறார்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை கருத்து பேசியதாகப் பரவக் கூடிய வீடியோ எடிட் செய்யப்பட்டது. இந்தியா என்கிற பெயருக்கு ஒரு காலத்தில் பெரிய தாக்கம் நமது ஊரில் இருந்தது இல்லை. இந்தியா என்றால் வடக்கே இருக்கும் ஒரு ஊர் என்பது போல் நாம் இருந்தோம். ஆனால், இன்னைக்கு என்ன நிலைமை. எதோ, எங்கோ தூரத்தில் கேட்கப்பட்ட ஊர் இந்தியா என்பதை மாற்றி, இன்றைக்கு இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு ஏற்பட்டிருக்கிறது என பேசி இருந்தார்.

மேலும் படிக்க : அமைச்சர் எ.வ.வேலு பிரிவினை பேசியதாக நாடாளுமன்றம் வரை பொய் பேசும் பாஜகவினர் !

திமுக அமைச்சர் பேசிய வீடியோவில் ஒரு பகுதியை எடிட் செய்து பரப்பி உள்ளனர். இத்தவறான தகவலை பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச, அதை பிரதமரும் பேசி இருக்கிறார்.

2. உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்தினோம்: அமித்ஷா 

ஆகஸ்ட் 9ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ” நாங்கள் நெருக்கடி மற்றும் கொரோனா காலத்தில் உக்ரைன் மற்றும் ஏமன் அரசிடம் கூட பேசினோம். 3 நாட்கள் போரை நிறுத்தி விமானங்களை இயக்கினோம். உக்ரைன் போரின் போது இந்தியர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கொரோனா ஊரடங்கிற்கு முன்பாகவே ஏமன் நாட்டில் இருந்தும் மக்கள் கொண்டு வரப்பட்டனர் ” எனப் பேசி இருக்கிறார்.

இந்த உக்ரைன் போர் நிறுத்தம் பொய்யானது கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே பாஜகவினரால் பரப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உக்ரைன் போரை 6 மணி நேரம் நிறுத்தி வைத்ததாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசி இருந்தார். அதேபோல், புதின் மற்றும் ஜெலன்ஸ்கி இருவரிடம் பேசி பிரதமர் மோடி போரை நிறுத்தினார் என ஜே.பி. நட்டா கூறியதாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க : ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்திய மோடி.. தொடங்கியது பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் !

தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி உக்ரைன் போரை 3 நாட்கள் நிறுத்தி வைத்ததாக பொய்யான தகவலை மீண்டும் பேசி இருக்கிறார். அதை நாடாளுமன்றத்திலேயே பேசியும் உள்ளார். இதுகுறித்த கட்டுரைகள் முன்பே வெளியிட்டு இருக்கிறோம்.

3. முதல் முறையாக மிசோரமில் ஐஐஎம்சி-ஐ திறந்தோம் – மோடி 

ஆகஸ்ட் 10ம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்து பேசுகையில், ” முதன்முறையாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்(IIMC) போன்ற நிறுவனம் மிசோரமில் திறக்கப்பட்டு உள்ளது ” எனக் கூறி இருக்கிறார்.

மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்சால் நகரில் உள்ள ஐஐஎம்சி குறித்து தேடுகையில், வடகிழக்கு பிராந்தியத்தின் ஐஐஎம்சி வளாகம் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் மிசோரம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு தற்காலிக கட்டிடத்தில் இருந்து செயல்பட தொடங்கியது என ஐஐஎம்சி மிசோரம் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்போது ஆட்சியில் இருந்தது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

மேலும், 2022ல் ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், ” ஐஐஎம்சி வடகிழக்கு பிராந்திய வளாகம் 2011ம் ஆண்டு மிசோரம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தற்காலிக கட்டிடத்தில் இருந்து செயல்படத் தொடங்கியது. வளாகத்திற்கான கட்டுமான பணிகள் 2015ல் தொடங்கி 2019ல் முடிவடைந்தது. மொத்த செலவு 25 கோடி. மிசோரம் பல்கலைக்கழகம் வழங்கிய 8 ஏக்கர் நிலத்தில் ஐஐஎம்சி நிரந்தர வளாகத்தில் கல்விக் கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவை உள்ளன ” என இடம்பெற்று உள்ளது.

வடகிழக்கு பிராந்தியத்தின் ஐஐஎம்சி-க்கான நிரந்தர கட்டிடம் தேசிய ஜனநாயக கூட்டணி(NDA) ஆட்சியான 2015ல் தொடங்கி 2019ல் முடிவடைந்து 2022ல் குடியரசுத் தலைவரால் திறக்கபட்டுள்ளது. ஆனால், ஐஐஎம்சி-க்கான தற்காலிக கட்டிடம் மற்றும் வகுப்புகள் 2011ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி(UPA) ஆட்சியில் இருந்தே தொடங்கி விட்டது என்பதை அறிய முடிகிறது.

4. ஸ்மிருதி இரானிக்கு பறக்கும் முத்தம் : பாஜக எம்பிக்கள் 

ஆகஸ்ட் 9ம் தேதி நாடாளுமன்ற விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பறக்கும் முத்தம்(Flying Kiss) கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பாஜக எம்பிக்கள் தரப்பில் சபாநாயகருக்கு மனுவும் அளித்தனர்.

ஆனால், ராகுல் காந்தி சைகை செய்யும் இடத்திற்கு நேராக அமைச்சர் ஸ்மிருதி இரானி அமர்ந்திருக்கவில்லை. ராகுல் காந்திக்கு இடது பக்கம் வேறு திசையில் அவர் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. இதிலிருந்து ராகுல் காந்தி ஸ்மிருதி இரானியை பார்த்து எந்த சைகையும் செய்யவில்லை என்பதை விளக்கி கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமரை பேச வைக்க கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் இத்தனை பொய்களும், தவறான தகவல்களும் இடம்பெற்று உள்ளன.

Links :

Live : HM Shri Amit Shah speaks on No Confidence Motion in Lok Sabha.

Lok Sabha LIVE: PM Modi In Lok Sabha | No-confidence Motion | Modi Vs Oppn | Manipur

INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION NORTH EAST REGIONAL CAMPUS

President of India inaugurates the Indian Institute of Mass Communication (IIMC) North Eastern Regional Campus at Aizawl

Please complete the required fields.
Sanmuga Raja

Sanmuga Raja working as Senior Sub-Editor at YouTurn since May 2017. He holds a Bachelor’s degree in Engineering. His role is to analyze and obtain valid proof for social media and other viral hoaxes, then write articles based on the evidence. In obtaining the proof for claims, he also interviews people to verify the facts.
Back to top button
loader