அனுமதி இல்லாமல் கொரோனா மருந்தை விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனம் !

கோவிட்-19 தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உலக அளவில் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தி வரும் நிலையில் இன்றுவரை முழுமையான தீர்வை அளிக்கும் மருந்து இதுதான் என எந்தவொரு மருந்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், கொரோனா வைரசிற்கான மருந்து என பல நிறுவனங்கள் தங்களின் மருந்தினை விளம்பரப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
யோகா குரு பாபா ராம்தேவ் உடைய பதஞ்சலி நிறுவனம் ” கொரோனில் மற்றும் சுவாசரி ” என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என அறிவித்தது. பதஞ்சலி நிறுவனத்தின் ” கொரோனா கிட் ” 545 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்து குறித்த ஊடகச் செய்தி தங்களின் கவனத்திற்கு வந்தது. மருந்தினைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், கிளினிக்கல் சோதனைக்கு பதிவு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் உள்ளிட்டவையை அந்நிறுவனத்திடம் கோரியது. மருந்து தயாரிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களும் கொடுக்க வேண்டும். அதுவரை இந்த மருந்து தொடர்பான விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.
ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கோவிட்-19 சிகிச்சைக்காக திட்டமிடப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்துகளின் உரிமத்தின் நகல்கள் மற்றும் தயாரிப்பு ஒப்புதல் விவரங்களை வழங்க உத்தரகாண்ட் அரசாங்கத்தின் உரிம அதிகாரியிடம் கேட்டுக் கொண்டது.
இதையடுத்து, உத்தரகாண்ட் மாநிலத்தின் மருத்துவ உரிமம் ஆணையத்தின் இணை இயக்குனர் ஒய்.எஸ்.ராவத், ” கோவிட் மருந்தை உருவாக்க நாங்கள் அவர்களுக்கு எந்த உரிமைத்தையும் வழங்கவில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிட்களுக்கான உரிமத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களிடம் இருந்து எங்களுக்கு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் உரிமம் விரைவில் ரத்து செய்யப்படும் ” எனக் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா, ” ஆயுர்வேத மருத்துவத்துக்கு மத்திய அரசு ஊக்கத்தையும், பெருமையையும் வழங்கி உள்ளது. அனைத்துவிதமான தகவல்களும் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் தங்களுக்கும் இருந்த தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டு உள்ளதாகக் கூறி இருந்தார் .
” பதஞ்சலி மருந்தினைக் கொண்டு டெல்லி மற்றும் அகமதாபாத் நகரங்களில் இதற்கென சோதனைகள் செய்யப்பட்டன. இந்த மருந்தை 280 நோயாளிகளுக்கு கொடுத்ததில் 100 சதவீதம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள். NIMS எனும் தனியார் பல்கலைக்கழகத்தின் உதவியோடு 95 நோயாளிகளுக்கு மருத்துவக் கட்டுப்பாடு ஆய்வு நடத்தியதாகவும், ஆய்வு நடத்திய 3 நாட்களில் 69 சதவீத நோயாளிகளும், 7 நாட்களில் 100 சதவீத நோயாளிகளும் குணமடைந்து விட்டனர் ” என ராம்தேவ் கூறியதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.
எனினும், ஜெய்ப்பூரில் உள்ள NIMS பல்கலைக்கழத்தின் டாக்டர் கணபத் தேவ்புரா, ” NIMS-ல் இந்த சோதனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு மறுபரிசீலனை செய்யப்படவில்லை என ஒப்புக் கொண்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
” கொரோனில் மருந்து குறித்த அறிக்கையை ஆயுஷ் அமைச்சகத்திற்கு பதஞ்சலி நிறுவனம் சமர்ப்பித்து உள்ளதாகவும், இந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர் மருந்து குறித்து நிறுவனத்திற்கு இறுதி அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் ” என மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்து உள்ளார்.
இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐசிஎம்ஆர்-ன் அனுமதியின்றி பதஞ்சலி செயல்பட்டதாக ராஜஸ்தான் மற்றும் ஹரியானா, பீகார் மாநிலங்களில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. முழு அனுமதி இல்லாமல் கொரோனா வைரஸ்(கோவிட்-19) பாதிப்பை 100 சதவீதம் குணப்படுத்தும் என விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுந்தன.
மேலும் படிக்க : கோவிட்-19 தொற்றை குணப்படுத்தும் மருந்துகளா ?| மருத்துவர்களின் பதில்கள்.
இதற்கு முன்பாக, அல்லோபதி மருத்துவ முறையிலும் கூட கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என பல நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை விளம்பரம் செய்து வருவதை தவறான அணுகுமுறை என நாம் விவரித்து கட்டுரை வெளியிட்டு இருந்தோம். கொரோனாவிற்கு முழு தீர்வு என எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில் அவசரநிலைக்காக பயன்படுத்தும் மாற்று மருந்துகளை முழு தீர்வு எனக் கூறி விளம்பரம் செய்வது அறமல்ல !
Links :
Ramdev’s Patanjali Asked By Government To Explain COVID Drug Claim
Patanjali Didn’t Mention COVID-19 While Seeking Drug License: Official
Coronil runs into further trouble, Uttarakhand to issue notice to Ramdev’s firm
Ramdev Ayurvedic ‘corona kit’: no govt nod, trials that used allopathic drugs
Patanjali submitted report on its Covid-19 drug to Ayush Ministry: Naik