மக்களின் அச்சத்தைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலிக்கு ரூ.10 லட்சம் அபராதம் !

கடந்த ஜூன் மாதம் பாபா ராம் தேவ் உடைய பதஞ்சலி நிறுவனம் ” கொரோனில் ” மற்றும் ” சுவாசரி ” எனும் இரு மருந்துகளை கோவிட்-19 தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என வெளியிட்டது . ரூ.545 என விலை நிர்ணயிக்கப்பட்ட மருந்துகளுக்கு எந்தவொரு அனுமதி பெறாமலும் கொரோனா மருந்து என விளம்பரம் செய்தது அந்நிறுவனம். இதையடுத்து, இந்திய அளவில் பதஞ்சலி மருந்து சர்ச்சையாகியது.
விரிவாக படிக்க : அனுமதி இல்லாமல் கொரோனா மருந்தை விளம்பரப்படுத்திய பதஞ்சலி நிறுவனம் !
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் ” கொரோனில் “ எனும் பெயரை பயன்படுத்த தடை விதித்ததோடு 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆரூத்ரா இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், ” கொரோனில் ” என்ற வர்த்தக பெயரை பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தது.
அதில், ” கொரோனில் 92பி ” மற்றும் ” கொரோனில் 213 எஸ்பிஎல் ” என்கிற பெயர்களில் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை தயாரித்து வருகிறோம். இதற்கான ட்ரேட் மார்க் முறையாக 1993-ம் ஆண்டில் பதிவு செய்து உள்ளோம். இந்த ட்ரேட் மார்க் 2027-ம் ஆண்டு வரை அமலில் இருக்கிறது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்கிற பெயரை வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை எங்களின் ட்ரேட் மார்க் பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து உள்ளது. ஆகையால், ” கொரோனில் ” என்கிற பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பதஞ்சலி நிறுவனம், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை ” கொரோனில் ” பெயரைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால், இந்த தடையை நீக்க வேண்டும் எனக் கூறி பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தன.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி அளித்த உத்தரவில், ” ஏற்கெனவே ஒரு நிறுவனம் பதிவு செய்த ” கொரோனில் ” என்ற ட்ரேட் மார்க்கை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மீண்டும் உறுதி செய்கிறது.
செலவுகளைப் பொறுத்தவரையில், பிரதிவாதிகள் 10,000 கோடி மதிப்புள்ள நிறுவனம் எனக் கூறுகிறார்கள். இருப்பினும், கொரோனா வைரஸிற்கான சிகிச்சை என முன் வைத்து பொது மக்களிடையே இருக்கும் பயத்தையும், பீதியையும் வைத்து அதிக லாபத்தை நோக்கியே செல்கிறார்கள். உண்மையில், அவர்களின் ” கொரோனில் மாத்திரை ” இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவற்றிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தே தவிர, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து அல்ல. இந்த முக்கியமான காலகட்டத்தில் கூட அங்கீகாரம் பெறாமல் மக்களுக்கு உதவி செய்யும் அமைப்புகள் உள்ளன என்பதை பிரதிவாதிகள் உணர வேண்டும், மேலும் அவர்களுக்கு செலவு செய்வது பொருத்தமானதாக இருக்கும். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சமும், அரும்பாக்கம் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.5 லட்சமும் செலுத்த வேண்டும். இந்த 21.08.2020-க்கு முன்பாக செலுத்த வேண்டும் ” எனக் கூறப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் நிலவும் காலகட்டத்தில் அனுமதி இல்லாத மருந்துகளை கொரோனாவிற்கு தீர்வு என அதிக லாபம் பார்க்க ” கொரோனில் ” மருந்தை வெளியிட்டது பதஞ்சலி நிறுவனம். அது சர்ச்சையாக உருவெடுத்தது. தற்போது அந்நிறுவனத்திற்கு ” கொரோனில் ” வர்த்தக பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டதோடு, ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Links :
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.