பதஞ்சலி நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.. தொடரும் போலி வாக்குறுதி விளம்பரங்கள் !

தவறான தகவல்களுடன் விளம்பரம் செய்தால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

பதஞ்சலி என்கிற நிறுவனத்தின் பெயரில் பாபா ராம்தேவ் ஆயுர்வேத மருந்துகளையும், சோப்பு, பேஸ்ட் போன்ற அன்றாட உபயோகப் பொருள்களையும் விற்பனை செய்து வருகிறார். அந்நிறுவனத்தின் சில மருந்துகள் தீர்க்க முடியாத நோய்களைக் குணப்படுத்துவதாக விளம்பரம் செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு நேரங்களில் அலோபதி மருத்துவம் (நவீன மருத்துவம்) குறித்து தவறாகவும் அவதூறாகவும் ராம்தேவ் கருத்து கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில் பதஞ்சலி விளம்பரம் குறித்தும் பாபா ராம்தேவின் கருத்துக்கள் குறித்தும் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதி அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு ‘பதஞ்சலி நிறுவனத்தின் தவறான தகவல்கள் அடங்கிய அனைத்து விளம்பரங்களும் நிறுத்தப்பட வேண்டும். அத்தகைய விளம்பரங்கள் நீடித்தால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு தயாரிப்பு பொருட்களுக்கும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தவறான தகவல்களுடன் வெளியாகும் விளம்பரம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்க மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய அரசின்  வழக்கறிஞரிடம்  நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

நீதிபதியின் கருத்துக்கு விளக்கமளித்து பாபா ராம்தேவ் பேசுகையில், ‘நாங்கள் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், நாங்கள் எந்த பொய் பிரச்சாரமும் செய்யவில்லை. நாங்கள் பொய் கூறுகிறோம் என்றால் எங்களுக்கு ரூ.1000 கோடி அபராதம் விதியுங்கள். நாங்கள் மரண தண்டனைக்குக் கூட தயாராக உள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு மருந்து கண்டறிந்ததாகப் பொய் : 

பாபா ராம்தேவ் மீதும் பதஞ்சலி நிறுவனத்தின் மீதும் சர்ச்சைகளும் நீதிமன்ற கண்டனங்களும் எழுவது இது முதல்முறை அல்ல. 2020ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பெருந்தொற்றினால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்த நிலையில் ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு பொருட்களைப் பதஞ்சலி வெளியிட்டு கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என அறிவித்தது.

அம்மருந்தினைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள், கிளினிக்கல் சோதனை தொடர்பான விவரங்கள் ஒன்றிய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் பதஞ்சலி நிறுவனத்திடம் கோரியது. 

இதையடுத்து, உத்தரகாண்ட் மாநில மருத்துவ உரிமம் ஆணையத்தின் இணை இயக்குனர் ஒய்.எஸ்.ராவத், “கோவிட் மருந்தை உருவாக்க நாங்கள் அவர்களுக்கு எந்த உரிமத்தையும் வழங்கவில்லை. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கிட்களுக்கான உரிமத்திற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களிடம் இருந்து எங்களுக்குத் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்றால் அவர்களின் உரிமம் விரைவில் ரத்து செய்யப்படும்” எனக் கூறினார்.

தங்களது மருந்தினை NIMS என்னும் தனியார் பல்கலைக்கழகத்தின் உதவியோடு  280 நோயாளிகளுக்குக் கொடுத்ததில் 100 சதவீதம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்கள் எனப் பாபா ராம்தேவ் கூறினார். ஆனால், ஜெய்ப்பூரிலுள்ள NIMS பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்.கணபத் தேவ்புரா அப்படி ஆய்வு சோதனைகள் எதுவும் தங்கள் பல்கலைக்கழகத்தில் செய்யப்படவில்லை எனக் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

ரூ.10 லட்சம் அபராதம் : 

மருந்து எனக் கூறப்படும் பொருளில் மட்டுமின்றி ‘கொரோனில்’ என்னும் பெயரிலும் சர்ச்சை எழுந்து, பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆரூத்ரா இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், ‘கொரோனில்’ என்ற வர்த்தக பெயரைப் பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

அதில், “‘கொரோனில் 92பி’ மற்றும் ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்கிற பெயர்களில் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களைச் சுத்தப்படுத்தும் ரசாயனக் கலவையை நாங்கள் தயாரித்து வருகிறோம். இதற்கான ட்ரேட் மார்க் முறையாக 1993ம் ஆண்டு பதிவு செய்து உள்ளோம். இந்த ட்ரேட் மார்க் 2027ம் ஆண்டு வரை அமலில் உள்ளது. இதற்கிடையில், கொரோனா வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்து உள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்கிற பெயரை வைக்கப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் அறிவித்துள்ளது. எங்களின் ட்ரேட் மார்க் பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து உள்ளது. எனவே அப்பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பதஞ்சலி நிறுவனம் அப்பெயரைப் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக்கோரி பதஞ்சலி நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. முன்னர் பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என்று கூறியதுடன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சமும், அரும்பாக்கம் அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.5 லட்சமும் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி கூறி அபராதம் விதித்தார். 

அலோபதி குறித்து சர்ச்சை கருத்து : 

2021ம் ஆண்டு பாபா ராம்தேவ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் ‘அலோபதி ஒரு முட்டாள்தனமான அறிவியல்’ எனக் கூறியது அலோபதி மருத்துவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியது. ராம்தேவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவ கழகம் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்று ராம்தேவ் முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் நவீன (அலோபதி) மருத்துவ கட்டமைப்புகளைக் கலைத்துவிடுங்கள் அல்லது அவரை தேசிய தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்” என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் கோரிக்கை வைத்தனர்.  

மேலும் அவர்களது அறிக்கையில், “கடந்த காலங்களிலும், அவர் தனது ‘அதிசய மருந்துகளை’ (கிண்டலாக) வெளியிடும் போது மாண்புமிகு சுகாதார அமைச்சரின் முன்னிலையிலேயே நவீன மருத்துவ மருத்துவர்களை ‘கொலைகாரர்கள்’ என்று கூறியுள்ளார். இருப்பினும், அவரும் அவரது கூட்டாளியான பால்கிருஷ்ணாவும் நோய்வாய்ப்பட்டபோது நவீன மருத்துவச் சிகிச்சையை எடுத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மையே” எனக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. 

பின்னர், இது பற்றி பதஞ்சலி அமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘இந்த நிகழ்வு ஒரு தனியார் நிகழ்வு என்பதையும், சுவாமி ஜீ (ராம்தேவ்) அவருக்கு பல உறுப்பினர்களிடமிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ் அப் செய்தியைத் தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும். அலோபதி ஒரு முற்போக்கான அறிவியல் என்றும்; அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகியவை ஒரு கூட்டு பலனை அளிக்கும் என்றும் அவர் நம்புகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இரவு பகலாக உழைத்து வரும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கும் அவர் பெரும்மதிப்பு அளிக்கிறார்’ எனக் கூறப்பட்டது.

பதஞ்சலிக்கு நன்கொடையும், வரி விலக்கும் : 

அலோபதி மருத்துவம் குறித்தும் மருத்துவர்கள் குறித்தும் தொடர்ந்து தவறாகப் பிரச்சாரங்களை முன்வைத்து வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரி விலக்கு அளித்து இந்திய வருவாய்த் துறை 2021, ஜூலை மாதம் அறிவித்தது. 

வருமான வரிச் சட்டம் பிரிவு 35ல் “ஒரு ஆராய்ச்சி சங்கத்திற்குச் செலுத்தப்படும் எந்த ஒரு தொகையும் விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்வது அல்லது ஒரு பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனங்கள் அதனை அறிவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகிறது என்றால், அந்த தொகைக்கு ஒன்றரை மடங்குக்குச் சமமான தொகையின் செலவைக் குறைக்க அனுமதிக்கிறது”. அத்தகைய ஆராய்ச்சி சார்ந்த அமைப்புகளுக்கு நன்கொடை செலுத்துவோர் வருமான வரி விதிகளின் கீழ் விலக்கு பெற அனுமதிக்கப்படுவர்.

இந்த வரி விலக்கு அளிக்கப்பட்டபோது இது குறித்து சிபிடிடியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் சுராபி அலுவாலியா “வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 35 (1) (ii)ன் கீழ் ஒரு நிறுவனம் விஞ்ஞான ஆராய்ச்சியில் உண்மையானது என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விலக்கு அளிக்க ஒப்புதல் அறிவிக்கப்படும். வழக்கமாக இது ஒரு நீண்ட செயல்முறையாகும். அத்தகைய ஒப்புதலை வழங்குவதற்கு முன் வருமான வரித்துறை சட்டப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதற்காக உரிய முயற்சிகளை மேற்கொண்ட பிறகே ஒப்புதல் அளிக்கப்படும்” என்றார்.

இத்தகைய குற்றச்சாட்டுகள் பாபா ராம்தேவ் மீதும் அவரது பதஞ்சலி நிறுவனம் மீதும் இருக்கின்ற போதும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பாஜக தலைவர்களும் அவருடன் நெருக்கமாகப் பழகிக்கொண்டுதான் உள்ளனர்.

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாக மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முயன்றது, நவீன மருத்துவர்களையும் மருத்துவத்தையும் தவறாகப் பேசுவது என்றிருந்த வரிசையில், தற்போது தங்களின் பொருட்கள் குறித்து பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதும் இணைந்துள்ளது. மக்களாகிய நாம்தான் இவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும். 

ஆதாரங்கள் :

Supreme Court tells Baba Ramdev it will impose ₹1 crore costs per false claim in Patanjali Ayurved ads

‘Give death penalty if we…’: Yoga guru Ramdev on Supreme Court warning Patanjali

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader