பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்தின் நன்கொடைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை !

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கான வரி விலக்கினை ஐந்து ஆண்டுகள் நீட்டித்து உள்ளது வருமான வரித்துறை. 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனம் உணவு பொருட்கள், சத்து மாத்திரைகள், எண்ணெய்கள் தயாரிப்பு என பல களங்களில் தன் விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிறுவனமானது, ‘நவீன அறிவியல் முறைகளை ஆய்வுக்கு பயன்படுத்தி யோகா, ஆயுர்வேதம் போன்ற உள்நாட்டு மருத்துவத்தை ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நோக்கதோடு செயல்படுவதாக” அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010ல் பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரி விலக்கு அளித்துள்ளது இந்திய வருவாய் துறை. இதன்படி அறக்கட்டளையின் பங்களிப்பாளர்கள் 2021-22 நிதியாண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்கு (2027-2028) வரி விலக்குகளை கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் செய்தி வெளியீடு :
ஜூலை 12 ம் தேதி Central Board of Direct Taxes (CBDT) அறிவிப்பு, “ஹரித்வாரின் பதஞ்சலி ஆராய்ச்சி அறக்கட்டளையை அறிவியல் ஆராய்ச்சிக்கான “ஆராய்ச்சி சங்கம் ”என்ற பிரிவின் கீழ் சேர்க்க இந்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது, இதன்படி , அறிவியல் ஆராய்ச்சிக்கான வருமான வரிச் சட்டம், 1961ன் பிரிவு 35ன் துணைப்பிரிவு (i)-ன் உட்பிரிவுகள் (ii) வருமான வரி விதிகள், 1962-ன் 5 சி மற்றும் 5 டி விதிகளுடன் இணங்குகிறது.
விலக்கு விதிகளின் விளக்கம் :
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 35 செலவினங்களைக் குறைக்க அனுமதிக்கிறது “ஒரு ஆராய்ச்சி சங்கத்திற்கு செலுத்தப்படும் எந்த ஒரு தொகையும் இது விஞ்ஞான ஆராய்ச்சியை மேற்கொள்வது அல்லது ஒரு பல்கலைக்கழகம், கல்லூரி அல்லது பிற நிறுவனங்கள் அதனை அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது” என்றால் அந்த தொகைக்கு ஒன்றரை மடங்குக்கு சமமான தொகையின் செலவை குறைக்க அனுமதிக்கிறது. எனவே வரி செலுத்துவோர் வருமான வரி விதிகளின் கீழ் விலக்கு பெற அனுமதிக்கப்படுவர்.
இந்த வரி விலக்கு குறித்து சிபிடிடியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் சுராபி அலுவாலியா “வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 35 (1) (ii)ன் கீழ் ஒரு நிறுவனம் விஞ்ஞான ஆராய்ச்சியில் உண்மையானது என்று கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விலக்கு அளிக்க ஒப்புதல் அறிவிக்கப்படும். வழக்கமாக, இது ஒரு நீண்ட செயல்முறையாகும், அத்தகைய ஒப்புதலை வழங்குவதற்கு முன் வருமான வரித்துறை சட்டபூர்வமாக இருக்கவேண்டும் என்பதற்காக உரிய முயற்சிகளை மேற்கொண்ட பிறகே ஒப்புதல் அளிக்கப்படும்.” என்றார்.
சில மாதங்களுக்கு முன்னர் பாபா ராம்தேவ் WHO ஆல் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா மருந்து என தன் நிறுவன தயாரிப்பினை ஒன்றை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளனார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதஞ்சலி நிறுவனத்திற்கான இந்த வரிவிலக்கு சாதக நோக்கோடு உள்ளது என்றும், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நன்கொடைக்கு வரி விலக்கு அளித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Links :
tax-exemption-on-funding-for-research-bypatanjali-unit
contribution-to-patanjali-research-foundation-to-get-tax-exemption
https://incometaxindia.gov.in/Communications/Notification/Notification_79_2021.pdf