மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை, தலித் மக்கள் நுழைந்ததால் வேண்டாம் : கோயில் அரசியல்

ழனி முருகன் கோயில் உள்ளே வர இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்கிற அறிவிப்புப் பலகையை மீண்டும் வைக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை தற்போது தொடங்கியது அல்ல. 2023, ஜூன் மாதமே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. 

சாகுல் என்பவர் தனது வீட்டுக்கு வந்த நண்பரின் குடும்பத்தினரைக் கடந்த ஜூன் மாதம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்ல மலை அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். 

அப்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்று மதத்தினர் கோயிலுக்குள்ளே செல்ல அனுமதி இல்லை எனக் கூறியுள்ளனர். சுற்றுலாத் தலம்தானே, ஏன் அனுமதிக்கவில்லை,’ என சாகுல் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘இது சுற்றுலாத் தலம் அல்ல, வழிபாட்டுத் தலம்’ என்று கூறியுள்ளனர். மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என அறிவிப்புப் பலகை வைத்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோமென அதிகாரிகளிடம் சாகுல் கூறியுள்ளார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் (VHP) அமைப்பைச் சேர்ந்த அடிவாரம் செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதிடுகையில், ‘Temple Entry Authorization Act, 1947ல் இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலுக்குள் நுழைவதற்குத் தடைவிதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. எனவே பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

இதனை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோயிலில் நுழையத் தடை என்ற பதாகை ஏன் அகற்றப்பட்டது’ எனக் கேள்வி எழுப்பியதோடு, பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்த சர்ச்சை தொடங்கியபோது செய்தியாளர்களைச் சந்தித்த (ஜூன் 25) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘இந்துக்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று இல்லை. இந்து கோவில்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு வழிபட வருவதற்குச் சம்மதம் தெரிவித்தால், எந்த மதத்தினராக இருந்தாலும் கோவிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். அதற்குத் தடை ஏதுமில்லை. ஒரு சில மத அடையாளங்களோடு வரும்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுகின்றன. அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதால், இப்படிப் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை. திராவிட மாடலை பொறுத்தவரை, அனைவரும் ஒன்றிணைந்து, சகோதரர்களைப் போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு’ எனக் கூறினார்.  

தீர்ப்பு : 

இந்நிலையில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை மாற்று மதத்தினர் பழனி கோயிலுக்குள்ளே வருவது தொடர்பான தீர்ப்பினை வெளியிட்டுள்ளது. அதில், ‘கோயில் நுழைவு போராட்டத்தையொட்டி அனைத்து இந்துக்களும் கோயிலினுள் செல்ல ஏதுவாக கொண்டுவரப்பட்டதுதான் ‘Temple Entry Authorization Act, 1947’. ஆனால், தற்போதைய பிரச்சனை இந்து அல்லாத மாற்று மதத்தினரைப் பற்றியது’ எனக் கூறப்பட்டுள்ளது. 

எனவே ‘அனைத்து இந்து கோயில்களிலும் கொடிமரத்திற்குப் பிறகு இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை’ என்கிற அறிவிப்புப் பலகையைக் கோயில் நுழைவுவாயில் மற்றும் கோயில் முக்கிய பகுதிகளில் வைக்க வேண்டுமென நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.  

மேலும் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்கு வருகிறார்கள் எனில் அவர்களிடம் குறிப்பிட்ட தெய்வத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இந்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதாகவும் உறுதிமொழியை ஒரு பதிவேட்டில் பெற்று உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவின் படி பார்த்தால் மாற்று மதத்தினரும் இந்து மதக் கடவுள்களின் மீது நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் உறுதிமொழி அளித்துவிட்டு கோயிலினுள் செல்லலாம். ஆனால், நீண்ட காலமாகவே மாற்று மதத்தினர் தர்காக்களுக்குச் சென்று மந்திரித்துக் கொள்வது, வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் செல்வது, நாகூர் தர்காக்கு செல்வது என மத நல்லிணக்கத்துடன் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். இத்தகைய தீர்ப்பு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தலித் மக்கள் நுழைந்த கோயில் எங்களுக்கு வேண்டாம் :  

மாற்று மதத்தினர் இந்து கோயிலுக்குள் வருவது தொடர்பான பிரச்சனை ஒருபக்கம் இருக்க, சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே சாதியின் பெயரால் கோயிலுக்குள் அனுமதிக்காத சம்பவமும் தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான முத்து மாரியம்மன் கோயிலுக்குள் கடந்த 80 ஆண்டுகளாகப் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அக்கோயிலில் தங்களையும் அனுமதிக்க வேண்டுமெனப் 2023, ஜனவரி மாதம் திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பட்டியலின மக்கள் மனு அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் காவல் துறை பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் முத்து மாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். பட்டியலின மக்கள் கோயிலில் நுழைவதைத் தடுக்க கோயிலுக்குப் பூட்டுப் போட்டுச் சாதி இந்துக்கள் அராஜகத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இதையெல்லாம் மீறி சட்டப்படி பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்ததினால் சாதி இந்துக்கள் தங்களுக்கு இந்த கோயில் வேண்டாம் என முடிவு செய்து, தங்களுக்கென புதிய கோயிலைக் கட்டத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதம் அறக் கருத்துக்களைப் போதிப்பதாகச் சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், மாற்று மதத்தினரை வெறுப்பதும் சொந்த மதத்திலேயே சாதியைக் காரணம் காட்டி ஒதுக்குவதும் இன்னும் நடந்த வண்ணம்தான் உள்ளது. இனிவரும் தலைமுறையினரிடமாவது சாதி மதம் கடந்து மனிதத்தை வளர்ப்போம். 

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader